ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என விமர்சிக்காதீர்கள்: விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லாபம்'. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டுப் படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கும் முன்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தயாரிப்புக் கணக்கு வழக்குகளில் பெரிதாக ஈடுபடாதது ஏன் என்று இந்தச் சந்திப்பில் பேசும்போது விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விஜய் சேதுபதி பேசியதாவது:

" 'லாபம்' படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுகக் குமாரை எனக்கு 12 ஆண்டுகளாகத் தெரியும். இதுவரை நான் நான்கு படங்களைத் தயாரித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லை. ஏனெனில் அதைத் தெரிந்துகொள்வதில் அக்கறை காட்டினால், என்னுள் இருக்கும் கலை இறந்துவிடும் என்ற பயம் எனக்குள் இருக்கிறது. இது என்னுடைய சொந்தப் பிரச்சினை. இதனால் பண வரவு விஷயத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ளலாம். ஆனால் தொழில் பலவீனம் அடைந்தால் என்னால் தாங்கிக்கொள்ளவே இயலாது. அத்துடன் என்னால் ஒருபோதும் என்னை இழக்க முடியாது. என்னுடன் என்னுடைய பள்ளிக்கூடத் தோழன் சந்திரசேகர் இருக்கிறார். அவர்களிடம் இந்தப் பொறுப்பை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தில் நான் சம்பளமாக எதையும் பெறவில்லை. எடுக்கவும் இல்லை. இந்தத் திரைப்படம் நல்லபடியாக வெளியாக வேண்டும்.

ஜனநாதன் சார் ‘ஒரு திரைப்படத்தைப் பொழுதுபோக்கு’ என்று சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டார். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையைக் கடந்து, பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விஷயத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை திரைப்படத்தைப் பார்க்கும் பலரும் பல தருணங்களில் இந்தக் காட்சி என்னை மாற்றியது, இந்தக் காட்சி என்னை யோசிக்கத் தூண்டியது, இந்தக் காட்சி என்னை மனிதனாக்கியது எனச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அது எந்த மொழிப் படமாக இருந்தாலும் பரவாயில்லை.

திரைப்படம் ஏதோ ஒரு வகையில் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் மனிதனின் உணர்வுகள், ஒரேவகையான தாக்கத்தை ஏற்படுத்தி நம் மனதைத் தொடுகிறது. அதனால் திரைப்படம் சாதாரண பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது அதையும் கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது. மக்கள் சிந்திக்க வேண்டியவற்றைப் பிரதானமாக எடுத்துச் சொல்வது கலை வடிவங்கள்தான். ஒரு நகைச்சுவைக் காட்சி கூட ரசிகர்களை யோசிக்க வைக்கும். அதனால் கலையைச் சாதாரண பொழுதுபோக்கு அம்சம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாதீர்கள்.

கலை என்னைச் சிந்திக்க வைத்தது. அதனால் இத்துறையில் அடி எடுத்து வைத்தேன். இதைத்தான் என்னுடைய வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். அதனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது? எது பலவீனமாக இருக்கிறது? என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்யப் பழகிக் கொள்ளுங்கள். என்னுடைய வாரிசுக்கு இதைத்தான் நான் கற்றுக் கொடுக்கிறேன். ஒரு விஷயத்தைக் குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரைக் குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகிவிடுகிறேன். கலை மனிதனைச் சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

அனைத்தையும் கடந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளைத் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி. இது ‘லாபம்’ படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. திரைத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களின் உழைப்பை உள்ளடக்கியது. இவர்களின் அனைவரின் சார்பாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வருக! வருக! என மனமார வரவேற்கிறேன்".

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE