எம்.எஸ்.பாஸ்கர் பிறந்த நாள் ஸ்பெஷல்: எல்லோராலும் விரும்பப்படும் குணச்சித்திர நடிகர் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், கதாநாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் மீது விழும் புகழ் வெளிச்சம் குணச்சித்திர நடிகர்கள் மீது விழுவதில்லை. ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குக் குணச்சித்திர நடிகர்களின் பங்கு முக்கியமானது. நகைச்சுவை முதல் அவலச்சுவை வரை அனைத்தையும் வெளிப்படுத்தி நடிக்கும் வாய்ப்பு மற்றவர்களைவிடக் குணச்சித்திர நடிகர்களுக்கே அதிகமாக வாய்க்கும். அப்படி பல வகையான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்துப் பல தரப்பட்ட ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்தவரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

குணச்சித்திர நடிகர்கள் சமமாக மதிக்கப்படவும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் அனைவராலும் உணரப்படுவதற்கும் காரணமாக விளங்கியவர்கள் என்று சிலரை அடையாளப்படுத்த முடியும் என்றால் அந்தப் பட்டியலில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமானவர். குறிப்பாக புத்தாயிரத்துக்குப் பிந்தைய தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவரும் அனைத்து வயதினரின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவரும் எம்.எஸ்.பாஸ்கர்தான்.

நாடகப் பின்னணி

பின்னணிக் குரல் கலைஞராக (டப்பிங்) தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கிய பாஸ்கர் ஒரு சிறந்த நடிகராக உருமாறியதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடக நடிகராக அவருக்கு இருக்கும் நீண்ட அனுபவம் கைகொடுத்திருக்கக்கூடும். முத்துப்பேட்டையைச் சேர்ந்தவரான பாஸ்கர் இளம் வயதிலிருந்தே சொஸைட்டி ஃபார் நியூ டிராமா என்னும் நாடகக் குழுவின் அங்கமாக இருந்தார். அந்தக் குழுவில் பல நாடகங்களில் நடித்ததோடு மற்ற சில குழுக்களின் நாடகங்களிலும் நடித்துள்ளார். அனைத்திந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் ஒளி/ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழில் ஒளிபரப்பான புகழ்பெற்ற 'விழுதுகள்' தொடரிலும் அவர் நடித்திருக்கிறார்.

குரல் வித்தகர்

தன் அக்கா ஹேமமாலினியைப் பின்பற்றி பாஸ்கரும் திரைப்பட டப்பிங் கலைஞரானார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்கு அவர் டப்பிங் பேசினார். பின்னர் தொலைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமான மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலப் படங்கள் பலவற்றில் பலவகையான கதாபாத்திரங்களுக்கு அவருடைய அபாரமான குரல் திறன் பயன்பட்டது.

நடிப்பை அடையாளமாக்கிய நெடுந்தொடர்கள்

விசு இயக்கத்தில் 1987இல் வெளியான 'திருமதி ஒரு வெகுமதி' பாஸ்கர் நடித்த முதல் திரைப்படமானது. தொடர்ந்து விசுவின் படங்களிலும் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டும் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

1990களின் பிற்பகுதியில் சேட்டிலைட் தொலைக்காட்சி அலைவரிசைகள் பரவலானதற்குப் பிறகு பாஸ்கரின் நடிப்புப் பயணம் வேறொரு பரிணாமத்தை அடைந்தது. தேன்மொழி ஆபாவாணன் தயாரித்த 'கங்கா யமுனா சரஸ்வதி', குழந்தைகளுக்கான மாய யதார்த்த தொடரான 'மாயாவி மாரீசன்' போன்ற பிரபலமான தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்தார். ஆனால் அவருடைய அடையாளமாக அமைந்ததோடு எம்.எஸ்.பாஸ்கர் என்னும் பெயரை அனைவரும் அறிந்துகொள்ளவும் அவரை வியந்து பாராட்டவும் வைத்தது 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' நெடுந்தொடரில் அவர் ஏற்ற பட்டாபி கதாபாத்திரம்தான்.

மாமியார்-மருமகளுக்கிடையிலான மோதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அந்த நகைச்சுவைத் தொடரில் மருமகளின் அக்காள் கணவராக ஒரு காது கேட்கும் திறனற்றவராக இன்னொரு காதின் பின்னால் கையை வைத்தபடி பிழையற்ற பிராமணத் தமிழில் பேசியபடி வெளுத்து வாங்கிய விதம் அவருக்கு எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. பட்டாபி கதாபாத்திரத்தை வைத்தே 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரை இன்றும் ரசிகர்கள் நினைவுகூர்கிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பால் தனக்கு வழங்கப்பட்ட துணைக் கதாபாத்திரத்தை முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு இணையானதாகச் சொல்லப்போனால் அவற்றைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றவைத்தார் எம்.எஸ்.பாஸ்கர்.

கவனம் ஈர்த்த கதாபாத்திரங்கள்

இதே காலகட்டத்தில் மணிரத்னம் தயாரித்து அழகம் பெருமாள் இயக்கிய 'டும் டும் டும்' திரைப்படத்தில் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் துணைக் கதாபாத்திரம் பாஸ்கருக்கு அமைந்திருந்தது. தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவரான பாஸ்கர் சுத்தமான நெல்லைத் தமிழ் பேசிய விதம் அனைவரையும் ஈர்த்தது. நடிகர் விஜய்யின் 'தமிழன்' திரைப்படத்தில் பொதுமக்களிடம் எரிந்து விழும், வயது வித்தியாசம் பாராமல் மரியாதைக் குறைவாகப் பேசி இழிவுபடுத்தும் பேருந்து நடத்துநராக ஒரே காட்சியில் சாமான்ய மக்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தும் அரசுப் பணியாளர்களின் அகம்பாவத்தைக் கச்சிதமாகக் கொண்டுவந்திருப்பார் பாஸ்கர்.

விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' படத்தில் எந்நேரமும் மதுபோதையில் இருந்தபடி வடிவேலுவை வெறுப்பேற்றுகிறவராக பாஸ்கர் நகைச்சுவை நடிப்பிலும் தன் மேதமையை வெளிப்படுத்தியிருப்பார். ஒரு குடிகாரரின் உடல் மொழியையும் பேசும் விதத்தையும் அவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், அஜித் என முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் பாஸ்கர். விஜயகாந்த் படங்களில் தொடர்ந்து நடித்துவந்தவர் 'சிவாஜி' திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்தார். அதில் லஞ்சவெறி பிடித்த அரசு அதிகாரியாகவும் மற்ற அதிகாரிகளுக்கும் பல வகையான லஞ்சங்களை வாங்கிக்கொடுக்கும் இடைத் தரகராகவும் பாஸ்கரின் நடிப்பு பரவலான கவனத்தை ஈர்த்தது. அடுத்த சில ஆண்டுகளில் வெளியான கமல்ஹாசனின் 'தசாவதாரம்' திரைப்படத்தில் டூரிஸ்ட் கைடு போன்ற கதாபாத்திரத்தில் அமெரிக்க வில்லனான ஃப்ளெச்சரிடம் தமிழ் கலந்த ஆங்கிலம் பேசுபவராக நகைச்சுவையில் அசத்தியிருந்த விதத்தில் கமலின் பத்து வேடங்களையும் தாண்டி தனி முத்திரை பதித்தார் பாஸ்கர்.

மொழி என்னும் மைல்கல்

இதே காலகட்டத்தில் நிகழ்ந்த இயக்குநர் ராதாமோகனின் அறிமுகம் பாஸ்கரின் நடிப்புப் பயணம் வேறொரு பரிமாணத்தை அடைய வைத்தது. அவரை ரசிகர்களின் மனங்களில் இன்னும் பல படிகள் உயர வைத்தது. ராதாமோகனின் திரைப்படங்கள் பலவற்றில் பாஸ்கரின் நடிப்பு முக்கிய அங்கமாக இருந்திருந்தாலும் 'மொழி' ஒரு இயக்குநராக ராதாமோகனுக்கு மட்டுமல்லாமல் ஒரு குணச்சித்திர நடிகராக பாஸ்கருக்கும் ஒரு மறக்கமுடியாத மைல்கல்லாக அமைந்தது. அந்தப் படத்தில் மகனின் அகால மரணம் கொடுத்த அதிர்ச்சியால் மனதளவில் அந்தக் காலகட்டத்திலேயே உறைந்து, தேங்கிப் போய்விட்ட ஒரு கண்ணியமான கனிவான மனிதராக பாஸ்கரின் கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த துணைக் கதாபாத்திரங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது. நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகியவற்றோடு இறுதிக் காட்சியில் உண்மை உணர்த்தப்பட்டுக் கதறி அழும் காட்சியைக் கண்டு மனம் கனக்காத பார்வையாளரே இருக்க முடியாது.

