கோச்சடையான் பார்க்க வருவோரிடம் கேளிக்கை வரி வசூல்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்தையா, நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர் பான 2011-ம் ஆண்டின் தமிழக அரசு அரசாணையை எதிர்த்து நான் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த அரசாணையை செயல்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எனினும் தற்போது ‘கோச்சடையான்’ படத்துக்கு அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது. இதனை எதிர்த்து நான் மனு தாக்கல் செய்தேன்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு, ‘கோச்சடையான்’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அந்தப் படத்தைக் காண வரும் பொதுமக்களிடம் திரையரங்குகளில் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

எனினும் சென்னை தேவி தியேட்டர் உள்ளிட்ட ஒரு சில திரையரங்குகள் தவிர மற்ற அனைத்து திரையரங்குகளிலும் ‘கோச்சடையான்’ படத்தைப் பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரியையும் சேர்த்தே வசூலிக்கின்றனர். இதனைக் கண்காணித்து தடுக்க வணிக வரித் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறிய சம்பந்தப்பட்ட வணிக வரித் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முத்தையா தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE