குசும்பு, வெகுளித்தனம், செல்லமான தெனாவட்டு, மென்மையான கச்சாத்தன்மை, அநாயாசமாகக் கொப்பளிக்கும் ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் மலேசியா வாசுதேவன். கிராமியப் பண்ணிசைக்குத் தேவையான பேச்சு வழக்கு உச்சரிப்பு இயல்பாக வாய்க்கப் பெற்றவர். நல்லவேளை, ‘பதினாறு வயதினிலே’ படத்துக்காக ’செவ்வந்திப் பூ முடிச்ச செல்லக்கா’ பாடலை ஒலிப்பதிவு செய்யும் நேரத்தில் எஸ்.பி.பி.யின் குரல் கட்டிக்கொண்டது.
ஒரு வேளை, ’செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா’ பாடலையும், ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலையும் எஸ்.பி.பி. பாடியிருந்தால் சப்பாணிக்குக் கச்சிதமான குரல் சிக்காமல் போயிருக்கும். இதை, ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால் புரிந்துகொள்ள முடியும். சோலோ பாடலாகவும், டூயட்டாகவும் பாடப்பட்ட பாடல் இது. அவற்றில் என்னை ஈர்த்தது டூயட் ’மாங்குயிலே பூங்குயிலே’.
கிராமத்துக்கே உரிய நையாண்டித்தனமும் கம்பீரமும் முயங்கிய நாதஸ்வர வாசிப்புக்கு அடுத்து பாலு, ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு, உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு’ என்று எழுத்துத் தமிழில் பாடத் தொடங்குவார். அடுத்த வரியில், ”தம்பி இப்படித்தான் பாடணும் கேட்டுக்க” என்பதுபோல, ’மாங்குயிலே… பூங்குயிலே...சேதி ஒன்ன கேளு, ஒன்ன மாலயிட தேடி வருஞ் நாளு எந்த நாளு’. உன்ன என்பதை ’ஒன்ன’ என்றும், மாலையிட என்பதை ’மாலயிட’ என்றும் ‘வரும்’ என்பதை ‘வருஞ்’ என்றே ஜானகி உச்சரித்து ஸ்ருதிகூட்டி சிக்ஸர் அடித்திருப்பார்.
முதல் சரணத்தில் மீண்டும் பாலு பொறுப்பாகப் பாடிக் கொண்டிருப்பார். ‘….மால வந்து ஏற பொண்ணுஞ் சம்மதத்தக் கூற’ என்று ஜானகி அம்மா மீட்டர் ஏத்த, அடுத்த சரணத்தில் பாலு சுதாரித்தவராக தன்னுடைய சிரிப்பலையை இடையில் எடுத்துவிடுவார். ஆனால் ஜானகி அம்மா, ‘கன்னி மனசு உன்னஞ் நெனக்குஞ் தன்னந்தனிய என்னித் தவிக்குஞ்’ என்று அந்த வரி முழுவதையும் புன்சிரிப்பு தூவிய குரலில் வார்ப்பார். ஒருவழியாகக் கடைசி ‘மாங்குயிலே பூங்குயிலே’வில் பாலு பாடலுக்குரிய மொழிநடையைப் பற்றிக்கொண்டு, ‘முத்து முத்து கண்ணால நான்ஞ் சுத்தி வந்தேஞ் பின்னால’ என்று பாடி முடிப்பார்.
இருவரும் இசை வித்தையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். இருந்தாலும், ஜானகி அம்மா பிரமாதமாக கிராமிய இசைக்கு உரிய உச்சரிப்புத் தொனியோடு பாடியிருப்பார். பிசகின்றிப் பாட வேண்டும் என்கிற கவனத்தால் அந்தத் தொனி பாலுவிடம் ’மிஸ்’ ஆகிப் போனது. கர்னாடக இசையை முறைப்படி பயிலும்போது அத்தகைய கறார் தன்மை பீடித்துக் கொள்வது சகஜம். (பாலுவும் கர்னாடக இசையைத் தான் கற்றுக் கொண்டவரல்ல என்றே சொல்லி இருக்கிறார். இருப்பினும் அவர் குரலில் மரபான ஒழுங்கு நிறைந்திருக்கும்).
ராக, தாளத்தின் சட்டகத்துக்கு வெளியே செல்ல கர்னாடக இசை அனுமதிக்காது. கிராமியத் தெம்மாங்கிலும் கஜல் இசையிலும் நெகிழ்வுத்தன்மை அந்த இசை வடிவங்களுக்கே உரித்தானது. போகிற போக்கில் கிராமிய இசையில் செய்வதை கிரக பேதம் என்று பெயர்சூட்டி எப்போதாவது மட்டுமே நிகழ்த்த கர்னாடக இசை அனுமதிக்கும்.
போட்டிப் பாடல் வரிசையில் நான் முதலிடத்தில் வைத்திருப்பது ’என்னமா கண்ணு சவுக்கியமா?’ எப்போது கேட்டாலும் உள்ளுக்குள் செம்மையான உற்சாகம் தொற்றிக்கொள்ளச் செய்யும் பாடல் அது. டிரம்பெட், கிட்டார், பாஸ் எஃபக்ட், டிரம்ஸ் என இசைஞானி தூள் கிளப்பியிருப்பார். எஸ்.பி.பி.யும், மலேசியா வாசுதேவனும் போட்டி போட்டுப் பாடும் இந்தப் பாடலில் என்னைப் பொறுத்தவரை மலேசியா வாசுதேவன்தான் சாம்பியன். Effortless singing அவருடையது.
எஸ்.பி.பி. பல்லவியிலேயே நமுட்டுச் சிரிப்பு, சரணத்தில் உறுமல், கர்ஜனை என எல்லா வித்தைகளையும் அவிழ்த்துவிடுவார். மலேசியா வாசுதேவனோ, முதல் சரணத்தில் ‘சத்தியத்த நம்பி ஓ...லாபமில்ல தம்பி ஓ...’ என்ற வரியில் ரெண்டு ’ஓ’விலும் just like that என மிரட்டிவிடுவார். அடுத்த சரணத்தில், ‘மீசையில மண்ணு ஓ...ஒட்டுனத எண்ணு ஓ’ எனும்போது குரலில் மேலும் கனமேற்றிக் கம்பீரமாக நின்றுவிடுவார். குரல் வளத்திலும் இசை நுணுக்கத்திலும் பாலு, வாசுதேவனையும் விஞ்சும் திறன் படைத்தவரானாலும் இந்தப் பாடலில் கதை வேறு. அதற்கு அடிநாதம், மலேசியா வாசுதேவன் லாவகமாகப் பேச்சு மொழியை இசைக்குள் அகப்படுத்திக் கொண்ட விதம்தான்.
’ஒருதங்கரதத்தில் பொன்மஞ்சள்நிலவு’, ‘வாவாவசந்தமே சுகந்தரும் சுகந்தமே’ பாடல்களின் தொடக்கத்திலிருந்தே பேச்சு வழக்கை அவர் தனதாக்கிக் கொண்டது தெரியவரும். ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு, வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே என்பதாக அவர் ஒருபோதும் ஒவ்வொரு சொல்லாகப் பிரித்து எழுத்து நடையில் பாடியதில்லை. கர்னாடக சங்கீதத்தில் ஸ்வரம், சாகித்தியம் என்பார்கள். ஸ்வரம் ராகம், இசை வடிவத்தைக் குறிக்கும். சாகித்தியம் பாடல் வரிகளைக் குறிக்கும். முதலில் ஸ்வரங்களைப் பயின்ற பிறகே சாகித்தியத்தைக் கற்றுப் பாடுவது கர்னாடக இசை வகுத்திருக்கும் வழிமுறையாகும். ஆனால், கிராமியப் பண்ணாக இருக்கட்டும் சென்னை பூர்வக்குடிகளின் கானா இசை வடிவமாக இருக்கட்டும் அங்கு இசையும் பாடல் வரிகளும் பின்னிப் பிணைந்தவை.
உடலுழைப்பானது அவர்கள் அன்றாடத்துடன் இயைந்தது போன்றே இசையும் நடனமும் பாட்டுப் படித்தலும் தன்னகத்தே இயல்பாய்க் கொண்டவர்கள் அம்மக்கள். இந்த அம்சத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டவர்கள் மலேசியா வாசுதேவனும் ஜானகி அம்மாவும். ராஜாவின் இசை ராஜாங்கத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து ’அட வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்’, ‘கட்டிவச்சுக்கோ எந்தன் அன்பு மனச’, ‘தாநந்தன கும்மி கொட்டி’, ’ஆகாய கங்கை’, ‘கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்துருச்சு’ போன்ற பாடல்களில் செய்த இசை ரகளை அபாரமானது. கடைசிவரை ‘முதல் மரியாதை’ பாடல்களைப் பற்றிப் பேசவே இல்லையே என்கிறீர்களா? ’உனக்குமெனக்கும் ஆனந்தம்தம்’ என ஜாலியாக யோசிக்கும்போது சோக கீதம் வேண்டாமே.
பேச்சு வழக்குப் பாட்டுக்காரன் மலேசியா வாசுதேவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago