காதலையும் கடந்து போகணும்: மாற்றத்தின் மகத்துவம் கண்ட மாதவன்!

By கா.இசக்கி முத்து

திருமணத்துக்குப் பிறகு திரையில் அறிமுகமானாலும், ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு இடைக்கால ஓய்வு அளித்துவிட்டு, மீண்டும் பரபரப்பாகி தனது இருப்பிடத்தை தக்க வைத்திருக்கிறார் நடிகர் மாதவன். இதன் பின்னணியில் தன் மனைவி கூறிய ஊக்கமளிக்கும் வார்த்தைகள்தான் என்று மாதவன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் மாதவன் மனம் விட்டுப் பேசும்போது, "ஒரு அளவுக்கு வெற்றி வந்தவுடனே திமிரும் வந்துவிடும். மேடி என்று அழைக்கிறார்கள், கண்டிப்பாக படம் வந்து பார்ப்பார்கள் என்ற எண்ணம் வந்துவிடும். அப்படி இருந்தாலே சரிவு வந்துவிட்டது என்று புரிந்துகொள்ள வேண்டும். அதை திடீரென்று புரிந்து கொண்டேன்.

இன்றைக்கு எங்கே படப்பிடிப்பு, கேராவேன் வந்துவிட்டதா என்று வீட்டில் பேசிக் கொண்டிருப்பேன். அப்போது என் மனைவி சரிதா "என்ன மேடி... படப்பிடிப்புக்கு ஒரு ஆர்வத்தோடு போக மாட்டிக்கிறீங்க. என்ன ஆச்சு. உங்க கண்ணுல அந்த வெறியே போய்விட்டது" என்றார். அப்போதுதான் அவர் சொல்லுவது சரி எனத் தோன்றியது. எனக்கு அருகில் இருப்பவர்களுக்குத்தான் அது புரியும்.

எல்லாத்தையும் விட்டுவிடலாம். நமக்குள் மறுபடியும் அந்த வெறி, அந்த நெருப்பு மறுபடியும் வேண்டும் என்று யோசித்தேன்.

"நான் முக்கியமான ஒரு முடிவு எடுக்கப் போகிறேன்" என்று மனைவியுடன் சொன்னபோது "என்ன வேண்டுமானாலும் எடுங்கள். மும்பையில் இருக்கும் நமது அடுக்குமாடி குடியிருப்புக்கு போகும் வரை நான் கவலைப்பட மாட்டேன். அதற்கு பிறகு தான் கவலைப்படுவேன். நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுங்கள்" என்று பதிலளித்தார் என் மனைவி. அவர் அவ்வாறு கூறியதை என்னால் மறக்கவே முடியாது.

விளம்பரங்கள், சினிமாவில் நடிப்பது என காசு சம்பாதிப்பதையே விட்டுவிட்டேன். மீசை, தாடி எல்லாம் வளர்த்து இருக்கின்ற காசை வைத்து சமாளித்தேன். ஒரு சாதாரண மனுஷன் என்னவெல்லாம் அனுபவிப்பானோ அதை எல்லாம் அனுபவிக்க ஆரம்பித்தேன். ரயில், ரிக்‌ஷா, பஸ் என எல்லாவற்றிலும் போக ஆரம்பித்தேன். மக்கள் எந்த மாதிரி எல்லாம் பேசிக் கொள்கிறார்கள். மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

திரையுலகில் இருக்கும்போது திரையுலகினரை மட்டும்தான் கவனிக்கிறோம். நம்ம மட்டுமே பெரிய நாயகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், உண்மையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அந்த மாதிரி நினைக்கிறார்களா என்று சிந்தித்தேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என நினைத்தேன். அனைவருடைய எண்ணங்களுமே வேறு மாதிரி இருந்தது.

உண்மைகளைத் தெரிந்த கொண்டபோது என் மனம் ரொம்ப புண்பட்டுவிட்டது. என் முகத்தை தரையில் வைத்து தேய்த்தது போல உணர்ந்தேன். ஆனால், அதுவும் நன்மைக்கே. ஒவ்வொரு அவமானத்தை ரசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் மறுபடியும் கண்ணில் வெறி வந்தது. அந்த நேரத்தில் நமக்கு படம் மறுபடியும் வருமா, வராதா என்று எண்ணம் வந்தது. அச்சமயத்தில் பல கதைகளில் நடிக்கக் கேட்டார்கள். பணத்துக்காக படம் பண்ணிவிடலாம் என்று சிந்தித்தேன். இந்த விஷயங்கள் புரிய ஆரம்பித்ததால் வேண்டாம் என்று காத்திருந்தேன்.

இயக்குநர் சுதா என்னிடம் இக்கதையைச் சொன்னபோது, மக்களிடம் எப்படியோ தெரியவில்லை நமது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்ற எண்ணம் வந்தது" என்று தனது மனைவி தன்னை உணரவைத்த தருணத்தை விவரித்திருக்கிறார் மாதவன்.

இப்போது, 'இறுதிச்சுற்று' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உழைப்பும் அர்ப்பணிப்பும் வெற்றி தேடி தந்திருக்கிறது.

இப்போதைய மனநிலை என்ன? என்று மாதவனிடம் கேட்டேன். "சினிமாவில் உனக்கு வெறியே இல்லை. ஏன் தொழிலாக பார்க்க ஆரம்பித்துவிட்டாய் என்று கேட்டார்கள். அவங்க சொன்னது சரிதான், எனக்கு பெரிய தப்பாகப்பட்டது.

'இறுதிச்சுற்று' மாதிரியான கதையை யாருமே எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சசிகாந்த், சுதா மாதிரியான நல்ல உள்ளங்கள் கிடைத்து வெறியோடு அப்படத்தை பண்ணினேன். இப்போது படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்களுக்கு பெரிய விஷயங்களை சின்னதாக சொன்னாலே நல்ல புரிந்துகொள்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது.

என் மனைவி சரிதாவும் வெற்றி கிடைத்துவிட்டது. அடுத்தப் படத்துக்கு வெறியோடு கிளம்பு என தெரிவித்தார். நானும் வெறியோடு கிளம்பிவிட்டேன். ஒரு படத்தின் வெற்றி விழா முடிந்தவுடன், அடுத்தப் படத்துக்கு கிளம்புவதை நான் எனது குறிக்கோளாக வைத்திருக்கிறேன்" என்று உத்வேகத்துடன் பகிர்ந்தார் மாதவன்.

இது காதலர் தினம். காதல் சீசனாச்சே... மாதவனிடம் ரொமான்டிக் காதல் பற்றி கேட்காமல் இருப்பது நியாயமா? அந்த வழக்கமான கேள்வியைக் கேட்டேன். (பல்பும் வாங்கினேன்.)

"இந்த வயதில் இதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. ஏனென்றால் நான் அதை எல்லாம் தாண்டிவிட்டேன். நிறைய தடவை இதைப் பற்றி பேசிவிட்டேன். காதலி, மனைவி எல்லாம் தாண்டி வந்துவிட்டேன். மறுபடியும் அதைப் பற்றி பேசுவது, அந்த உணர்வுபூர்வ அனுபவத்தைக் கொச்சைப்படுத்துவது மாதிரி இருக்கும் என நினைக்கிறேன்" என்றபோது அந்த 'இறுதிச்சுற்று' பயிற்சியாளர் தான் என் கண் முன் வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்