தமிழ் சினிமா வரலாற்றில் தனித்துவம் மிக்க திரைப்படங்களில் ஒன்றான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' வெளியான நாள் 2006 ஜூலை 8. நகைச்சுவை மன்னனாக ரசிகர்கள் மனங்களில் ஆட்சி செலுத்திவந்த வைகைப்புயல் வடிவேலு முழுநீளக் கதாநாயகனாக நடித்த முதல் படம்; ஒரு கார்ட்டூனிஸ்டாக இருந்து பின் வித்தியாசமான பல கதைக்கருக்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்த சிம்புதேவன் இயக்குநராக அறிமுகமான படம்; இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டத் தயாரிப்பில் உருவான மன்னர் காலக் கதைப் பின்னணி கொண்ட படம்; இப்படி எண்ணற்ற சிறப்புகளைக் கொண்ட இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்து மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாஸிக்காகவும் நிலைபெற்றுவிட்டது.
18ஆம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் ஒரு கற்பனையான மன்னராட்சி பிரதேசத்தில் நிகழ்வதாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருந்தார் சிம்புதேவன். பீரியட் செட்டிங்கில் தன்னுடைய முதல் திரைப்படத்தை அதுவும் ஷங்கர் போன்ற பெரும்புகழ் பெற்ற படைப்பாளியின் தயாரிப்பில் இயக்கும் வாய்ப்பைப் பெற்றதிலிருந்தே சிம்புதேவனின் அசாத்திய திறமையைப் புரிந்துகொள்ளலாம். ஒரு கார்ட்டூனிஸ்டாக சிம்புதேவனுக்கு இருந்த அபாரத் திறமையும் நெடிய அனுபவமுமே அவர் எந்த முதல் பட இயக்குநருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பைப் பெறுவதற்குப் பெரும்பங்காற்றின. தனக்குக் கிடைத்த வாய்ப்பை எதிர்பார்த்ததைவிட வெகு சிறப்பாகப் பயன்படுத்தி அனைவருக்கும் திருப்தியளிக்கும் திரைப்படமாக 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யை உருவாக்கி அளித்தார் சிம்புதேவன். வடிவேலுவின் மட்டற்ற நகைச்சுவையும் சிறப்பான நடிப்பும் சிம்புதேவனின் கனவை நனவாக்கும் வெற்றிக்கோட்டைக்கு அழைத்துச் சென்ற தேரின் இரண்டு குதிரைகளாகச் செயல்பட்டன.
படத்தின் தொடக்கக் காட்சியிலிருந்தே அதகளம் தொடங்கியது. அரண்மனைப் பட்டத்து ராணி, அரண்மனை மந்திரி, அரண்மனைப் பாதுகாவலர் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக எழுத்துகள் போடப்படும் வரிசையில் ஒரு தூணின் உச்சியில் ஓரமாக நகர்ந்துகொண்டிருக்கும் பல்லியை கேமராவில் ஃபோகஸ் செய்து 'அரண்மனை பல்லி' என்று எழுத்துகளைத் திரையில் காட்டியதிலிருந்தே ரசிகர்களை ஒரு மறக்கமுடியாத சிரிப்பு விருந்துக்குத் தயார்படுத்திவிடுவார் சிம்புதேவன். சுயபுத்தி இல்லாத, சுயநலம் மிக்க அரண்மனை சொகுசுகளை அனுபவிப்பதற்காகவே அரசனாக இருக்கும் இம்சை அரசன் புலிகேசியாக வடிவேலு அறிமுகமானவுடன் வரும் சிரிப்பு வெடிகள் ஒவ்வொன்றும் விண்ணைப் பிளக்கும் சிரிப்பொலியையும் கரகோஷத்தையும் எழுப்பின.
» ஓடிடியில் 'சார்பட்டா பரம்பரை': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
» மிர்ச்சி சிவா, யோகி பாபு, ஊர்வசி நடிக்கும் 'காசேதான் கடவுளடா' ரீமேக்
அரசன் புலிகேசி, அமைச்சர் மங்குனி பாண்டியன் ("நீர் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்"), ஒற்றன் வாதகோடாரி, புலவர் பாணபத்திர ஓணாண்டி எனக் கதாபாத்திரப் பெயர்களே நினைத்து நினைத்துச் சிரிக்க வைப்பவை. காட்சிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையை மட்டும் வாரிவழங்கவில்லை. மன்னர்களையும் மன்னர் ஆட்சி சமூகத்தையும் அந்தக் கால வாழ்க்கைமுறையும் விதந்தோதிய பழக்கப்பட்ட தமிழ் சினிமாவில் அந்தக் காலகட்டத்தில் நிலவிய அவலங்களையும் அபத்தங்களையும் பகடி செய்து மிகை புனைவுகளைக் கட்டுடைத்த முதல் திரைப்படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'.
அரசன் புலிகேசி, தன்னுடைய நிஜ உடலை மறைத்துக் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் இருப்பதுபோன்ற புனையப்பட்ட ஓவியத்தை வரையச் செய்யும் காட்சியில், “நாளை வரப்போகும் மடையர்களுக்கு நாம் எப்படி இருந்தோம் என்று தெரியவா போகிறது" என்று சொல்லும் வசனம் சாதாரணமானதல்ல. இதுபோன்ற எண்ணற்ற புனைவுகளையும் சேர்த்துத்தான் மன்னர் கால வரலாறு நம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் வசனம் அது. இதுபோல் சிரிப்பைத் தாண்டி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் பல வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தன.
ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதை விளையாட்டைப் போல் அனைவரும் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, அக்கமாலா, கப்சி போன்ற உடலைக் கெடுக்கும் உற்சாக பானங்கள். அவற்றுக்கு பிரபலங்கள் பலரும் விளம்பரத் தூதர்களாக இருப்பது, அரசு ஊழியர்களின் சோம்பேறித்தனம், திறனின்மை. அசிரத்தை, என மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிவரை தொடரும் பிரச்சினைகள் பலவற்றையும் நகைச்சுவை கலந்து வசனங்களால் கச்சிதமாகச் சாடியிருப்பார் சிம்புதேவன். மன்னர் புலிகேசியும் புரட்சிவீரன் உக்கிரபுத்தனும் ஒரே தாய்க்குப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள் என்னும் உண்மையை வெளிப்படுத்தும் இறுதிக்கட்டக் காட்சியில் 'இரட்டை வேடத் திரைக்கதையில் வேறு என்னதான் செய்துவிட முடியும்" என்று ரசிகர்களைப் பார்த்துச் சொல்வார் அரண்மனை ஜோசியராக நடிக்கும் வி.எஸ்.ராகவன். இதன் மூலம் தமிழ் சினிமா கிளிஷேக்களையும் கிண்டலடித்திருப்பார் சிம்புதேவன்.
புலிகேசியாக அதிகார மிடுக்கும் அப்பாவித்தனமும் மிக்க மன்னனின் உடல்மொழி, பிழையற்ற செந்தமிழ், வசன உச்சரிப்பு எனத் தன்னுடைய நகைச்சுவைப் பயணத்தில் புதிய உச்சத்தையும் நடிப்புப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லையும் தொட்டிருப்பார் வடிவேலு. ஒரு காட்சியில் கரடியால் காறி உமிழப்பட்டு உடல் முழுவதும் உமிழ்நீரால் சூழப்பட்டு நிற்பார் வடிவேலு. நகைச்சுவை நடிப்புதான் என்றாலும் ரசிகர்களை மகிழ்விக்க தன் திரை ஆளுமையை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தாழ்த்திக்கொள்ளத் தயங்காத வடிவேலுவின் மகத்துவத்தை உணர்த்தும் காட்சி அது. புலிகேசியுடன் பிறந்த இரட்டைச் சகோதரனாக 'நாடோடி மன்னன்' எம்ஜிஆர், 'உத்தமபுத்திரன்' சிவாஜி கணேசனை நினைவுபடுத்தும் உக்கிரபுத்தன் என்னும் புரட்சி வீரன் கதாபாத்திரத்தில் நாயகத்தன்மை மிக்க கதாபாத்திரத்திலும் குறைசொல்ல முடியாத வகையில் நடித்திருப்பார்.
மன்னனை ஆட்டிப்படைக்கும் கயமையும் சுயநலமும் மிக்க மாமனாக நாசர், அமைச்சராக இளவரசு என முதன்மைத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அரசனின் அன்னையாக மனோரமா, தந்தையாக நாகேஷ், அரண்மனை ஜோசியராக வி.எஸ்.ராகவன், அரண்மனைக் காவலனாக சிசர் மனோகர், அரண்மனை ஆயுதங்களைத் தயாரிப்பவராக மனோபாலா, படையெடுத்துவரும் எதிரிநாட்டு மன்னனாக தியாகு, புலவராக சிங்கமுத்து, ஒற்றனாக முத்துக்காளை என ஒருசில காட்சிகளில் வந்து செல்கிறவர்களுமாகச் சேர்ந்து இந்தப் படத்தை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதற்குப் பங்களித்தனர். சபேஷ்-முரளியின் இசை, ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் நகைச்சுவைத் தன்மையை உள்ளடக்கிய பிரம்மாண்டத்துக்குப் பொருத்தமாக அமைந்திருந்தன. அரண்மனை, அந்தப்புரம், பாதாளச் சிறைகள், யுத்தகளம், போட்டிகள் நடக்கும் ஆடுகளங்கள், தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்காக தோண்டப்படும் பிரம்மாண்டக் கிணறு, என நம்மை மன்னராட்சி நிலப்பகுதிக்கே அழைத்துச் சென்ற கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி திரையில் முகம் காட்டாத இன்னொரு கதாநாயகன்.
ஒரு அறிமுக இயக்குநரின் திறமையையும் கதையையும் நம்பி இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தில் முதலீடு செய்து படத்தைச் சிறப்பாகச் சந்தைப்படுத்தி வெளியிட்டு வெற்றியை உறுதி செய்த தயாரிப்பாளர் ஷங்கர் பெரும் பாராட்டுக்குரியவர்.
'இம்சை அரசன்' வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் இந்தப் படத்தின் காட்சிகளும் வசனங்களும் கதாபாத்திரங்களும் அப்படியே நினைவில் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் சரித்திரப் படங்கள் எடுக்கப்படுவது கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட காலத்தில் 90ஸ் கிட்ஸையும் 2கே கிட்ஸையும் கவரும் வகையில் ஒரு மன்னராட்சி காலத் திரைப்படத்தை எடுத்தது தமிழ் சினிமா வரலாற்றில் ஒப்பற்ற சாதனை என்று சொல்லலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago