எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாள்: 60ஸ் கிட்ஸையும் 2கே கிட்ஸையும் சமமாகக் கவர்ந்தவர் 

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும் எஸ்பிபி இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. அவர் இறந்துவிட்டாலும் இறவாப் புகழ்பெற்ற பல்லாயிரம் பாடல்களின் மூலம் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டே இருப்பார் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட சமூகத்துக்குப் பங்களித்தவர்கள் இறக்கும்போது அவர் மீது மரியாதை கொண்டவர்களால் உதிர்க்கப்படும் உணர்வும் உண்மையும் மிக்க வார்த்தைகள்தான் இவை. ஆனால், எஸ்பிபியைப் பொறுத்தவரை இந்த வார்த்தைகளுக்கு கூடுதல் அர்த்தமும் அதற்கு வலுவூட்டும் பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.

எஸ்பிபி இன்று உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை அவருடைய பாடல்களைக் கேட்காமல் ஒரு நாள்கூட கழிவதில்லை என்று சமூக ஊடகங்களில் 2k கிட்ஸ் இளைஞர்கள் பகிர்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் 90ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ், 70ஸ் கிட்ஸ் ஏன் சமூக ஊடகத்தில் இல்லவே இல்லாத 60ஸ் கிட்ஸ்க்கும்கூட இதே உணர்வுதான் இருக்கும். 1960களில் திரைப்படப் பாடல்களைப் பாடத் தொடங்கிய எஸ்பிபி 2020வரை எல்லா வயது இசை ரசிகர்களையும் சமமாக வசீகரித்தார். ஒட்டுமொத்தக் கலைத் துறையில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தன் திறமையை நீண்ட காலத்துக்கு தக்கவைப்பதோடல்லாமல் கால மாற்றத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டதாலும்தான் அவரால் 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை ரசிகர்களின் இதயத் துடிப்பாக நிலைத்துவிட முடிந்தது.

எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர்-கணேஷ், இளையராஜா என எஸ்பிபிக்கு முன்பும் அவருடன் சமகாலத்திலும் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள் மட்டுமல்ல. எஸ்பிபி தேசிய அளவில் புகழ்பெற்ற பாடகராகி பல ஆண்டுகளுக்குப் பின் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த இசையமைப்பாளர்களும் எஸ்பிபியுடன் பணியாற்ற விரும்பினார்கள். அவரைப் பாட வைத்தால் அந்தப் பாடல் வெற்றியடைவதற்கான சாத்தியம் அதிகம் என்று நம்பினார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானும் அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான தேவாவும் தாம் இசையமைத்த முதல் திரைப்படத்திலிருந்தே எஸ்பிபியைப் பயன்படுத்தினர். தேவாவின் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் ‘தண்ணி குடமெடுத்து’ என்னும் பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ரஹ்மான் இசையில் ‘ரோஜா’ படத்தில் எஸ்பிபி பாடிய ‘காதல் ரோஜாவே’ தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த காதல் பாடல்களில் ஒன்றாக நிலைத்துவிட்டது.

1997இல் ரஹ்மான் இசையில் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் எஸ்பிபி பாடிய ‘தங்கத் தாமரை மகளே’ பாடலுக்குத்தான் அவருக்கு தமிழில் முதல் தேசிய விருது கிடைத்தது (அதற்கு முன்பு மற்ற மொழிப் பாடல்களுக்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். மொத்தமாக ஆறு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் எஸ்பிபி). பாடத் தொடங்கி 30 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு மொழியில் புதிதாக தேசிய விருது வாங்கியிருப்பதிலிந்தே எஸ்பிபி எப்படித் தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொண்டும், தன்னுடைய தகுதியையும் திறமையையும் மேம்படுத்திக் கொண்டும் இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

