அரசியலுக்கு வராவிட்டாலும் 'அண்ணாத்த' வெற்றி பெறும்: ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை

By கா.சு.வேலாயுதன்

நான் ஒரு தடவை சொன்னா நூறுதடவை சொன்ன மாதிரி என பஞ்ச் வசனம் பேசும் ரஜினி ‘அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று ஏற்கெனவே சொன்ன செய்தியைத் திரும்ப ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துச் சொல்லியிருக்கிறார்.

ரஜினி ஏற்கெனவே சொன்னதைத் திரும்பச் சொல்ல இப்படி ஒரு கூட்டம் கூட்ட வேண்டுமா? அதை முன்கூட்டி அறிவித்து சஸ்பென்ஸ் வேறு வைத்திருக்க வேண்டுமா?’ என்று ரசிகர்கள் சிலர் கேட்டுள்ளனர். இல்லை, ‘இவருக்கு வியாபாரம் முக்கியம். 'அண்ணாத்த' தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு, அது ரசிகர்கள் ஆதரவு இல்லாமலே ஓட வேண்டும் என்பதை வெளிக்காட்டத்தான் இப்படியொரு திடீர் கூட்டம்!’ என்றும் சிலர் பேசுகின்றனர்.

அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று அறிவித்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை ஏங்க வைத்து, போன தேர்தலின் கடைசி நேரத்தில் கரோனாவைக் காரணம் காட்டி, இனி நான் அரசியலுக்கு வரப்போவதில்லை; கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அதில் ரொம்பவும் விரக்தியான ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்தனர். அதனால் ரஜினி கூடாரமே காலி எனப் பேசப்பட்டது.

கரோனாவை முன்னிட்டு, கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று சொன்ன ரஜினி, மற்ற தன் அலுவல்களைத் தள்ளிப்போடவோ முடக்கிப் போடவோ இல்லை. 'அண்ணாத்த' படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டார். தேர்தலில் வென்று முதல்வர் ஆன ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். குடும்பத்தோடு அமெரிக்க டூர் அடித்தார். தீபாவளியன்று 'அண்ணாத்த' படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்தார். ரஜினி அரசியலுக்கு ஏங்கி, இலவு காத்த கிளியாக காத்து ஏமாந்துபோன ரசிகர்கள் இதை வெம்பலோடுதான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் இன்று (12.07.21) ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அதன்படி ராகவேந்திரா மணடபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினி, ''நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை ரஜினி ரசிகர் மன்றமாக மாற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். காலசூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடபடப்போகும் என்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, சார்பு அணிகள் ஏதுமின்றி, இப்போதைக்கு ரஜினி ரசிகர் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும்!'' என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதையொட்டித்தான் ரஜினி ரசிகர்களிடமிருந்து கசகசவென்று சர்ச்சைக் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் சிலரிடம் பேசினோம்.

மாற்றுக் கட்சிக்கு இதே பேனரோடு செல்ல மாட்டார்கள்- கோவை ரவி

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் கோவை ரவி கூறும்போது, ‘‘தலைவர் இப்படி அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஏற்கெனவே வேறு கட்சியிலிருந்து அரசியல் பதவி நோக்கத்தோடு மன்றத்திற்கு வந்தவர்கள் இப்போது விலகி, விலகி பழைய கட்சிக்கோ மாற்றுக் கட்சிக்கோ செல்கிறார்கள். அப்படிச் செல்லும்போது ரஜினி மக்கள் மன்றம் பெயரிலேயே, நிர்வாகிகளாகச் செல்கிறார்கள் அது உண்மையான ரஜினி ரசிகர்களுக்கு மனதை என்னவோ செய்கிறது. கஷ்டமாகவும் இருக்கிறது. இப்போது மன்றத்தைக் கலைத்துவிட்டதால் இனிமேல் யாரும் அந்த பேனரில் இயங்க மாட்டார்கள். மாற்றுக் கட்சிக்கு அதே பேனரோடு செல்ல மாட்டார்கள். மற்றபடி இது 'அண்ணாத்த' படம் ஓட வேண்டும் என்று அவர் எடுத்த முடிவாக எங்களுக்குத் தோன்றவில்லை!’’ என்று தெரிவித்தார்.