தவிர்க்க முடியாத துணை நடிகர்

'மொழி' படத்துக்குப் பின் எம்.எஸ்.பாஸ்கர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார். நட்சத்திரங்கள், முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைத்தனர். பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட், நடுத்தர பட்ஜட், நட்சத்திர மதிப்புகொண்ட படங்கள், புதுமுகங்களின் படங்கள், இரண்டாம் நிலை நாயகர்களின் படங்கள், கிராமத்துக் கதை, நகரத்துக் கதை, சிறு நகரத்துக் கதை, நகைச்சுவைப் படம், சென்டிமென்ட் படம், ஆக்‌ஷன் படம், அரசியல் படம் எனப் பல வகையான திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்துவரும் பாஸ்கரின் திரைப்பயணம் வெற்றிமேல் வெற்றியாகத் தொடர்கிறது.

அவருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை மிகப் பெரியது. மிஸ்கினின் 'அஞ்சாதே' படத்தில் யதார்த்தமான காவல்துறை அதிகாரி, சிம்புதேவனின் 'அறை எண்305-இல் கடவுள்' படத்தில் அனைவரிடமும் எரிந்துவிழும் விடுதி உரிமையாளர், தமிழின் முதல் ஸ்பூஃப் படமான சி.எஸ்.அமுதனின் 'தமிழ்ப்படம்' படத்தில் நாயகனின் நண்பன், நலன் குமாரசாமியின் 'சூது கவ்வும்' படத்தில் நேர்மையான அதே நேரம் இங்கிதம் தெரியாத அரசியல்வாதி, அஜய் ஞானமுத்துவின் 'டிமான்ட்டி காலனி'யில் ஜோசியர், சீனு ராமசாமியின் 'தர்மதுரை' படத்தில் வெள்ளந்தியான கிராமத்து மனிதர் ஆகியவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

புது உயரம் தொடவைத்த தோட்டாக்கள்

புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டில் 'மொழி' படத்தைப் போல் அடுத்த பத்தாண்டில் எம்.எஸ்.பாஸ்கருக்கு அடுத்த உயரத்தைப் பெற்றுத்தந்த திரைப்படம் ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்'. இதில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அவருக்கு. விதியின் கொடூரமான விளையாட்டுகளால் கொலைக் குற்றவாளியாகிவிடும் காவலராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் பாஸ்கர். தனது குற்றங்களின் பின்னணியை விளக்கும் அந்த நீண்ட வசனத்தை அவர் பல உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரே ஷாட்டில் பேசிய விதம் அவருடைய நடிப்பின் உச்சம் எனலாம்.

படிக்காதவர், அபத்த நகைச்சுவை செய்பவர், புத்திசாலித்தனமான நகைச்சுவை செய்பவர், நல்ல மனம் படைத்த எளிய மனிதர், ஆசிரியர், பேராசிரியர், அரசு அதிகாரி, காவல்துறை அதிகாரி, அரசியல்வாதி, படித்த மேல்தட்டு கனவான், தொழிலதிபர், சுயநலக்காரர், பொதுநலவாதி, கொடூர வில்லனாக, நன்மையும் தீமையும் கலந்த குணச்சித்திரமாக என பாஸ்கர் நடிக்காத கதாபாத்திர வகைமையே இல்லை என்று சொல்லலாம். இப்படி எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறி ரசிகர்கள் மனங்களைக் கவர்வதில் தனித்த வல்லமை படைத்தவர் அவர். தூய தமிழிலும் தமிழின் அனைத்து வட்டார வழக்குகளிலும் பிழையின்றிப் பேசத் தெரிந்தவர் என்பது அவருடைய இன்னொரு தனிச்சிறப்பு.

இத்தகைய அபார திறமையும் பன்முக நடிப்பாளுமையும் மிக்க நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் இன்னும் பல நூறு படங்களில் நடிக்க வேண்டும். அவருக்கு நடிப்புக்கான பல விருதுகள் கிடைக்க வேண்டும். ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்