80களில் இளையராஜாவைப் போல் 90களில் தேவாவும் ரஹ்மானும் எஸ்பிபியை ஒரே படத்தில் நிறைய பாடல்களைப் பாட வைத்தார்கள். ‘அண்ணாமலை’ படத்திலும் ‘டூயட்’ படத்திலும் தலா ஐந்து பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்பிபி. அனைத்துமே காலமாற்றத்தைக் கடந்து ரசிக்கப்படும் பாடல்களாக இருக்கின்றன. அதே காலகட்டத்தில் வித்யாசாகர், பரத்வாஜ், ஆதித்யன், செளந்தர்யன். சிற்பு, பரணி போன்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் பல மறக்க முடியாத பாடல்களைப் பாடினார் எஸ்பிபி. இளையராஜாவின் மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரின் முதல் படங்களிலும் எஸ்பிபி பாடினார். யுவன் அறிமுகமான ‘அரவிந்தன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஈரநிலா’ எஸ்பிபியின் குரலுக்காகவே தனி வசீகரம் பெற்றது. ’நந்தா’ திரைப்படத்தில் எஸ்பிபி குரலில் அமைந்த ‘முன்பனியா முதல் மழையா’ யுவனுக்குப் பெரிதும் கவனம் ஈர்த்துத் தந்த வெற்றிப் பாடலாக அமைந்தது.

புத்தாயிரத்துக்குப் பின் தலையெடுத்தவர்களான ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, டி.இமான், ஜேம்ஸ் வசந்தன், ஸ்ரீகாந்த் தேவா, அடுத்த பத்தாண்டுகளில் வந்தவர்களான அனிருத், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோரின் இசையமைப்பிலும் பாடல்களைப் பாடினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இமான் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் எஸ்பிபி. இதற்கு முந்தைய இரண்டு ரஜினி படங்களான ‘பேட்ட’, ‘தர்பார்’ இரண்டிலும் அனிருத் இசையில் ரஜினியின் அறிமுகப் பாடலைப் பாடும் பாரம்பிரியத்தைத் தொடர்ந்திருந்தார் எஸ்பிபி. இன்னும் பல பாடல்கள் அவர் மறைவுக்குப் பின் வெளியாகவிருக்கின்றன.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளிலும் தன்னுடைய முதல் 25 ஆண்டுகளைப் போலவே உலகமயமாக்கலுக்குப் பிந்தைய ஆண்டுகளிலும் எஸ்பிபியின் வெற்றிப் பயணம் தொய்வின்றித் தொடர்ந்தது.

பின்னணிப் பாடகராக மட்டுமல்லாமல் மற்ற வகைகளிலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தார் எஸ்பிபி. இந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகராகவும் ரசிகர்களைக் கவர்ந்தார். ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்து செல்லும் டாக்டரானாலும், ‘தலைவாசல்’, ‘காதலன்’, ’ப்ரியமானவளே’, ’உல்லாசம்’, ‘நந்தினி’ என நீளமான கனமான கதாபாத்திரமானாலும் எஸ்பிபி திரையில் தோன்றிய ஒவ்வொரு தருணமும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தன. கே.பாலசந்தரின் ‘ஜன்னல்’ உள்பட தொலைக்காட்சித் தொடர்களிலும் எஸ்பிபியின் நடிப்பு பரவலான ரசிகர்களை ஈர்த்தது.

சேட்டிலைட் சேனல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகரித்துவிட்ட காலத்தில் தமிழிலும் தெலுங்கிலும் பல பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று சிறப்பாகப் பாடும் இளைய தலைமுறையினரை மனம் திறந்து பாராட்டி ஊக்குவித்தார். விமர்சனங்களை விளக்கமாகவும் அக்கறையுடனும் கூறி அவர்களின் திறமையை மெருகூட்டினார். அந்த நிகழ்ச்சிகளில் பேசும்போது இளையராஜா. கே.ஜே.யேசுதாஸ், எஸ்,ஜானகி உள்ளிட்ட தன்னுடைய சக பயணிகள் மீதான வியப்பை வெளிப்படுத்தும் தருணங்கள் காணொலிகளாகக் கிடைக்கின்றன. எஸ்பிபியின் பாடல்களுக்கு இணையாக அவர் பேசும் இந்தக் காணொலிகளும் தமிழ் சினிமாவின் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். இந்தக் காணொலிகளில் நாம் உணர்வது எஸ்பிபியால் வியந்து பாராட்டப்படும் கலைஞர்களின் மேன்மையை மட்டுமல்ல எஸ்பிபியின் மேன்மையையும்தான்.

இதே காலகட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உலகின் பல நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களைத் தமிழ் மண்ணுடன் பிணைக்கும் வலுவான சங்கிலியாகத் திகழ்ந்தார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கினார். யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கினார். இன்னும் பல புதிய வடிவங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பார். அதற்குள் காலம் முந்திக்கொண்டுவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்