நான் பேட்டி கண்டவர்கள் விதைத்த நம்பிக்கையால் முளைத்தேன்: சிவகார்த்திகேயன் சிறப்பு பேட்டி

By கா.இசக்கி முத்து

ஒரு மகத்தான வெற்றி கிடைத்துவிட்டால், செல்போன் டவருக்கு மேல் அமர்ந்து அழைத்தாலும் நட்சத்திரங்களின் லைன் கிட்டுவது கடினம் என்பது வழக்கம். ஆனால், எந்தச் சூழலிலும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாதவர்களும் தமிழ் சினிமாவில் உள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். உங்களுக்கு இன்று (பிப்.17) பிறந்தநாள்... சின்னதா ஒரு சிறப்புப் பேட்டி எடுக்கலாம்னு அழைத்தேன் என்றவுடன், 'ஓஹ்... இப்பவே பேசலாமே' சொன்னவர் முன்தயாரிப்புகள் ஏதுமின்றி நம்முடன் பேசிய உரையாடலின் பதிவு இது...

இந்த பிறந்தநாள் என்ன ஸ்பெஷல்? பிறந்தநாள் உறுதிமொழி ஏதாவது எடுத்துக்குற பழக்கம் இருக்கா?

படப்பிடிப்பில் இருக்கிறேன். வீட்டில் நண்பர்களுடன், எனது குழந்தையுடன் கேக் வெட்டி கொண்டாடினேன். எனது குழந்தை தான் 2, 3 நாட்களாக அப்பாவுக்கு பிறந்தநாள் கேக் வெட்டணும் என்று வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தினாங்க.

உறுதிமொழி எல்லாம் நான் எப்போதுமே எடுப்பதில்லை. ஏனென்றால் உறுதிமொழி எடுத்தால் அதை பின்பற்ற வேண்டும். புத்தாண்டு அன்று இந்த வருடம் இப்படி இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எல்லாம் எடுப்போம். ஆனால், மற்றதை எல்லாம் விட்டுவிட்டு நாம் பண்ணக் கூடாது என்று உறுதிமொழி எடுத்ததைத் தான் பண்ணிட்டு இருப்போம்.

எல்லா பிறந்தநாளின் போது நல்ல வேலைப் பார்த்திட்டு இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதையே இந்த வருஷமும் பண்ணிட்டு இருக்கேன்.

'ரஜினி முருகன்' வெற்றி தந்த மாற்றங்கள்... கற்றுக்கொண்டவை?

மக்களுக்கு பிடிக்கிறதை பண்ண வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். எந்த காலத்தில் படம் வெளிவரும் என்பதற்கு எல்லாம் அப்பாற்ப்பட்டது தான் வெற்றி. மக்கள் ரசிக்கிற மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து பண்ணினால் எப்போது வந்தாலும் வெற்றி தான் என்பது தெரிந்தது. நிறைய முறை தள்ளிவைக்கப்பட்டு, இறுதியில் வெளியாகி வெற்றி என்பதை மட்டும் தான் நான் பார்க்கிறேன். எங்களுக்கு பிடித்து பண்ணினோம், மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பதால் சந்தோஷப்பட்டேன்.

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் வியாபாரத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். உங்களோட ரியாக்‌ஷன்?

ஒரு சாதாரண மனிதனாக திரையுலகிற்கு வந்தேன். என்னுடைய பாதை என்பது அனைவருக்குமே தெரியும். ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் இருக்கும் இந்த சினிமாவில் நானும் நாயகனாக இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமையான விஷயம் தான். அது தான் எனக்கு சந்தோஷம்.

விநியோகஸ்தர்கள் கூறும் வார்த்தைகள் எல்லாம் எனக்கு பயம் தான் தருகிறது. வியாபாரம் வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கிறேன். ஆனால், அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையில் வளர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்குள் போக நான் விரும்பவில்லை. அவர்கள் எல்லாம் சாம்ராஜ்யம், நான் ஏதோ பக்கத்தில் ஒரு ஓட்டு வீடு கட்டியிருக்கிறேன். இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறாக இருக்கும்.

