சசி இயக்கத்தில் வெளியாகும் ஆறாவது தமிழ்ப் படம், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் நான்காவது படம்படத்தின் ட்ரெய்லர் தந்த எதிர்பார்ப்பு ஆகிய இந்தக் காரணங்களே 'பிச்சைக்காரன்' படத்தை பார்க்கத் தூண்டின.
சசியின் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதால் இந்த கூட்டணி எப்படி இருக்கும்? என்ற யோசனையுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
கதை: அம்மாவுக்காக தன் சுயத்தை மறைத்து 48 நாட்கள் வித்தியாசமான வேண்டுதலில் ஈடுபடுகிறார் விஜய் ஆண்டனி. ஆனால், அப்போது சிக்கல்கள்,தொந்தரவுகள், துன்பங்கள், தடைகளை சந்திக்கிறார். அவற்றை எப்படி தகர்க்கிறார்? வேண்டுதல் நிறைவேறியதா? அம்மா என்ன ஆனார்? என்பது மீதிக் கதை.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், உண்மைக் கதையை படமாக்கிய விதத்தில் இயக்குநர் சசி கவனம் ஈர்க்கிறார்.
வழக்கம்போல விஜய் ஆண்டனி என்ற ஒற்றை நபரை நோக்கியே கதை நகர்கிறது. கதையின் முதல் புள்ளியாக, மையப் புள்ளியாக, ஏன் கடைசிப் புள்ளியாக கூட விஜய் ஆண்டனியேதான் இருக்கிறார்.
சசி என்பதாலோ என்னவோ விஜய் ஆண்டனி தேர்ந்தெடுக்கும் டெம்ப்ளேட் கதை இதில் கொஞ்சம் மாறுபடுகிறது. ஆனால், நடிப்பில் அந்த டெம்ப்ளேட்டை விஜய் ஆண்டனி பிடிவாதமாக பின்பற்றுவதுதான படத்தின் அழுத்தத்தை குறைக்கிறது.
அழுகையிலும், இழப்பிலும் விஜய் ஆண்டனி அதிகம் நடிக்காவிட்டாலும், முறைப்பாக வில்லன்களை எதிர்கொள்ளும்போது பாஸ்மார்க் வாங்குகிறார். ஆனால், அதே முறைப்புடன் தோள்களை நிமிர்த்தி மிடுக்குடன் படம் முழுக்க வலம் வருவது ஏன்? இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு விஜய் ஆண்டனி உடல் மொழியிலும், முக பாவனைகளிலும் கவனம் செலுத்தலாமே...
சான்டா டைட்டஸுக்கு படத்தில் அதிக வேலை இல்லையென்றாலும், கதாநாயகிக்குரிய பங்களிப்பை நிறைவாக வழங்கி இருக்கிறார். முத்துராமன், தீபா ராமானுஜம், பக்ஸ் என்ற பகவதிபாபு ஆகியோர் பொருத்தமான தேர்வு.
பிரசன்ன குமாரின் கேமரா பிச்சைக்காரர்களின் எளிய உலகை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. வீரசெந்தில் ராஜு இன்னும் சில இடங்களில் கறாராக கத்தரி போட்டிருக்கலாம்.
விஜய் ஆண்டனியின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பிச்சைக்காரன் தீம் இசையும், நூறு சாமிகள் பாடலும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் விடுகதையா இந்த வாழ்க்கை பாடலை அப்படியே உல்டா செய்தது ஏன்? என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
பேப்பர் போடுறவன் பேப்பர்காரன். பால் போடுறவன் பால்காரன். அப்போ பிச்சைபோடுறவன் தானே பிச்சைக்காரன் என்று ஃபார்வட் செய்யப்பட்ட மெசேஜை வசனமாக வைத்திருக்கிறார் சசி. என்ன சார் ஆச்சு உங்களுக்கு?
''எல்லோருக்கும் நிரந்தர எதிரி பசி. அதைக் கொஞ்சம் நேரம் நண்பன் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன்.''
''அவங்கபோடுற ஒரு ரூபாய்க்காக நமக்கு ரெண்டு கண்ணும் இருக்கக்கூடாதுன்னு நினைப்பாங்க.''
''பிச்சைக்காக ஏந்துற கை, அடிக்க ஓங்காது.''
''பிச்சைக்காரனா இருந்ததுக்காக வருத்தப்படலை. ஆனா, பணக்காரனா இருக்குறது அருவருப்பா இருக்கு''
''அவங்க கோயிலுக்குள்ள பிச்சை எடுக்கிறாங்க. நாம கோயிலுக்கு வெளியே பிச்சை எடுக்கிறோம்'' போன்ற வசனங்கள் கூடுதல் பலம் அளிக்கின்றன.
பிச்சைக்காரர்கள் வாழ்வை காட்சிப்படுத்தும்போது, அவர்கள் மேல் பரிதாபத்தை வரவழைக்காமல் நகைச்சுவையை தெளிக்க விட்டதில் சசியின் மனித நேயமும், புத்திசாலித்தனமும் தெரிகிறது.
ஆனால், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி சூழலை நெருக்கடி மிகுந்ததாக மாற்றி இருந்தால் படத்தின் தன்மை மாறியிருக்கும். ஆனால், பிளாஷ்பேக் என்ற பெயரில் மான்டேஜ் ஷாட்களை திரும்பத் திரும்பப் பயன்படுத்தி நம்மை டேமேஜ் செய்து பேண்டேஜ் போட வைக்கிறார் சசி. அதை மட்டும் கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம்.
பொதுவாக சசியின் படங்களில் கதாபாத்திரங்கள் உயிரோட்டமான உணர்வை பிரதிபலிக்கும். கதாபாத்திரத்தின் மென்மை பார்வையாளர்களுக்கும் கடத்தப்படும். ஆனால், பிச்சைக்காரனில் அந்த பெஞ்ச்மார்க் மிஸ் ஆகிறது. நாயக பிம்பத்தைத் தவிர்த்து உடன் இருக்கும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஸ்கோர் செய்வதையும் குறிப்பிட வேண்டும்.
பக்ஸ் எப்படி விஜய் ஆண்டனி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார், சொன்ன நேரத்துக்கு எந்த இடம் என்று சொல்லாமலேயே எப்படி வருகிறார், அந்த சாமியாரின் பின்புலம் என்ன என்று கேள்விகளின் பட்டியல் நீள்கிறதே தவிர, அதற்குப் பதில் இல்லை.
இந்த குறைகளையெல்லாம் தாண்டி அலுக்காமல், போரடிக்காமல் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றாலோ, நல்ல கதைக்களம் இருந்தால் மட்டும் போதும் என்றாலோ, பொழுதுபோக்குப் படமாக பார்க்க விரும்பினாலோ நீங்கள் 'பிச்சைக்காரன்' படத்தை பிரியத்துடன் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago