ஜூன் 24, 1927: கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்
வாழும்போது வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி உலா வருகிற, தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். காலத்தால் மறக்க முடியாத காவியங்களைத் தன் திரைப்படப் பாடல்களில் கரைத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட மாபெரும் கவிஞன்.
'படித்தால் மட்டும் போதுமா' என்ற படத்தில் 'நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை'... என்ற பாடல் திரைப்படச் சூழலுக்காக கவியரசு கண்ணதாசனால் எழுதப்பட்டது என்றாலும், அவரது பாடல்கள் மீது பற்று கொண்ட லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வரிகள் கண்ணதாசனின் "அவை அடக்கம்" என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்தப் பாடலில் பொருட்பிழை இருப்பதாகவே எண்ணிக்கொள்வார்கள்.
திரையுலக கம்பனாக, வள்ளுவனாக வற்றாத கற்பனையுடனும், வளமான கருத்துகளுடனும் வலம் வந்த கண்ணதாசன், முத்தையாவாக சூல்கொண்டது சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில்.
» பெட்ரோல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் ரூ.100-யை நெருங்குகிறது
» கல்வராயன்மலையில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பு; ஒருவர் கைது
1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி இந்தக் கவிதை கதிரவனுக்கு சிறுகூடல்பட்டி கிழக்கானது. சாத்தப்பனார் - விசாலாட்சி ஆச்சி தம்பதியினருக்கு 8-வது பிள்ளையாகப் பிறந்தார் முத்தையா. வணிகர் மரபில் பிறந்த கண்ணதாசனுக்கு ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில் அமைந்தது. என்னதான் பள்ளிக் கல்வியைப் படித்தாலும், வாழ்க்கைக் கல்வி, சமூகத்தில் தான் கிடைக்கும் என்பதாலோ என்னவோ, அவரது உயர்கல்வி எட்டாம் வகுப்போடு அவரை விட்டு தூரச் சென்றுவிட்டது.
ஒவ்வொரு படைப்பிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் நிச்சயமாக இருக்கும். பொழிப்புரை தெரியாத செய்யுளைப் படித்துவிட்ட மாணவன் போல, நம் படைப்பு எதற்காக? என்ற குழப்பம்தான், ஏராளமானவர்களுக்கு வந்திருக்கிறது. கண்ணதாசனும் அப்படித்தான். வணிகர் மரபில் பிறந்துவிட்டதால் வட்டிக்கடை நடத்தலாமா? இல்லை வேலைக்குப் போகலாமா? தெளிவான நிலை பிறக்காதபோது, குழப்பம் எப்படி விலகும்?
ஏட்டுச் சுரைக்காய் எட்டாவது படிப்போடு நின்றுவிட்டது. ஆனால், ஞானமோ கைகட்டி சேவகம் செய்தது கண்ணதாசனுக்கு. அவர் நாக்கில் சுவைத்து வெளிவந்த வார்த்தைகள் தமிழை மேலும் அழகாக்கியது. 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னதுபோல், கண்ணதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர்.
சொந்த மண்ணைவிட்டு சென்னை வந்த கண்ணதாசன், பார்க்காத பணிகள் இல்லை. நதிக்குள் சமுத்திரத்தை அடைக்க முடியுமா? கண்ணதாசன் கடல், அந்தக் கடலில் இருந்து பொங்கி வந்த கவிதை அலைகள் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாமல், ஓங்கி உயரமாக எழுந்துகொண்டே இருந்தன. மனக்கரையை முட்டி முட்டி, ஈரமான நினைவுகளைப் பதியவைத்துக் கொண்டிருந்தன.
தன் திறமையைத் தீட்டிக்கொள்ள திரைப்படம் என்ற சாணைக்கல்தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்த கண்ணதாசன், திரைப்பட வாய்ப்புகளைத் தேடிப்போனார். வாழ்க்கை என்ற பரமபதத்தில், தாயக்கட்டைகள் உருட்டப்படும்போது, ஒரு சிலருக்குத்தான் ஏணி கிடைக்கிறது. வெற்றி கிடைக்காதா? என ஏங்கித் தவிக்கும் பலருக்கு, பாம்புகளின் பார்வைதான் பரிசாய்க் கிடைக்கிறது. வாழ்க்கையும், விளையாத தரிசாய்க் கிடக்கிறது. அனுபவம் தந்த பாடல்தான் 'உன்னைச்சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை' என எழுதவைத்ததோ?
திரைப்படத் துறை பல அவமானங்களையும், அனுபவங்களையும் கண்ணதாசனுக்குக் கற்றுக் கொடுத்தன. பல முயற்சிகளுக்குப் பிறகு, கனவுத் தொழிற்சாலையின் கம்பீரமான கதவு கண்ணதாசனுக்கு மெல்லத் திறந்தது. கால் பதிக்க இடம் கிடைத்தது. கண்ணதாசனோ, அதில் கவிதை பதித்தார். ஜுபிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி" என்ற திரைப்படத்தில் "கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே" என்பதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் பாட்டு. முதல் பாடலிலேயே, உடைந்துபோன உள்ளங்களுக்கு ஒத்தடம் கொடுக்கின்ற ஆறுதலான வரிகள்.
பின்னர், பாட்டுப் பல்லக்கில் பயணம் செய்த இந்த ராஜ கவிஞனின் படைப்புகள்தான் எத்தனை எத்தனை?. காதலா? வீரமா? பாசமா? தாலாட்டா? அரவணைப்பா? ஆறுதலா? மனிதனின் ஒவ்வொரு உணர்வுக்கும் கண்ணதாசனின் ஒரு பாட்டு கைபிடித்து நடந்தது. 'உன் கண்ணில் நீர்வழிந்தால்... என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி' - இந்தப் பாட்டு கண்ணீர் துடைத்தது.
'காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்' - இந்தப் பாட்டு காயங்களுக்கு மருந்திட்டது.
'ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன' - இந்தப் பாட்டு காதல் சொன்னது.
'நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா?' - இந்தப் பாட்டு பிரிவுத் துயரத்தைப் பேசியது.
'காதல் சிறகைக் காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா' - பிரிந்தவர் இணைகையில், பீறிட்டு எழும் அழுகையின் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது இந்தப் பாட்டு.
'மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழி வண்ணமே' - மனதையும், உடலையும் வாஞ்சையுடன் வருடும் தென்றலை, மயிலிறகால் வருடி தலைகோதியது இந்த வரிகள்.
'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...' - குறையோடு பிறந்ததால் அநாதையாக்கப்பட்டவன், ஆண்டவனை நோக்கி அறைகூவல் விடுத்ததை விளம்பியது இந்தப் பாட்டு.
'சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ?' - மகப்பேறு என்ற மருத்துவத்தை கவிதை மொழியில் கற்றுக்கொடுத்தது இந்தப் பாடல்
பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவி - திருமணத்தையே நடத்தி முடித்து வைத்தது இந்தப் பாட்டு.
ஆலயமணியின் ஓசையை
நான் கேட்டேன் - அழகான அதிகாலையை அர்த்தமுள்ளதாக்கி மேலும் அழகாக்கிக் காட்டியது இந்தப் பாடல்.
'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறை வருமோ' - கம்பீரமாகக் கால்பதித்து நடந்து வரவேண்டிய தன்னம்பிக்கை, தாழ்வு மனப்பான்மையால் தவழ்ந்து வந்தபோது, அள்ளி அணைத்து ஆதரவுக் கரம் நீட்டியது இந்தப் பாடல்
இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள். கண்ணதாசனின் கற்பனையில் வற்றாத நதியாய் ஊற்றெடுத்துக் கிளம்பின. அவரது பாடல் இடம்பெற்றதாலேயே தமிழின் பல வரிகளுக்குத் தனி கவுரவம் கிடைத்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி அரசியலுக்கு, தன் பாட்டு அரசியலில் அடிக்கல் நாட்டியவர் கண்ணதாசன்.
