நான் இசை தொழிற்சாலையாக இருக்க விரும்பவில்லை: மனம் திறக்கிறார் அனிருத்

By கா.இசக்கி முத்து

"இசையமைப்பாளர் என்பதை எல்லாம் தாண்டி ஒரு கலைஞனாக நான் பெயர் எடுக்கத் தான் விருப்பம். அதனால் தான் நான் நடிக்கவும் வரவில்லை. பாடல் இசையமைத்து வெளியிடுவதை விட, அப்பாட்டுக்கு நடனமாடி வெளியிடுவது பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் இந்தப் படத்தில் சந்தோஷமாக பணியாற்ற முடியும் என்று நினைக்கும் படங்கள் மட்டுமே பண்ணுகிறேன்" என்று தனது உரித்தான குழந்தைத்தனமான சிரிப்பில் தொடங்கினார் அனிருத். 'அவளுக்கென்ன' பாடல் இறுதி வடிவத்தில் இருந்த அனிருத்திடம் பேசிய போது..

நிறைய படங்களில் இருந்து அனிருத் விலகல் என்று செய்தி வருகிறதே.. என்ன காரணம்?

முதலில் எனது இசை நிகழ்ச்சி சுற்றுப்பயணத்தை முடிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். கனடா, சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றைத் தொடர்ந்து ஏப்ரலில் சென்னை, துபாய் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. மே மாதம் லண்டனில் நடைபெற இருக்கிறது. இசை நிகழ்ச்சி என்பது நிறைய பேருக்கு கிடைக்காது. எனக்கு ரசிகர்கள் முன்பு பாடுவதற்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் இசையமைப்பாளருக்கு இசை நிகழ்ச்சி சுற்றுப்பயணம் அமைவது மிகவும் அரிதான ஒன்று. அப்படி அமைந்திருக்கும் போது அதை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது.

இந்த ஆண்டு எனது முதல் படமாக வரவிருப்பது சிவகார்த்திகேயன் படம் தான். அப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. பிறகு விக்னேஷ் சிவன் படம், 'வேதாளம்' டீம் பண்ணும் படம் ஆகியவை என இந்த ஆண்டு என் இசையில் 3 படங்கள் தான் வரவிருக்கிறது.

அப்படி என்றால் இனிமேல் படங்களுக்கான இசை என்பதை குறைத்துக் கொள்வீர்களா?

எனக்கு என்று சில லட்சியங்கள், குறிக்கோள்கள் இருக்கின்றன. நான் என்ன நினைத்து வந்தேனோ, அது நடந்துவிட்டது. அதற்குப் பிறகு நமக்கு பிடித்தவற்றை மட்டுமே பண்ணுவது தான் நல்லது. முதல் 2 ஆண்டுகள் வருடத்திற்கு 3 படங்கள் தான் பண்ணினேன். கடந்த ஆண்டு தான் 6 படங்கள் பண்ணினேன். இனிமேல் வருடத்தின் தொடக்கம், இடைப்பட்ட காலத்தில் ஒன்று, இறுதியில் ஒன்று என 3 படங்கள் பண்ணலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறேன்.

வருடத்திற்கு 3 படங்கள் என்பது ஒரு இசையமைப்பாளருக்கு மிகவும் குறைவு இல்லையா?

3 படங்கள் பெரிய விஷயமாக தான் பார்க்கிறேன். 3 படங்களில் 18 பாட்டு என்றால் அனைத்துமே என்னுடைய சிறப்பானதாக இருக்க வேண்டும். நான் தினமும் பண்ணுவதை என்னால் வெளியிட முடியும். அப்படி பண்ணினால் மாதத்திற்கு 20 பாட்டு பண்ண முடியும். ஆனால் எனது சிறப்பானதாக இருக்காது. 20 பாட்டுமே எனது மனதுக்கு நெருக்கமாக இருக்காது. இது தான் சூப்பர் என்று என் மனது கூறும் வரைக்கும் நான் வெளியிடவே மாட்டேன். அப்படி இல்லாமல் பண்ணினால் நான் ஒரு தொழிற்சாலையாகி விடுவேன். அப்படியிருப்பதில் எனக்கு விருப்பமில்லை.

ரஜினி, தனுஷ் போன்றவர்கள் அனைவருமே உங்களை ஒதுக்கிவிட்டார்கள் என்கிறார்களே..

'பீப்' பிரச்சினை வந்த போது இசை நிகழ்ச்சி முடித்துவிட்டு, லண்டனில் எனது அக்காவுடன் இருந்தேன். அந்த சமயத்தில் இணையத்தில் என்னவெல்லாமோ எழுதினார்கள். ரஜினி சாரைப் பற்றிய செய்தியையும் நான் படித்தேன். அப்படி ஒரு விஷயம் நடைபெறவில்லை. 2, 3 படங்களில் கூட என்னை நீக்கிவிட்டார்கள் என எழுதினார்கள். ஆனால், 6 மாதங்களுக்கு முன்பே நான் எனக்கு நேரமில்லை என நான் விலகின படங்கள் தான அவை. இந்த சர்ச்சையால் அனைவருமே இதனால் தான் நீக்கம் என்று நினைத்துவிட்டார்கள். அமைதியாக இருப்பது தான் சிறந்தது என்று நினைத்து அமைதியாக இருக்கிறேன்.

அதே போல, எனக்கும் தனுஷிற்கும் பிரச்சினையே கிடையாது. அவர் எப்போதுமே நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இவ்வளவு படங்கள் இணைந்து பண்ணியிருக்கிறோம், முதலில் அவருடைய படத்தில் தானே இசையமைப்பாளராகவே அறிமுகமானேன். 'கொடி' படத்தின் படப்பிடிப்பு முடியப்போகிறது. கண்டிப்பாக இந்த நேரத்திற்குள் என்னாலும் பாடல்கள் கொடுத்திருக்க முடியாது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டோ கண்டிப்பாக இணைந்து படம் பண்ணுவோம்.

சென்னை வெள்ளத்தின் போது எங்கே இருந்தீர்கள்? என்ன செய்தீர்கள்?

சென்னையில் தான் இருந்தேன். கோட்டூர்புரத்தில் போய் என்னால் முடிந்த உதவிகள் செய்தேன். அச்சமயத்தில் சென்னையில் இருந்து விமானங்கள் கிளம்பாததால் பெங்களூர் சென்று அங்கிருந்து என் இசை நிகழ்ச்சிக்காக கனடா போனேன். அச்சமயத்தில் சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி பண்ணிய உதவிகள் எல்லாம் சூப்பர். சித்தார்த்துக்கு 'INDIAN OF THE YEAR' கிடைத்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அந்த விருதுக்கு அவர் மிகவும் தகுதியானவர். சித்தார்த் எவ்வளவு பெரிய விஷயம் பண்ணினார் என்பதை நான் நேரில் பார்த்திருப்பதால் சொல்கிறேன்.

'வேதாளம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் என்ன சொன்னார்? பீப் பாடல் பிரச்சினைக்கு பிறகு உங்களிடம் பேசினாராமே..

'வேதாளம்' படத்தின் இசைக்கு வரவேற்பு கிடைக்கும் என தெரியும் ஆனால் இவ்வளவு வெறித்தனமான வெற்றி கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. படத்தை நான், அஜித் சார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே குடும்பத்துடன் பார்த்தோம். படம் பார்த்தவுடன் அஜித் சார் ரொம்ப சந்தோஷப்பட்டார். எப்போதுமே சந்தோஷமாக இருங்க என்று மட்டும் சொன்னார். இந்தப் பிரச்சினைக்கு பிறகு அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்