தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தடம் பதித்த இசையமைப்பாளராகவும், இன்றைய தலைமுறை திரை இசை ரசிகர்களிடையே மிகப் பரவலான செல்வாக்கையும் நன்மதிப்பையும் பெற்றிருப்பவருமான அனிருத் ரவிச்சந்தர் இன்று (அக்டோபர் 16) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
கே.சுப்பிரமணியம், பத்மா சுப்ரமணியம் எனத் திரைத் துறையிலும் கலைத் துறையிலும் கோலோச்சிய புகழ்மிகு கலைஞர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் அனிருத். நடிகரும் அனிருத்தின் தந்தையுமான ரவி ராகவேந்தர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மச்சான். ஆனாலும், அனிருத்தின் திரை வருகை அவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. அவருடைய வெற்றியும் இன்று அவர் அடைந்திருக்கும் உச்ச நிலையும் தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டவை அல்ல.
மிக இளம் வயதிலேயே இசைப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்ட அனிருத் பள்ளி, கல்லூரியில் இசைக் குழுக்களில் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர். புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ இசை கற்று தேர்ச்சி பெற்றார். ஒலிப்பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கர்னாடக இசையையும் முறைப்படி பயின்றுள்ளார்.
கல்லூரியில் படிக்கும்போது சில குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார் அனிருத். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகும் கனவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் ஸ்டுடியோக்களுக்குச் சென்று தன் இசைத் திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பு கேட்டிருக்கிறார். அனிருத்தின் அத்தை மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' திரைப்படத்தின் மூலம் அனிருத்தின் திரைப்பட இசைப் பயணம் தொடங்கியது. முதலில் உறவினர்கள் வாய்ப்புகளைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வாகவே இது பார்க்கப்பட்டது. ஆனால் 2011 இறுதியில் '3' படத்தின் பாடல்கள் வெளியானபோது அந்தப் பார்வை முற்றிலும் நீங்கியது. அனிருத்தின் அபாரமான இசைத் திறமையை கோலிவுட் வியந்து நோக்கியது.
அப்போது பரவலாகிவந்த சிங்கிள் டிராக் –அதாவது படத்தின் இசைத் தட்டிலிருந்து ஒரே ஒரு பாடல் மட்டும் தனியாக வெளியிடும் போக்கு '3' படத்தின் 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் இன்றுவரை தவிர்க்க முடியாத அம்சமாக நிலைபெற்றது. நடிகர் தனுஷ் பாடல் வரிகளை எழுதிப் பாடவும் செய்த அந்தப் பாடல் சர்வதேச அளவில் வெற்றி பெற்றது படக்குழுவினருக்கே இன்ப அதிர்ச்சிதான். ஆனால், அது ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புதம் அல்ல என்பதை '3' படத்தின் மற்ற பாடல்களின் பிரம்மாண்ட வெற்றி உறுதி செய்தது. அந்தப் படத்திலும் தொடர்ந்து வந்த மற்ற படங்களிலும் மெலடி, மேற்கத்திய இசையமைப்பு, ஃபாஸ்ட் பீட் பாடல், குத்துப் பாடல் என அனைத்தும் தனக்குக் கைவந்த கலை என்று நிரூபித்தார் அனிருத்.
'3' படத்தில் தொடங்கிய வெற்றிப் பயணம் பத்தாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கையில் அனிருத்தின் வீச்சும் உயரமும் மேன்மேலும் அதிகரித்திருக்கின்றன. இந்தப் பத்தாண்டுகளில் அவர் தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, ரஜினிகாந்த், எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு மறக்க முடியாத வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்.
'வேலையில்லா பட்டதாரி', 'கத்தி' ஆகிய படங்களின் மூலம் தனுஷ், விஜய், ஆகியோருக்கு அவர்கள் நாயக பிம்பத்தைக் கச்சிதமாக உணர்ந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் தீம் இசையயை வழங்கினார். 'செல்ஃபி புள்ள' எனும் துள்ளலான இசை அமைப்பைக் கொண்ட பாடலின் மூலம் பாடகராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ள விஜய்யின் ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாத பாடல் ஒன்றை அளித்தார். 'வேதாளம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' ரசிகர்கள் அனைவரையும் திரையரங்கில் குத்தாட்டம் போட்டுக் கொண்டாட வைத்த, அஜித்தின் திரை வாழ்வில் முக்கியமான வெற்றிப் பாடலாக அமைந்தது. தன்னை 'தல' ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்ளும் அனிருத் இந்தப் பாடலைப் பாடவும் செய்திருந்தார் என்பது இனிமையான சுவாரசியம்.
தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர் ஷங்கருடன் 'இந்தியன்-2' படத்தில் பணியாற்றிவருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன் போன்ற ரசிகர்களின் பெரும் மதிப்பைப் பெற்ற இயக்குநர்களுடனும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட வெற்றிகரமான இளம் தலைமுறை இயக்குநர்களுடனும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் விரும்பும் இசையமைப்பாளராகத் திகழ்கிறார் அனிருத்.
நட்சத்திர மதிப்பைப் பெறாத இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோருக்கும் தன் இசையின் மூலம் முக்கியமான வெற்றிகளையும் பரவலான கவனத்தையும் ஈர்க்கத் துணைபுரிந்திருக்கிறார் அனிருத். கிருத்திகா உதயநிதியின் 'வணக்கம் சென்னை', துரை செந்தில்குமாரின் 'எதிர்நீச்சல்', விக்னேஷ் சிவனின் 'நானும் ரவுடிதான்', 'பாக்கியராஜ் கண்ணனின் 'ரெமோ' ஆகிய படங்களில் பணியாற்றியவர்கள் நட்சத்திர ஏணியில் பல படிகள் முன்னேறியதற்கு அந்தப் படங்களில் அனிருத் இசையமைத்த பாடல்களின் பிரம்மாண்ட வெற்றி முக்கியமான காரணம் என்பதை மறுத்துவிட முடியாது. குறிப்பாக 'எதிர்நீச்சல்', 'மான் கராத்தே' 'ரெமோ', 'டாக்டர்' என இன்றைய முதல்நிலை நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயனின் வெற்றிப் பயணத்தில் அனிருத்துக்குத் தவிர்க்க முடியாத பங்கு உள்ளது. இந்த அனைத்துப் படங்களிலும் பாடல்களிலும் பாடல்களும் தீம் இசையும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. ஒவ்வொரு படத்திலும் பாடகராகவும் மெருகேறிக் கொண்டிருக்கிறார். 'எதிர்நீச்சலடி' தொடங்கி அண்மையில் வெளியான 'செல்லம்மா' அனிருத் பாடிய வெற்றிப் பாடல்களின் பட்டியல் மிக நீளமானது.
தொடர்ச்சியாகப் பாடல்களும் தீம் இசைத் துணுக்குகளும் வெற்றி பெறுவது மட்டுமே அனிருத்துக்கு இந்த உச்ச நிலையைப் பெற்றுக் கொடுத்துவிடவில்லை, உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்திய மோகத்தால் ஆட்கொள்ளப்பட்ட யுகத்தில் பிறந்தவரான அனிருத், ராப் உள்ளிட்ட மேற்கத்திய இசை வடிவங்களில் மட்டுமல்லாமல் கானா, கர்னாடக இசை எனப் பல வகையான இசை வடிவங்களிலும் அபாரமான திறமையைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார். அவருடைய வெற்றிப் பாடல்களை ஒற்றைச் சட்டகத்துக்குள் அடக்கிவிட முடியாது. சூழலுக்கு ஏற்ற சிறப்பான பின்னணி இசையைத் தருவதிலும் அவருக்குச் சிறந்த ஆளுமை உள்ளது. அதனால்தான் இயக்குநர்கள் பலர் அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறார்கள்.
அண்மையில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் 'டாக்டர்' படம் அனிருத்தின் ஒட்டுமொத்த இசைத் திறனுக்கு மிகச் சிறந்த உதாரணம். சிங்கிள் ட்ராக்காக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்ட 'செல்லம்மா' பாடல் படத்தின் இறுதியில்தான் வருகிறது. மற்றபடி பின்னணி இசைதான் கதையை நகர்த்திச் செல்கிறது. டார்க் ஹ்யூமர் வகைமையைச் சேர்ந்த அந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமான எங்கும் துருத்தித் தெரியாத பின்னணி இசையை அமைத்திருந்தார் அனிருத். படத்தின் உச்ச காட்சியில் வரும் கர்னாடக இசை அடிப்படையிலான 'Soul of Doctor' என்னும் தீம் இசை பின்னணி இசையாக ஒலிக்கும்போது அது காட்சியின் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவத்தைப் பல மடங்கு உயர்த்திப் பார்வையாளர்களை வசீகரித்தது.
மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள இந்த தீம் இசை கடந்த ஒரு வாரமாக விளையாட்டு, உணவு, உள்ளிட்ட பல வகையான காணொலிகளுக்குப் பின்னணி இசையாகச் சேர்க்கப்பட்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும் இன்ஸ்டா ரீல்களிலும் வெளியிடப்படுவது ட்ரெண்டாக உள்ளது. நேற்று நிறைவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இன்ஸ்டா, வாட்ஸ் அப் காணொலிகளில்கூட 'சோல் ஆஃப் டாக்டர்' தீம் இசையே ஆதிக்கம் செலுத்தியது.
அனிருத்தின் இசை இன்றைய இளம் தலைமுறையினரை எவ்வளவு வேகமாகவும் தீவிரமாகவும் பற்றிக்கொள்கிறது என்பதற்கு தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ட்ரெண்டே கண்கூடான உதாரணம். இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அவர் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் படங்கள் அவர் மேலும் பல உயரங்களை எட்டிப்பிடிப்பார் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன. விஜய் நடிக்கும் 'பீஸ்ட்', சிவகார்த்திகேயனின் 'டான்', கமல் நடித்துவரும் 'விக்ரம்', 'இந்தியன் 2', தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' என அனிருத் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் படங்கள் இசை ரசிகர்களுக்கும் அந்தந்தத் திரைப்படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் ரசிகர் படைகளுக்கும் பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் சுவையான விருந்துகளைப் படைக்கக் காத்திருக்கின்றன.
திரை இசைத் துறையில் மிக இளம் வயதில் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் அனிருத் வரும் ஆண்டுகளில் மேலும் பல வெற்றிகளையும் விருதுகளையும் தேசிய, சர்வதேச அளவிலான அங்கீகாரங்களையும் பெறுவார் என்று உறுதியாக நம்பலாம்
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago