உற்சாகமாக இருக்கிறார் ‘லொள்ளு சபா ஜீவா’. இதற்கு காரணம் ‘கோச்சடையான்’. சிறிய வயதில் இருந்தே மேடைகளில் ரஜினிகாந்த் போல நடித்து கைத்தட்டல்களை வாங்கி வந்த இவருக்கு ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்தாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத் தது. படப்பிடிப்புக்காக ரஜினிகாந்தை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்த ‘கோச் சடையான்’ படத்தின் இயக்குநர் சௌந்தர்யா, ஜீவாவை ரஜினி போல் நடிக்கவைத்து சில காட்சி களைப் படமாக்கி உள்ளார். தனது கனவு நாயகனாகவே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகமாக இருக்கும் ஜீவாவை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
‘கோச்சடையான்’ படத்தில் உங்களுடைய பங்கு என்ன?
‘கோச்சடையான்’ ஒரு பொம்மைப் படம், அதில் ரஜினிகாந்த் நடிக்கவே இல்லை என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதில் கொஞ்சமும் உண்மையில்லை. இந்தப் படத்தில் 80 சதவீதம் ரஜினி சார்தான் நடித்தார். சில காட்சிகளில் அவரைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று என்னை நடிக்க வைத்தார்கள். இந்தப் படத்தில் நாகேஷ் சார் மாதிரி நடிப்பதற்கான ஆளை ஆடிஷன் எல்லாம் வைத்து தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ரஜினி சார் மாதிரி நடிக்க ஆடிஷன் வைக்காமல் நேரடியாகவே என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸ்கிரிப்டை என்னிடம் தந்து டயலாக்கை பேசிக் காண்பிக்கச் சொன்னார்கள். நான் நடித்துக் காட்டியதும், “அப்பாவோட ஜெராக்ஸ் மாதிரி அப்படியே பண்றீங்களே” என்று சௌந்தர்யா பாராட்டினார். இதில் பல சீன்களை நானும் ரஜினிசாரும் சேர்ந்தே பண்ணியிருப்போம். அதனால் இந்த சீனிலெல்லாம் நான்தான் நடித்தேன் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அதை இயக்குநர்தான் சொல்லவேண்டும். ரஜினி சார் படத்துல நடிக்கிற பாக்கியம் நிறைய பேருக்கு கிடைக்கும். ஆனால் அவராவே நடிக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. கீதையில் “எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்பட்டது’ என்று ஒரு வரி வரும். அதைப்போல் நான் ரஜினியிடம் கற்ற விஷயங்களை அவரது படத்திலேயே பயன்படுத்தி யிருக்கிறேன்.
உங்களை ஏமாற்றி விட்டதாக செய்திகள் வருகிறதே?
எல்லாமே பொய். என்னை நடிக்க கூப்பிட்டார்கள். நான் நடித்தால் கிரெடிட்ஸில் பெயர் போடுவதாகச் சொன்னார்கள். சொன்னபடியே பெயரும் போட்டார்கள். படம் முடிந்த உடனே எல்லோரும் எழுந்து போவதால் அதை கவனித்திருக்க மாட்டார்கள். படம் முடிந்த உடன் ஓடும் கிரெடிட்ஸில் ‘ரஜினிகாந்த் டூப் ஜீவா’னு என் பெயர் வரும்.
என்னை இசை வெளியீட்டு விழாவில் கூப்பிட்டு கௌரவிப்பதாகச் சொல்லி ஏமாற்றியதாகவும் சில செய்திகள் வரு கிறது. அதுவும் பொய்தான். செளந்தர்யா எனக்கு என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதை நிறைவேற்றிவிட்டார்.
‘கோச்சடையான்’ படப்பிடிப்பு தளததில் ரஜினிகாந்த் உங்களிடம் என்ன கூறினார்?
‘கோச்சடையான்’ படப்பிடிப்பு தளத்தில் ரவிக்குமார் சார், என்னை ரஜினி சாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘இவர்தான் ஜீவா. உங்களுக்கு டூப் போடுவதற்காக வந்திருக்கார்’ என்று சொன்னார். உடனே “ஜீவா.. ஹா.. ஹா..” என்று சிரித்தபடி கட்டி அணைத்துக்கொண்டார். ரஜினி சார், கே.எஸ்.ரவிக்குமார், நான் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். யாரை நமக்கு ரொம்ப பிடிச்சிருக்கோ, அவங்க பக்கத்துல போய் பேசினோம்ன்னா நம்மளோட எதிர்பார்ப்பு அப்படியே கம்மியாயிடும்னு சொல்லுவாங்க. அது ரஜினிகாந்த் விஷயத்தில் பொருந்தாது. அவர் நம்மளை அழைக்கிற விதம், எழுந்து நின்று புகைப்படம் எடுத்துக்கிற விதம் இப்படி நிறைய விஷயங்களைப் பார்க்கும்போது ‘ச்சே.. இது தான் தலைவன்’ அப்படிங்கிற உணர்வு வந்தது. அவர் மீதான அன்பு, பாசம், பக்தி, மரியாதை எல்லாமே எனக்கு 1000 மடங்கு அதிகமாயிடுச்சு.
உங்களுக்கு ரஜினிகாந்த் எதுவும் அறிவுரை கூறினாரா?
