முதல் பார்வை: சேதுபதி - கம்பீர பொழுதுபோக்கு!

By உதிரன்

விஜய் சேதுபதி போலீஸாக நடிக்கும் முதல் படம், 'பண்ணையாரும் பத்மினியும்' இயக்கிய அருண்குமாரின் இரண்டாவது படம், 'பீட்சா' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ள படம் என்ற இந்த காரணங்களே 'சேதுபதி' படத்தைப் பார்க்கத் தூண்டின.

'நானும் ரவுடிதான்' படத்தின் கிளைமாக்ஸை நூல் பிடித்து 'சேதுபதி' படத்தின் டீஸரை உருவாக்கிய இயக்குநரின் புத்திசாலித்தனத்தை நினைத்தபடியே தியேட்டருக்குள் நுழைந்தோம்.

கதை: சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை தீ வைத்து கொளுத்தி கொலை செய்கிறது ஒரு கும்பல். அந்த கொலையை விசாரிக்கும் விஜய் சேதுபதிக்கு தடைகள், சிக்கல்கள், பிரச்சினைகள், இழப்புகள் ஏற்படுகின்றன. அதற்குப் பிறகு விஜய் சேதுபதி என்ன செய்கிறார்? என்ன ஆகிறார்? என்பது மீதிக் கதை.

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை கொடுத்த இயக்குநர் அருண்குமார் தற்போது புதிய களத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார். கமர்ஷியல் சினிமாதானே என்று சாதாரணமாக நினைக்காமல், சின்ன சின்ன டீட்டெயிலிங்கில் கூட கூடுதல் அக்கறை காட்டி இருப்பது அவரின் உழைப்பைக் காட்டுகிறது.

காக்கிச்சட்டை விஜய் சேதுபதிக்கு அவ்வளவு பொருத்தம். முறுக்கு மீசை, மிரட்டும் பார்வை, அதிகாரத் தொனி, நடை, உடை, பாவனைகளில் நச்செனப் பொருந்துகிறார். குடும்பத்துடன் நேரம் செலவிடும்போது குழந்தையாக மாறுவது, கணவனாக காலில் விழுவது, போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் நடந்துகொள்வது என எல்லாவற்றிலும் ஜஸ்ட் லைக் தட் ஸ்கோர் செய்கிறார்.

மகளுடன் காவல் நிலையத்துக்கு வருபவரை டீல் பண்ணும் விதம், வீட்டில் இல்லாத சமயம் மகனை வைத்து வில்லன்களை விரட்டும் விதத்துக்கு தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது.

'டேய் அப்படி மொறைக்காதே! சிரிப்பு சிரிப்பா வருது' என விவேக் பிரசன்னாவிடம் சொல்லி சிரிக்கவைக்கும் விஜய் சேதுபதி, மகனிடம் 'நீதான் ஆம்பளைப் புள்ள. பத்திரமா பாத்துக்கணும்' என தைரியம் வளர்க்கும் போதும் மனதில் நிறைகிறார்.

குடும்பம் தொடர்பான எல்லா காட்சிகளிலும் ரசிக்கும் விதத்தில் பதிவு செய்ததற்காகவே தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

செண்பக மூர்த்தியாக நடித்திருக்கும் லிங்காவின் நடிப்பு கச்சிதம். விஜய் சேதுபதியிடம் பம்முவதும், தயங்கித் தயங்கி பேசுவதும், சிக்கலான காலகட்டத்தில் நண்பனாக பரிணமித்து பகிர்வதும் நல்ல அத்தியாயம்.

அவமானத்தில் கூனிக்குறுகுவது, பழிவாங்கல் படலத்தில் ஆரம்பிப்பது என வேல ராமமூர்த்தி கதாபாத்திரத்துக்கான வேலையை சரியாக செய்து முடிக்கிறார். சும்மா சும்மா உதார் விட்டுப் போகும் விவேக் பிரசன்னா நடிப்பால் கட்டிப் போடுகிறார்.

ரம்யா நம்பீசன் கதாநாயகிக்கான வேலையை பூர்த்தி செய்கிறார். அந்த ஆளு இப்போ திட்டுவான். அப்புறம் வந்து கொஞ்சுவான். அப்போ நான் இங்கே இருக்கணும் என்று சொல்லுமிடத்தில் அப்ளாஸ் வாங்குகிறார். கணவனே ஆனாலும், சூரிய வம்சம் கதையெல்லாம் வேணாம்... என்று விஜய் சேதுபதியை பணிய வைப்பது ரசனை ரகம்.

விசாரணை கமிஷனில் வரும் அதிகாரி... 'சும்மா தொணதொணன்னு பேசாதப்பா. சேதுபதி உன் வேலை கன்ஃபார்ம்யா' என சொல்லும்போதும் அந்த வசனத்தை உதிர்த்தவருக்கும் சேர்த்தே விழுகிறது கைதட்டல்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், நிவாஸ். கே. பிரசன்னாவின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். ஹேய் மாமா பாடல் ரசிக்க வைக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கவனிக்க வைக்கிறது.

போலீஸ் கதையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். அது விஜய் சேதுபதிக்கு மிகச் சரியாக பொருந்திப் போகிறது.

ஆனால், மதுரை களமாக இருந்தாலும் வில்லன் செய்யும் கொலைகளை யாருமே கண்டுகொள்ளமாட்டார்களா?அதற்கென்று விசாரணையே நடக்காதா? இதுபோன்ற சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் 'சேதுபதி' கம்பீரத்தையும், கச்சிதத்தையும் கொடுக்கத் தவறவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்