உலகம் பிறந்தது எனக்காக, அச்சம் என்பது மடமையடா, நாடு அதை நாடு, அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே - பாடல்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு அடிக்கற்களாக அமைந்தன.
பெண், துன்பங்களை கருத்தாங்கி, இன்பங்களைப் பிரசவிக்கும் இயற்கையின் இனிய அதிசயம். உலகத்தை ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்துவைக்கும் உறவின் அவசியம். எல்லையற்ற அன்பின் நிதி மூலம். எல்லாவற்றுக்கும் அவள்தான் நதிமூலம். பெண்மையைப் போற்றியவர் கண்ணதாசன்.
பூவும் பொட்டும் படத்தில் வரும் 'உன் அழகைக் கண்டுகொண்டால், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் வரும் இளமை கொலுவிருக்கும்' பாடல்கள் இதற்குச் சான்று.
சிட்டுக்குருவியைப் போல விட்டு விடுதலையாக வேண்டும் என்ற பாரதியின் சுதந்திரக் காற்றைப் பாட்டு வானில் சஞ்சரிக்கவிட்ட கண்ணதாசன். பெண்மையின் உயர்வையும், தன்பாட்டில் உயர்த்திப் பிடித்தார்.
'சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு' பாடலில் 'ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்' என்ற மகாகவியின் பாடலை, பாமரர்களுக்கும் மொழி பெயர்த்துக் கொடுத்தது.
உன்னை ஒன்று கேட்பேன், உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல, நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ?, பார்த்த ஞாபகம் இல்லையோ, நெஞ்சம் மறப்பதில்லை, சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் - கண்ணதாசனின் காதல் பாடல்களின் பல்லவிகள், இளைஞர்கள் தங்கள் காதலிக்கு எழுதும் காதல் கடிதங்களுக்குத் தலைப்புகளாக மாறின.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? - பாடலில்
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா - என்றெல்லாம் பாடி கம்பனை, வள்ளுவனை, இளங்கோவடிகளை உருக்கி, உவமை பொருத்தி நகை செய்து, அதைப் பாமரனுக்கு அணிவித்த பொற்கொல்லர் கண்ணதாசன். இலக்கியங்களின் சாறெடுத்து, கல்வி பயிலாத எளியவர்களுக்கும், கவிதை கற்றுத்தந்த கவிதை ஆசான்.
'பாடத்திட்டத்தில்' இருந்தபோது பரவசம் ஏற்படுத்தாத கம்பராமாயணம், கண்ணதாசனின் 'பாட்டுத்திட்டத்தில்' படர்ந்தபோது எல்லையில்லா இன்பத்தை வழங்கியது. கம்பனை மொழிபெயர்த்த திரையுலகக் கம்பன் கண்ணதாசன்.
''இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இவ்வுலகுக்கெல்லாம்
உய்வண்ணம் ஒன்றே அன்றி, துயர் வண்ணம் உறுத்தல் உண்டோ?
மை வண்ணத்து அரக்கிப்போரில் மழைவண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்கு கண்டேன்! கால் வண்ணம் இங்கு கண்டேன்''
-என்று கம்ப ராமாயணத்தில் கம்பன் கையாண்ட கை வண்ணம். கம்பனை அப்படியே உள்வாங்கிக்கொண்ட கண்ணதாசனின் கற்பனை வண்ணம் இந்த பாடல்தான், பாசம் படத்தில் வரும் 'பால் வண்ணம் பருவம் கண்டு' என்ற பாடல்.
'அன்று வந்ததும் இதே நிலா', 'வான் நிலா நிலா அல்ல', 'அத்திக்காய் காய்', 'பார்த்தேன் சிரித்தேன்', 'எந்த ஊர் என்றவனே' - எத்தனை எத்தனை நிலா, எத்தனை எத்தனை காய், எத்தனை எத்தனை தேன், எத்தனை எத்தனை ஊர் கண்டவர் கண்ணதாசன்.