ஒரு தடவை மேக்கப் மேன் மூலமா என்னை அழைத்தார். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். ‘சார். நான் இதுவரைக்கும் சம்பாதித்தது எல்லாமே உங்களோட பெயரை வைச்சு, நடிச்சு சம்பாதித்ததுதான்’னு சொன்னேன். அதற்கு அவர் கையை மேலே காட்டிவிட்டு, “எல்லாமே கடவுள் கொடுத்தது. உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல உருவாக்கிக்கணும்” என்று சொன்னார்.
சின்ன வயசுல இருந்தே ரஜினி மாதிரியே நிகழ்ச்சிகளில் நடிக்கிறீர் களே... உங்களுக்கு போர் அடிக்கலயா?
ரஜினி சாரை மாதிரி மிமிக்ரி பண்ணித்தான் நான் வளர்ந்தேன். நிறைய நிகழ்ச்சிகளில் அவரை மாதிரி பண்ணித்தான் சம்பாதித்தேன். பள்ளியில் முதலில் டான்ஸ் ஆடியதே ‘சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா’ பாட்டுக்குதான். அதுக்கு நிறைய பரிசுகள் ஜெயிச்சேன். உடனே பக்கத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை கூப்பிட்டு, அவருடைய பள்ளியில் நடனமாட வைத்தார். முதல் பாட்டிலேயே எனக்கு அந்த அளவிற்கு பாராட்டு கிடைச்சது. இந்த விஷயங்களை எல்லாம் நான் ரஜினி சாரிடம் சொல்லியிருக்கேன்.
“எவ்வளவு வருஷமா என்னை மாதிரி பண்றீங்க” என்று ரஜினி சார் கேட்டார். 5 வயசுல இருந்து பண்றேன்னு சொன்னேன். “ஹா.. ஹா... மாத்த முடியாது இல்ல. இப்போ என்ன பண்றீங்க” என்று கேட்டார். “மாப்பிள்ளை விநாயகர் படத்தில் ஹீரோவா பண்ணிட்டு இருக்கேன் சார்” என்றேன். அதற்கு அவர், “சூப்பர் சூப்பர்.. நல்ல பண்ணுங்க. வாழ்த்துக்கள்" என்று சொன்னார்.
ரஜினி ரசிகர் ஜீவா என்று உங்களை அழைப்பதை விட ‘லொள்ளு சபா’ ஜீவான்னு தானே சொல்றாங்க?
விஜய் டி.வியில் பெரிய ஹிட்டான ஷோ ‘லொள்ளு சபா’. சந்தானம் என்ற ஒரு நடிகரால ஏற்கனவே வெற்றிகரமா ஓடிக் கொண்டிருந்த ஒரு குதிரை. அந்த குதிரைல என்னையும் ஏற்றி விட்டாங்க. நானும் அதை வெற்றிகரமா ஓட்டினேன். எப்பவுமே ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியை அழிக்கவே முடியாது. சந்தானம் படங்களில் காமெடியனா நடிக்க ஆரம்பிச்சதனால எல்லாருமே என்னைப் பாக்குறப்போ ‘இவனும் காமெடியனாக முயற்சி பண்றான்’னு நினைச்சுட்டாங்க. ஆனா, நான் ஹீரோவா நடிக்கணும்னுதான் திரையுலகிற்கு வந்தேன். இதுவரைக்கும் நான் நடிச்ச படங்களைப் பார்த்தீங்கன்னா, ஒரு பாத்திரமாதான் நடிச்சிருப்பேன்.
‘மாப்பிள்ளை விநாயகர்’ படம் ஏன் தாமதமாகுது?
‘முந்தானை முடிச்சு’ படத்தோட பார்ட் 2 தான் ‘மாப்பிள்ளை விநாயகர்’. ‘முந்தானை முடிச்சு’ படத்துல பாக்யராஜ், ஊர்வசி இரண்டு பேரோடயும் ஒரு சின்னக் குழந்தை இருந்தது இல்லையா? அந்தக் குழந்தை பெரியவனான பிறகு என்ன நடக்குதுங்கிறதுதான் ‘மாப்பிள்ளை விநாயகர்’. இதில் பாக்யராஜோட மகனா நான் நடிக்கிறேன். பாக்யராஜ், ஊர்வசி எல்லாருமே நடிக்கிறாங்க. இந்தப் படத்தில் சந்தானம் ஒரு கெஸ்ட் ரோல் பண்றார். பணப் பிரச்சினையால அந்த படம் கொஞ்சம் லேட் ஆகிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சம் நாளில் ஆரம்பித்துவிடுவோம்.
‘முந்தானை முடிச்சு’ முருங்கைக்காய் சமாச்சாரங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடருமா?
இதுலயும் முருங்கைக்காய் இருக்கு. குழந்தையைத் தாண்டி ஊர்வசி மேடம் பொய் சத்தியம் பண்ணினதால் அந்தப் பையனுக்கு கல்யாணம் ஆக மாட்டேங் குது. அவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க அப்படிங்கிறது தான் படமே. இந்தப் படத்தில் பாக்யராஜ் சார், “டேய்.. 30 வயசுல முருங்கைகாய் எல்லாம் நிறைய சாப்பிடணும்டா” என்று வசனம் பேசுவார். முருங்கைக்காய் விஷயங்கள் படத்தில் நிறையவே இருக்கு.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago