நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற திரை ஆளுமை 

By ச.கோபாலகிருஷ்ணன்

நட்சத்திர நடிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும். ஆனால் தன்னை எந்த நடிகரின் ரசிகராகவும் அடையாளப்படுத்திக்கொள்ளாத பொதுவான சினிமா ரசிகர்களையும் கவரும் நட்சத்திரங்களே உச்ச நட்சத்திரமாக உயர முடியும். இப்படியாக எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் என உச்ச நட்சத்திரங்களின் வரிசையில் வருகிறவர் ரசிகர்களால் அன்புடன் 'தளபதி' என்று அழைக்கப்படும் நடிகர் விஜய். அவர் இன்று (ஜூன் 22) தன்னுடைய 47ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதைவிட முக்கியமாக அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்கள் ஒரு மாபெரும் திருவிழாவைப் போல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். வயது வெறும் எண்தான் என்பதுபோல் அவருடைய தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் இளமை அப்படியே நீடிக்கிறது!.

வெற்றிப் பயணத்தின் குதிரைகள்

1992இல் வெளியான 'நாளைய தீர்ப்பு' விஜய்யைக் கதாநாயகனாக களமிறக்கியது. தொடர்ந்து 'ரசிகன்' உள்ளிட்ட ஒரு சில வெற்றிப் படங்கள் அமைந்தன. ஆனால் 90களில் புகழ்பெற்ற ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த 'பூவே உனக்காக' விஜய்யின் திரைப்பயணத்தில் முதல் திருப்புமுனையாக அமைந்தது.

குறிப்பாக குடும்ப உறவுகளிடையிலான சென்டிமெண்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக அமைந்திருந்த அந்தப் படத்தில் நடித்தது விஜய்யை கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் வசிக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்தது. அடுத்ததாக கிளாஸ் ரசிகர்களின் மதிப்பைப் பெற்ற இயக்குநர் பாசிலுடன் இயக்கத்தில் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை', தமிழ் சினிமாவின் தரமான காதல் படங்களில் ஒன்றாக நிலைபெற்றது. இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றியின் மூலம் விஜய் நகர்ப்புற ரசிகர்களையும் ஈர்த்தார்.

இவற்றைத் தொடர்ந்து 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற பெரு வெற்றிபெற்ற ஜனரஞ்சக காதல் படங்களால் விஜய் தமிழ் குடும்பங்களில் ஒருவரானார். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவரையும் கவர்ந்தார்.

காதல் படங்களில் டூயட் பாடல்களில் விஜய்யின் தோற்றம், நடனம், க்யூட்டான முக பாவனைகள். உடல்மொழிகள் என ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கதாக இருந்தன. அவருடைய அபாரமான தனித்துவம் மிக்க நடனத் திறமை அவருக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உருவானதற்கான மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

நிஜத்தில் அதிகம் பேசாதவராகத் தோன்றினாலும் திரையில் நகைச்சுவைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புவார். 'மின்சார கண்ணா', 'வசீகரா' போன்ற படங்களில் நகைச்சுவைக் கலைஞரின் துணை இல்லாத காட்சிகளில்கூட ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அதை மிகச் சரியாக வெளிப்படுத்துவதற்கான டைமிங் சென்ஸும் கைவரப்பெற்றவர் விஜய். இன்றுவரை மெருகேறிக்கொண்டே போகும் நடனத் திறமையும் நகைச்சுவைத் திறமையும் விஜய்யின் பிரம்மாண்ட திரைப் பயணத்தின் வெற்றியை ஓட்டிச் சென்ற இரண்டு குதிரைகள் எனலாம்.

நிலைநிறுத்திய நான்கு வெற்றிகள்

'குஷி', 'ப்ரியமானவேளே', 'ஃப்ரெண்ட்ஸ்', 'பத்ரி' என வெவ்வேறு வகைமைகளில் விஜய் நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. இவற்றில் 'குஷி' காதல் நாயகனாக அசத்தியிருப்பார் 'ப்ரியமானவளே' படத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் நவீன இளைஞனாக ரசிக்க வைத்திருப்பார். 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படத்தில் நகைச்சுவை மற்றும் எமோஷனல் நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பார். 'பத்ரி'யில் ஒரு பொறுப்பற்று திரையும் லவ்வர் பாயாகவும் சூழ்நிலையால் பாக்ஸிங் பந்தயத்துக்குத் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு வெற்றிபெறும் வீரராகவும் கலக்கியிருப்பார். இந்த நான்கு படங்களின் வெற்றி விஜய்யைத் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக நிலைநிறுத்தின.