இவ்வளவு பில்ட் அப் செய்திருக்க வேண்டியதில்லை - ஹக்கிம்

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளில் ஒருவருமான ஹக்கிம் பேசும்போது, ''நான் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்பதை முன்னர் சொன்னார். இனிமேலும் அது இல்லை என்பதை இப்போது சொல்லியிருக்கிறார் அதை இவ்வளவு பில்ட் அப் செய்திருக்க வேண்டியதில்லை. காரில் வருவதும், வரவேற்பதும், ராகவேந்திரா மண்டபத்தில் கூட்டம் போடுவதும், நிர்வாகிகளை அழைப்பதும் தேவையில்லை. ஒரு அறிக்கை மூலமே இதையும் சொல்லியிருக்கிறார். மற்றபடி இதன் மூலம் பாட்ஷாவோ, அருணாச்சலமோ, சந்திரமுகியோ எதுவானாலும் என் ரசிகர்கள்தான் படத்தை ஓட வைத்தார்கள். அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்பவர்களால் அது ஓடவில்லை என்பதைத் திரும்ப நிரூபிக்க முற்பட்டிருக்கிறார். நிச்சயம் 'அண்ணாத்த' படத்தை அவர் ரசிகர்கள்தான் வழக்கம்போல் வெற்றிப்படமாக ஆக்கப்போகிறார்கள். அதற்கான ரஜினியின் அறிவிப்புதான் இது!’’ என்றார்.

ரஜினி நம்பும் பெண் சென்டிமென்ட் பட உத்தி- அபு

மன்றத்தில் கலக்காத முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி அபு கூறும்போது, ‘‘எப்பவுமே ஒரு தன் படத்தை வெற்றிப்படமாக ஆக்க சில உத்திகளை ரஜினி செய்வது வழக்கம். முன்கூட்டியே அதை தீபாவளி, பொங்கல் ரிலீஸ் என்று அறிவிப்பதன் மூலம் ஒற்றை அறுவடை செய்ய நினைக்கிறார். ரஜினி படம் ரிலீஸ் என்றால் மற்ற படங்களை அதே நாளில் திரையிட மாட்டார்கள். அதற்காகத்தான் முந்திக் கொண்டு 'அண்ணாத்த' தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்தார். முன்பு 'பேட்ட', 'விசுவாசம்' படங்கள் 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஒரே நாளில் வெளியிட்டபோது இரண்டுமே நல்ல வசூலை ஈட்டித் தந்தன.

பொதுவாக ஒரு படம் பிளாப் ஆன நிலையில் அடுத்த படத்தை சாமன்ய டைரக்டர், நடிகர்களை வைத்துதான் கதாநாயகனாக நடிப்பார் ரஜினி. அதன் மூலம் தனக்காகவே படம் வெற்றியடைந்தது என்பதையும் நிரூபிப்பார். அப்படித்தான் 'பாபா' படம் பிளாப் ஆன நிலையில், அடுத்த படத்தை பெரிய டைரக்டர், பெரிய நடிகர்களை வைத்து எடுக்காமல் தன்னை முன்னிலைப்படுத்தி, பெண்ணை மையமாக வைத்து 'சந்திரமுகி'யில் நடித்தார். பெண் சென்டிமென்ட் எடுபட்டு வெற்றிப் படமாக மாறியது.

இப்போது அரசியலுக்கு ரஜினி வராததால் படம் பிளாப் ஆகும் என்பது பலரது எதிர்பார்ப்பு. அதை உடைக்கும் விதமாகத் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி பெண் சென்டிமென்ட் வைத்துப் படத்தை முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எனவேதான் பழையபடி தனக்காகவே படம் ஓடுகிறது. தன் ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தை திடீரென்று கூட்டி இப்படியொரு அறிவிப்பை அறிவித்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. படம் வரட்டும் பார்க்கலாம்...!'' என்றார்.

மொத்தத்தில் ரஜினி மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் கூட ரஜினியின் பங்குக்கு மக்களை குழப்பும் ஆற்றல் பெற்றவர்கள் என்பது அவர்களிடம் பேசியதில் தெளிவாகவே தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்