முதல் பார்வை: சிவகுமாரின் சபதம் 

By க.நாகப்பன்

பணம் முக்கியமல்லை, மனித உறவுகள்தான் முக்கியம் என்பதைத் தாத்தாவின் வழியில் நிரூபிக்கும் பேரனின் கதையே 'சிவகுமாரின் சபதம்'.

காஞ்சிபுரத்தில் தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறார் சிவகுமார் (ஆதி). ஊரில் இருந்துகொண்டு கொஞ்சம் அடிதடி, சண்டை என்று அலப்பறை கூட்டுகிறார். இதனால் வருத்தப்படும் சிவகுமாரின் தந்தை (மனோஜ்), அவரது தம்பி முருகனிடம் (ஃபிராங்க் ஸ்டார் ராகுல்) சென்னைக்கு அழைத்துப் போகச் சொல்கிறார். சித்தப்பாவோ மாமனார் குடும்பத்துடன் ஐக்கியமாகி, அங்கு அடிமை போல் நடத்தப்படுகிறார். இது ஆதிக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், காதலி ஸ்ருதி (மாதுரி) அதே வீட்டில் இருப்பதால் அவரும் அங்கு தங்குகிறார். இருவருக்கிடையில் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகள், மோதல்கள் ஆரம்பித்துக் காதல் கைகூடுகிறது. இந்நிலையில் சித்தப்பா வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுகிறார்.

சித்தப்பாவை வீட்டை விட்டுத் துரத்துவது ஏன், அவர்களை ஒன்றிணைக்க ஆதி என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார், ஆதியின் காதல் கைகூடியதா, ஆதியின் தாத்தா வரதராஜனுக்கும், ஆதி சித்தப்பாவின் மாமனார் சந்திரசேகருக்கும் இடையிலான பிரச்சினை என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், தயாரிப்பு, நாயகன் என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. டி.ராஜேந்தருக்கு அடுத்து இவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்கும் ஆதியைப் பாராட்டலாம். ஆனால், கதை - திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளார்.

விவசாயத்தைப் பற்றி ஏராளமான படங்கள் வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பெருமை சேர்ப்பதில்லை. வியாபாரத்துக்கான கன்டென்ட் என்ற அளவுக்கு ஆளாளுக்கு பஞ்ச் வசனம், முழு நீள வசனம், அடுக்கடுக்கான பிரச்சினைகளின் பட்டியலில் ஒன்று என்று பயன்படுத்துகிறார்கள். சிலர் மட்டுமே பிரச்சினைகளையும், தீர்வுகளையும் வீரியம் குறையாமல் பதிவு செய்கிறார்கள். எல்லோரும் அந்தப் பக்கம் போகும்போது நாம் நெசவாளர்கள் பற்றிப் படம் எடுக்கலாம் என்று பட்டு நெசவு குறித்துப் பதிவு செய்துள்ளார் ஆதி. ஆனால், அது அறிமுகப் படலமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. நெசவுத் தொழில், நெசவாளர்கள் வாழ்க்கை குறித்த டீட்டெய்லிங் இல்லை.

நாயகனாக ஆதி வழக்கம் போல் உற்சாகத்துடன் வருகிறார். சம்பந்தமில்லாமல் பாட்டு பாடுகிறார். கெத்து காட்டுகிறார். பப்பில் இருக்கும் ரவுடிகளைப் புரட்டி எடுக்கிறார். நகைச்சுவைக் கலை கைவரப் பெற்றதால் ஆதித்யா கதிருடன் சேர்ந்து அதகளம் செய்கிறார். கிளப்புல மப்புல பாட்டு பாடிய அவர், அப்படி இருப்பது பெண்களின் சுதந்திரம் என்று காலம் கடந்து திருவாய் மலர்ந்து சொல்லியிருந்தாலும் வரவேற்கலாம். ஆனால், அதே சமயம் ஆதி இந்தப் படத்தில் ஸ்டாக்கிங் செய்வது அவர் வருந்தவில்லை, மாறவில்லை என்பதையும் காட்டுகிறது. பெண்கள் என்றாலே திமிர் பிடித்தவர்கள் என்ற தப்பான கருத்தியலையும் விதைக்கிறார். இதை அவர் திருத்திக்கொள்வது அவசியம்.

நாயகியாக மாதுரி. கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். 'ஆதித்யா' கதிர் சில இடங்களில் சிரிப்புப் பட்டாசைக் கொளுத்திப் போட்டு அப்ளாஸ் அள்ளுகிறார். ஆதியின் சித்தப்பா முருகன் கதாபாத்திரத்தில் ஃபிராங்க் ஸ்டார் ராகுல் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரக்கூடும். விஜே பார்வதி, கோபால், மனோஜ் ஆகியோரும் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். ஆதியின் தாத்தா வரதராஜனாக இளங்கோ குமணன் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவர் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.

வில்லனா, சந்தர்ப்ப சூழ்நிலையால் குணம் மாறிய நபரா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிரமமான கதாபாத்திரத்தில் எளிதாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய் கார்த்திக். சந்திரசேகர் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தியுள்ளார். வில்லத்தனத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் ரஞ்சனா நாச்சியார் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார்.

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்தின் கலர்ஃபுல்லுக்கு உத்தரவாதம் தருகிறது. எடிட்டர் தீபக் துவாரகநாத் நிறைய இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். ஆதியின் இசையில் அறிமுகப் பாடல், நேசமே பாடல் ஓகே ரகம். சில பாடல்களை மெட்டுக்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளைப் போட்டு நிரப்பியிருக்கிறார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் எடுக்க வேண்டிய படத்தை தேவையற்ற காட்சிகள், பாடல்கள், சண்டை என்று இழுத்து ரெண்டரை மணி நேரமாகத் தந்துள்ளார் ஆதி. ஒரே டெம்ப்ளேட்டிலிருந்து மாறி வேறு ஒரு களத்துக்குச் சென்ற விதம் ஆறுதல் அளித்தாலும், முதல் பாதி முழுக்க ஒன்றுமே இல்லாமல் ஒப்பேற்றிய விதம் ஏமாற்றத்தை அளிக்கிறது.

கதாபாத்திர வடிவமைப்பில் நிறைய சிக்கல்கள் எட்டிப்பார்க்கின்றன. யாரையும் இப்படித்தான் என்று ஜட்ஜ் செய்ய முடியாத அளவுக்குப் பாத்திர வார்ப்பு இருப்பது பலவீனம். குறிப்பாக சந்திரசேகர் கதாபாத்திரம். முருகன் கதாபாத்திரம் தன் அப்பாவிடம் குடித்துவிட்டு, வருத்தப்பட்டுப் பேசும் வசனம் முக்கியமானது. குழந்தைப் பருவத்தில் தொலைத்த, ஏங்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறார். ஆனால், அந்தக் காட்சியுடன் அந்த விவகாரம் கண்டுகொள்ளப்படவே இல்லை. திரைக்கதையில் இப்படி நிறைய போதாமைகள் உள்ளன. அந்தப் போதாமைகளை கடைசி அரை மணி நேரத்தில் சரிசெய்யப் போராடி, திரைக்கதைக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

ஜாலியான, பாசிட்டிவான ஒரு படம் போதும் என்றால், நீங்கள் சிவகுமாரின் சபதத்தை ரசிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்