"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்" என்ற சோஷலிசம் பெற்றெடுத்த தலைச்சன் பிள்ளையை பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி வளர்த்தவர் கண்ணதாசன்.
'வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்' - தற்கொலை எண்ணம் தலைதூக்கும் போதெல்லாம் தூரத்தில் இருந்து ஒலிக்கும் கண்ணதாசனின் இந்த பாடல், அவனது தற்கொலை எண்ணத்தையே கொலை செய்துவிடும், வாழ்க்கைப் பாதையில் மீண்டும் அவனைத் தடம்பதிக்க வைத்துவிடும்.
'போனால் போகட்டும் பாடல், 'வீடுவரை உறவு', 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்', 'சட்டி சுட்டதடா' -வாழ்க்கையின் நிலையாமையைக் கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் இப்படி பாட முடியும்?
சக கவிஞரான வாலி என்ற பாட்டு வல்லரசை, கவிஞனாய் காலூன்றச் செய்தது கண்ணதாசனின் பாடல். திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து, பாட்டு வாழ்க்கைக்கு சென்னைக்கு வந்த வாலி, பாடுகள் பட்டபின், பாட்டு இனி செல்லாது என எண்ணி சொந்த ஊருக்கே தயாரானபோது, கண்ணதாசனின் இந்தப் பாட்டுதான் அவரைத் தடுத்து நிறுத்தியது. தமிழ்த் திரையுலகில் இன்னும் அழுத்தமாய் அவரைத் தடம் பதிக்க வைத்தது. இன்றுகூட, ஏன்? இனி வரும் காலங்களில் கூட இந்தப் பாடல் சொல்லிக்கொடுக்கும் தன்னம்பிக்கை எந்தப் பல்கலைக்கழகமும் பயிற்றுவிக்காது என்பது தான் உண்மை. அதுதான் 'சுமைதாங்கி' படத்தில் வரும் 'மயக்கமா? கலக்கமா?' என்ற பாடல்.
பள்ளிகள் உருவாக்கி எளியோருக்கும் ஏற்றமிகு கல்வி தந்த பெருந்தலைவர் காமராஜரோடு, கண்ணதாசனுக்குப் பிணக்கம் ஏற்பட்டது ஒருசமயம். நிலையில்லா மனதையும், நிலைபெற்ற புகழையும் கொண்ட கண்ணதாசன், பிணக்கத்தை இணக்கமாக்க, விட்ட தூதுதான் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி' பாடல்.
ரசனையுள்ள எவருக்கும், நகைச்சுவை ரசனை ஒட்டிக்கொள்வதில் ஆச்சரியம் இல்லை. ஒரு கவிஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்க வேண்டும். கல்லூரி விழா ஒன்றில் உரை நிகழ்த்த சென்ற கவியரசு கண்ணதாசன், ஒலிவாங்கியைப் பிடித்து "பெரியோர்களே, கல்லூரி முதல்வரே, பேராசிரியர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்" என உரையைத் தொடங்கியபோது, திடீர் சலசலப்பு. பேச்சை நிறுத்திய கண்ணதாசன் சலசலப்பு வந்த பக்கத்தை நோக்கிப் பார்க்கிறார். கல்லூரி விழாவில் பேசவந்து, முதல்வர், பேராசிரியர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, மாணவர்களுக்கு வணக்கம் சொல்லவில்லையே. என்றுதான் அந்த சலசலப்பு. இதனைப் புரிந்துகொண்ட கண்ணதாசன், தொடங்கிய உரையை இப்படித் தொடர்ந்தார். "நான் பெரியவர்களே என்று அழைத்தது உங்களைத்தான்" என மாணவர்களைப் பார்த்து கூற, அரங்கமே அதிர்ந்தது. சூழ்நிலைகளுக்குப் பாட்டெழுதும் கண்ணதாசனுக்கு சூழ்நிலைக்கேற்ப பேசக் கற்றுக்கொடுக்கவேண்டுமா?. மாணவர் இயக்கங்கள் தோன்றி, வலுவாகக் காலூன்றிய காலமது.