அசாத்தியமான ஆக்‌ஷன் நாயகன்

'பகவதி', 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி','சிவகாசி', 'போக்கிரி' போன்ற படங்களின் வெற்றியால் ஒரு அசாத்தியமான ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த வரிசையில் 'கில்லி', 'போக்கிரி', 'திருப்பாச்சி' ஆக்‌ஷன் மட்டுமல்லாமல் காதல், குடும்ப சென்டிமெண்ட், நகைச்சுவை, பாடல்கள் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் உள்ளடக்கி அனைத்து வயது ரசிகர்களையும் மகிழ்வித்த பக்கா ஃபேமிலி எண்டர்டெய்னர் படங்களும்கூட. ஆகவே இவை மிகப் பெரிய வசூலைக் குவித்து விஜய்யின் நட்சத்திர மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின.

மாஸ்+கிளாஸ் வெற்றிப் பயணம்

கடந்த 10-12 ஆண்டுகளில் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்கள் மாஸ் ரசிகர்களை மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சினைகளைப் பேசிய கதைக்களம், புதுமையான திரைக்கதை திருப்பங்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என கிளாஸ் அம்சங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்துவந்தவர் திடீரென்று 'காவலன்' படத்தில் மென்மையான காதலனாக நடித்தார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் முதல் முறையாகக் கைகோத்து '3 இடியட்ஸ்' ரீமேக்கான 'நண்பன்' படத்தில் நடித்து அமீர் கான் இந்தியில் நிகழ்த்திய மேஜிக்கை தமிழில் தன் பாணியில் நிகழ்த்திக்காட்டினார். இந்த படத்தில் விஜய்க்கான மாஸ் அம்சங்கள் எதுவுமே இல்லை ஆனால் விஜய்யை மட்டுமல்லாமல் படத்தையும் முழுக்க முழுக்க ரசிக்க முடிந்தது.

தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்க்கார்' ஆகிய படங்களில் தீவிரவாதம், விவசாயிகள் பிரச்சினை, அரசியல் மாற்றம் என சமூக அக்கறைக்குரிய விஷயங்களைப் பேசும் திரைப்படங்களை அளித்தார். இந்தப் படங்கள் விஜய்யின் மாஸ் இமேஜுக்கு நியாயம் செய்ததோடு அவருடைய இமேஜை பன்மடங்கு உயர்த்துபவையாக அமைந்திருந்தன. இளம் இயக்குநரான அட்லியுடன் இணைந்து 'தெறி',''மெர்சல்', 'பிகில்' என மூன்று ஜனரஞ்சக படங்களைக் கொடுத்தார். இவற்றிலும் பெண்களுக்கெதிரான வன்முறை. மருத்துவத் துறையில் லாப நோக்கம், விளையாட்டுத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என சமூகப் பிரச்சினைகளைப் பேசுவதாக இருந்தன.

அதிசயிக்கவைத்தத மாஸ்டர்

இளம் இயக்குநர் 'மாநகரம்', 'கைதி' போன்ற கமர்ஷியல் சட்டகத்துக்குள் மாறுபட்ட திரைக்கதையைக் கொண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவருமான லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைந்த 'மாஸ்டர்' படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுமையான விருந்து. இந்தப் படத்தை விஜய்யின் கடந்த பத்தாண்டு பயணத்தின் தொடர்ச்சி என்றும் சொல்லலாம். அதோடு அதிலிருந்த பல ஆச்சரியங்களால் அது விஜய்யின் அடுத்த கட்ட பயணத்துக்கான முன்னோட்டம் என்றும் சொல்லலாம்.இந்தப் படத்தில் விஜய்க்கு இணையான முக்கியத்துவத்துடன் அமைந்திருந்தது வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்.

அதே நேரம் விஜய்க்கான முக்கியத்துவம் குறையவில்லை. விஜய் ரசிகர்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருந்தன. அதே நேரம் ப்ரொஃபசர் ஜே.டி என்னும் விஜய்யின் கதாபாத்திரம் எப்போதும் குடிபோதையில் இருப்பவராக. கவனக்குறைவு கொண்டவராக, தவறுகளைச் செய்பவராக இழப்புகளை எதிர்கொண்டு அழுபவராகக் குறைகளுடனும் பலவீனங்களுடனும் வடிவமைத்திருந்ததும் அதை விஜய் வெகு சிறப்பாகக் கையாண்டிருந்ததும் அனைவரும் அவரை இன்னும் நெருக்கமானவராக ஆக்கியது.

இதன் மூலம் மாறுபட்ட கதைகளில் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தன்னிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் சமரசம் செய்யாமல் புதுமைகளைச் செய்யவும் அவருக்கு இருக்கும் விருப்பம் மேலும் அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகளை வெற்றியடையச் செய்யும் திறமையும் வலிமையும் அவருக்கு இருப்பது 'மாஸ்டர்' படத்தின் பிரம்மாண்ட வசூல் நிரூபிக்கிறது.

தற்போது மற்றொரு இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். இதன் முதல் பார்வை அவருடைய பிறந்தநாளை ஒட்டி நேற்று மாலை வெளியானது. இதன் மூலம் விஜய்யின் பிறந்தநாள் பலமடங்கு விமரிசையாகவும் மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் கொண்டாடத்தக்கதாக ஆகியுள்ளது.

மதிப்புக்குரிய பொதுவாழ்வு

சமூக ஊடகங்களில் விஜய்யின் புகைப்படத்தை dpஆக வைத்திருக்கும் விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல பொதுவாக சினிமாவைப் பற்றியே எதுவும் பதிவிடாதவர்கள்கூட விஜய்யின் திரைப்படம் வெளியானபிறகு அதைப் பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை புகைப்படம் எடுத்துப் பதிவிடுவார்கள். படத்தைப் பற்றி எழுதுவார்கள். விஜய் பிறந்தநாள் அன்று விஜய்யைப் புகழும் பதிவுகளையும் எழுதுவார்கள். அந்த அளவு சினிமாவை எப்போதாவது நுகரும் கேளிக்கைப் பொருளாகக் கையாள்பவர்களிடம் கூட ஒரு பிணைப்பைப் பாசத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் விஜய். 30 ஆண்டுகளை நெருங்கும் பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அவருடைய திரைப்பயணமும் கடந்த பத்து ஆண்டுகளில் அருமையான கதைத் தேர்வுகள் எல்லா வகைகளிலும் இளமையைத் தக்கவைத்தல் அனைத்து வகையான ரசிகர்களையும் கவரும் அம்சங்களை வளர்த்துக்கொள்தல் என படிப்படியாக முன்னேறி உச்சநிலையை அடைந்திருப்பதும் அவருடைய தொழில்சார்ந்த சாதனையாளர் என்கிற மதிப்பை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

அதே நேரம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ரசிகர்களுக்கு அன்புடன் அறிவுரை கூறி நல்வழிப்படுத்துவது அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையிலும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் வாழ்க்கை குறித்த நேர்மறைப் பார்வையை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலும் பேசுவது தமிழக மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நேரடியாகவும் குறியீட்டு ரீதியாகவும் குரல் கொடுப்பது, பல வகைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருளுதவிகளைச் செய்வது முதல் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவதுவரை பக்கபலமாக நிற்பது. என விஜய்யின் திரைக்கு அப்பாற்பட்ட ஆளுமையும் எல்லோரையும் கவர்வதாகவும் எல்லோருடைய மதிப்பையும் பெறுவதாகவும் அமைந்துள்ளது. இதுவே அவர் சினிமா கலைஞர் என்பதைத் தாண்டி தமிழகத்தால் பெரிதும் கொண்டாடப்படும் ஆளுமைகளில் ஒருவராக விஜய்யை உயர்த்தியிருக்கிறது.

திரைப்படங்களின் மூலமாகவும் திரைக்கு வெளியேயும் தமிழ் மக்களின் பேரன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஆளுமையாகத் திகழும் விஜய் இன்னும் பல ஆண்டுகள் தன்னுடைய வெற்றிப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்