அவர்கள் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார்கள், அதற்கு அவர்களுடைய தன்னம்பிக்கை எந்தளவுக்கு உதவியது மற்றும் அவர்களுடைய பொறுமை என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுடனான ஒப்பீடு என்பது எனக்கு எப்போதுமே பயம் தான். என்னுடைய படங்களின் வியாபாரம் உயர்ந்திருக்கிறது என்பதை உணர்கிறேன். அதற்காக தான் நேரம் எடுத்து படங்கள் பண்ணுவதும் ஒரு காரணம். பெரிய முதலீடு இருக்கும் போது பெரிய உழைப்பு தேவைப்படுகிறது.

நீங்கள் தொலைக்காட்சியில் பேட்டி கண்ட நடிகர்களின் படங்களை விட உங்களது படங்களின் வசூல் அதிகம் என்று பாசிட்டிவ் மீம்ஸ் வெளியிடுகிறார்களே..?

'ரஜினி முருகன்' வெற்றியடைந்துவிட்டது, இனிமேல் நான் தான் எல்லாம் என்று எடுத்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது 'ரஜினி முருகன்' படத்தோட வெற்றி. அப்படத்தின் நாயகன் என்பதால் அதற்கான பெரிய க்ரெடிட் எனக்கு உண்டு. அக்கதையை எழுதின பொன்.ராம் சார், சூரி அண்ணன் காமெடி, கீர்த்தி சுரேஷின் நடிப்பு, இமான் அண்ணன் பாடல்கள், பாலு சாருடைய ஒளிப்பதிவு, ராஜ்கிரண் சார், சமுத்திரக்கனி சார் இவ்வளவு பேரும் சேர்ந்த உழைப்பு தான் அப்படம். அவர்கள் அனைவருக்குமே 'ரஜினி முருகன்' வெற்றியில் பங்கு உண்டு. அதுமட்டுமன்றி மற்ற படங்களோடு எனது படத்தை ஒப்பிட்டு பார்ப்பதை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லாம் திரைத்துறையில் நிறைய ஆண்டுகளாக இருக்கிறார்கள்.

அவர்களுடைய படங்களோடு எனது படமும் வருகிறது என்பது சந்தோஷமாக விஷயம் தான். நான் பேட்டி எடுத்த நடிகர்கள் நிறைய பேர் எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நான் பேட்டி எடுத்தவர்கள் அனைவருமே உங்களுக்குள் இருக்கும் காமெடி சூப்பர் என்று கூறும் வார்த்தைகள் தான் எனக்குள் நம்பிக்கை விதைத்தது. அப்படி முளைத்து இப்போது ஓரளவு வளர்ந்து நிற்கிறேன்.

2012 - 2016ம் ஆண்டுக்குள் நீங்கள் அடைந்திருக்கும் இடத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

நீங்கள் இதில் விஜய் டி.வியில் பணியாற்றிய 5 வருடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அது தான் சினிமாவுக்கான அடித்தளம். அது தான் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதற்கு பிறகு சரியான படங்கள் பண்ணி மக்களிடம் போய் இன்னும் பெரிசா சேர்ந்தேன்.

குறுகிய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷம் தான். ஆனால் இதை தக்க வைத்துக் கொள்ள பெரிய போராட்டம் இருக்கிறது என்பதும் தெரிகிறது. இதுவரைக்கும் பண்ணிய படங்களில் ஏதாவது ஒரு விஷயம் புதுசா பண்ணி, முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம். இந்த வெற்றி என்பது அடுத்த அடுத்த படங்களிலும் கிடைக்க வேண்டும்.

இன்னொரு விஷயம், மக்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு சிறந்த உதாரணம் நான் தான். அவர்களால் மட்டுமே எனக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. இவனைத் தான் டி.வியில் பார்த்தாச்சே, பிறகு ஏன் தியேட்டருக்கு என நினைக்காமல் டி.வியில் நல்ல பண்ணினான், தியேட்டருக்கு போய் பார்ப்போம் என்று நினைத்தார்கள் இல்லையா அது தான் என் வெற்றியாக பார்க்கிறேன். என்னை நம்பி இவ்வளவு பேர் வருகிறார்களா இன்னும் நல்ல நடிப்போம், நடனம் ஆடுவோம், சண்டைப் போடுவோம் என்று கற்றுக் கொண்டிருக்கிறேன்.

'லவ் பேர்ட்ஸ்' படத்தில் 'சம்பா சம்பா' என்று ஒரு பாடல் வரும். அதில் 'மக்களே மக்களே நீங்கள் தான் நினைத்தால் எதுவும் நடக்கும்' என்று ஒரு வரி வரும். அந்த வரியை அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

விக்ரம் தான் அடிக்கடி நீ ஹீரோ என்று சொன்னதாக கூறியிருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்த பிறகு உங்களிடம் எதுவும் சொன்னாரா?

'ஐ' படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரம் சார் அவரது குடும்பத்துடன் ஒரு ஹோட்டலுக்கு வந்திருந்தார். நான் எனது குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது அவரை நேரில் போய் சந்தித்தேன். அப்போது அவர் என் குடும்பத்தினரிடம் வந்து "இவன் சூப்பரா ஆடுறான் இல்ல. நான் சொன்னேன்லா நீ ஹீரோவா பண்ணுவ என்று. நான் ரொம்ப ஹேப்பி சிவா" என்று சொன்னார்.

எந்த வயதினரைக் கவர உங்களிடம் வரும் கதைகளைத் தேர்வு செய்கிறீர்கள்?

எல்லாருக்கும் புரியுற, புடிக்கிற படங்கள் பண்ணனும். அது தான் என்னுடைய திட்டம். குழந்தைகளுக்கு மட்டும், இளைஞர்களுக்கு மட்டும், குடும்பத்தினருக்கு மட்டும் என்று நான் இதுவரை படங்கள் பண்ணவில்லை. எல்லாருமே போய் பார்க்கலாம் என்று நினைக்கக்கூடிய படங்கள் தான் பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய படங்களை குழந்தைகள் நிறையப் பேர் பார்ப்பதால் ரத்தம் தெறிக்கிற மாதிரி காட்சிகளோ, பயப்படுவது மாதிரியான விஷயங்களோ, ஆபாசமான காட்சிகளோ இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இதை பண்ணினால் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று நான் பண்ணுவதில்லை.

பரிசோதனை முயற்சியாக படங்கள் எப்போது பண்ணப் போகிறீர்கள்?

இப்போது நான் பண்ணிக் கொண்டு இருக்கும் படம் 50% பரிசோதனை முயற்சி என்று சொல்லலாம். எனக்கே ஒரு சவாலான முயற்சி தான். அந்த மாதிரியான படங்களுக்கு, இயக்குநர்கள் எந்த மாதிரியான கதைகளோடு வருகிறார்கள் என்பதைப் பொறுத்து தான். எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரியான கதைகள் வரவில்லை என்பது தான் உண்மை. நானே யோசிக்காத, பண்ணாத, புதுமையான கதைகளம் எனக்கு இதுவரை யாருமே சொன்னதில்லை என்பது தான் உண்மை. இப்போது நான் பண்ணிட்டு இருக்கும் படம், இதுவரை நான் பண்ணிய படங்களில் இருந்து மாறுபட்டது.

நடிகர்களே தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் காலம் இது. நீங்கள் எப்போது?

நம்மளே ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பண்ணலாம் என்று நினைத்தது உண்மை தான். அப்போது தான் எனக்கு பக்கபலமாக இருப்பவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. நான் மட்டுமே மேலே போய் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எனக்கு ரொம்ப உறுதுணையாக இருந்தவர்கள் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அது என்னுடைய வெற்றியாகவும் பார்க்கிறேன். அதனால் தான் தயாரிப்பை என்னுடைய நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன். நீங்கள் தயாரிங்க நான் நடிக்கிறேன் என்று சந்தோஷமாக பண்ணிட்டு இருக்கேன். இப்போது நண்பர்கள் தயாரிப்பிலும் வெளி தயாரிப்பு நிறுவனங்களிலும் படங்கள் பண்ணுவேன். நானே சொந்தமாக படம் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்