பக்தி இலக்கிய ரசத்தைப் பண்டிதர்கள் மட்டுமே பருகிக் கொண்டிருந்த காலத்தில், பாமரர்களுக்கும் அறுசுவை விருந்து படைத்து அமுதூட்டியவர் கண்ணதாசன்.
இயக்குநர் ஏ.பி.நாகராஜன், திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், கவியரசர் கண்ணதாசன் கூட்டணி, பக்திப் படங்கள் மூலம் தமிழை வளர்த்தனர்.
'பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா' - பிள்ளைத்தமிழ் போல, கவியரசரின் முல்லைத் தமிழ், மூலைமுடுக்கெல்லாம் மணம் வீசி மக்களை மயங்கவைத்தது. ஒரு காலத்தில், பருவப் பெண்களின் பாரம்பரிய உடையாக இருந்த பாவாடை தாவணி, இப்போது, தாவணிக் கனவுகளாக மட்டுமே இருக்கிறது.
கேள்விகள் இல்லாமல் இங்கு எதுவுமே இல்லை. பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதாலே என்றான் வாலிபக் கவிஞன் வாலி. விடை தெரியாத பல கேள்விகள் தான், சில சமயம் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. பல கேள்விகள் வாழ்க்கையை சுமையாக்குகின்றன. அதைத்தான்
'கேள்வியின் நாயகனே - இந்த
கேள்விக்கு பதில் ஏதைய்யா' - பாடல் மூலம் விளக்கினார் கண்ணதாசன்.
கண்ணதாசனின் படைப்புகளில் "அர்த்தமுள்ள இந்து மதம்" 4 வேதங்களைத் தாண்டி 5-வது வேதமானது. இயேசு காவியமோ 2-வது பைபிள் ஆனது. வனவாசமோ, கண்ணதாசனின் நிர்வாணத்தை அழகு தமிழ் ஆடை கட்டிவிட்டு மறைத்தது. சேரமான் காதலி, சாகித்ய அகாடமி விருது பெற்று தந்தது. கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மேடைப் பேச்சாளர் போன்ற பன்முகத்தன்மை, கண்ணதாசனிடம் கம்பீரமாகக் குடியிருந்தது.
அரசியல் களத்தில் கண்ணதாசன் பொம்மையைப் போல உருட்டி விளையாடப்பட்டாலும், ஒரு கவிஞனுக்குள்ள நேர்மையால் அந்த பொம்மலாட்டத்தை சவாலோடு அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கண்ணதாசனின் கவிதையில் வெண்பா, வெற்றிப் பா ஆனது. அறுசீர் விருத்தமோ, அழகியலை ஆடையாய் அணிந்துகொண்டது. செப்பு மொழிகளோ வாழ்க்கையின் தத்துவத்தை எதார்த்தமாக சித்தரித்தது.
தமிழர்களின் உணர்வுகளில் பாடலாக, கவிதையாக கலந்துவிட்ட கண்ணதாசன், உடல்நலக் குறைவு காரணமாக 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தனது கடைசி சுவாசத்தை நிறுத்திக்கொண்டார். மரணம் மாமனிதர்களை என்ன செய்துவிட முடியும்? மக்கள் மனங்களில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மகோன்னத மனிதர்களிடம்தான், மரணம் கூட தோற்றுவிடுகிறது. ஆம் கண்ணதாசனிடமும் மரணம் தோற்றுவிட்டது. காரணம், கவிஞனில் கண்ணதாசன் ஒரு காலக்கணிதம். மரணத்தையும் தோற்கடித்த மகா கவிஞன்.
கட்டுரையாளர்: லாரன்ஸ் விஜயன்,
மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: vijayanlawrence64@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago