’நதியில் விளையாடி... கொடியில் தலைசீவி!’ - அண்ணன், தங்கை பாசத்தின் ‘ஐகான்...’ ‘பாசமலர்’ வெளியாகி 60 ஆண்டுகள்! 

By வி. ராம்ஜி

நம்மூரில், நம் தெருவில், யாரேனும் அண்ணன் தங்கையையும் அவர்களின் பாசத்தையும் சொல்லவேண்டுமெனில், ’பெரிய பாசமலர் சிவாஜி, சாவித்திரின்னு நினைப்பு’ என்றுதான் சொல்லுவோம். ஏதேனும் ஒரு தருணத்தில், அண்ணாவுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுக்கிற தருணங்களில், ‘அடடா... பாசமலர் படம் காட்றாய்ங்கப்பா’ என்றுதான் அவர்களைக் கேலியும் கிண்டலுமாய்ச் சொல்லுவோம். 1961ம் ஆண்டு வெளியான படம் பாசமலர்.

1954ம் ஆண்டில் ’அம்மையப்பன்’ படத்தை இயக்கி, திரையுலகுக்குள் நுழைந்த ஏ.பீம்சிங், அடுத்த படமான ’ராஜாராணி’யிலேயே சிவாஜியுடன் கைகோர்க்க ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு சிவாஜியுடன் ’பதிபக்தி’ பண்ணினார். இதன் பின்னர், ’பெற்ற மனம்’ படத்தில் இணைந்தார்கள். அதே 1960ம் வருடத்தில், ’படிக்காத மேதை’யில் சேர்ந்தார்கள். இதன் பிறகுதான், 1961ம் ஆண்டு, பாசமலரில் பாசமும் பிரியமும் கொண்டு இணைந்து சகாப்தம் படைத்தார்கள்.

ஏ.பீம்சிங்... இவரை அப்போதைய ஸ்ரீதர், அதன் பிறகு வந்த பாலசந்தர். அவர்களையடுத்து வந்த பாக்யராஜ். கொஞ்சம் விசு என்றும் இன்னும் கொஞ்சம் ஆர்.சுந்தர்ராஜன் என்றும் சொல்லலாம். அதாவது, இவர்களின் படங்களில் என்னெல்லாம் இருக்கிறதோ... அவை அனைத்தையும் தன் படங்களில் ஒருங்கே கொண்டு தந்திருப்பார். ‘’சிவாஜி எனும் மகாகலைஞனை ரசிகர்கள் ரசிக்கும்படியா நான் பண்ணிருக்கேன்னு சொல்றாங்க. அது அப்படித்தான் நடக்கும். ஏன்னா, நான் சிவாஜியோட பயங்கரமான ரசிகன். அவரை அணுஅணுவா ரசிச்சு ரசிச்சு, ஃப்ரேம் வைப்பேன். அப்படியான முகம் அவருக்கு’’ என்று சிவாஜியை அங்குலம் அங்குலமாக ரசித்த இயக்குநர் ஏ.பீம்சிங். அதை ’பாசமலர்’ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவித்து காட்சிப்படுத்தியிருப்பார்.

அதுமட்டுமா? இந்த பாசமலருக்கு முன்பே பதிபக்தியும் படிக்காதமேதையும் வந்துவிட்டாலும் கூட, பாசமலருக்குப் பிறகுதான் ’பாவமன்னிப்பு’, ’பாலும்பழமும்’ என ‘பா’ வரிசை இயக்குநர் என்றே பெயரெடுத்தார். ஆக, அந்தவகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது ’பாசமலர்’. இயக்குநர் சந்தானபாரதியின் தந்தை சந்தானம் தான் படத்தைத் தயாரித்திருந்தார்.

’பாசமலர் படம் பாத்திருக்கீங்களா’ என்று நெருங்கியவர்களிடம் கேட்டால், நம் மேல் அவர்கள் கொண்ட பாசமே பங்கமாகிப் போனாலும் ஆச்சரியமில்லை. சுள்ளென்று கோபமாகிவிடுவார்கள். . அந்தப் படத்தை பலமுறை பார்த்தவர்களே அதிகம். மன்னன், மந்திரி, நாடு, தேசப்பற்று, சுதந்திரம், போர், சண்டை என்று வந்துகொண்டிருந்த படங்களுக்கு இடையே, பராசக்திக்குப் பிறகுதான் உறவுகளின் அடர்த்தியையும் அதன் உன்னதங்களையும் மையப்படுத்திய படங்கள் அதிகமாக வரத்தொடங்கின. அந்த வகையில் அண்ணன் தங்கை உறவை உயிர்ப்புடன் சொன்னதில்தான் இன்றைக்கும் மலர்ந்து, மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது ’பாசமலர்’.

கே.பி.கொட்டரக்காரா எனும் கேரளத்து எழுத்தாளரின் கதைதான் ’பாசமலர்’. அந்தக் கதையின் திரைக்கதைக்கு, தன் எழுத்துக்களால் இன்னும் மணம் கூட்டியிருப்பார் ஆரூர்தாஸ். எம்ஜிஆருக்கு எழுதிக்கொண்டிருந்த ஆரூர்தாஸை, சிவாஜிப்பக்கமும் கொஞ்சம் மடைமாற்றி விட்டவர், ஜெமினி கணேசன். பாசமலரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆரூர்தாஸை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டார் சிவாஜி.

ஓர் ஏழைத் தொழிலாளி. அவனுக்கு ஓர் தங்கை. அண்ணனுக்கு தங்கையே உலகம். தங்கைக்கு அண்ணன்தான் எல்லாமே! ஒருகட்டத்தில், நாமே ஏன் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடாது என்று யோசிக்க, தங்கை சேர்த்துவைத்த சும்மாட்டுக்காசையும் தருகிறாள்.

‘எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழவைப்போமே’
என்று ஆனந்த ஆட்டம் போடுகின்றனர்.

அண்ணன் ராஜசேகரன். தங்கை ராதா. சிவாஜியும் சாவித்திரியும் சகோதர பாசத்தைக் கண்ணிலும் பார்வையிலும் பேச்சிலும் ஸ்பரிசத்திலும் உணர்விலும் அவ்வளவு அற்புதமாகக் காட்டியிருப்பார்கள். சிவாஜிகணேசனின் நண்பராக ஜெமினிகணேசன். இரண்டு கணேசன்களும் ராஜபாட்டையே நிகழ்த்தியிருப்பார்கள். ஏழை சிவாஜி, பணக்கார சிவாஜி, பணமெல்லாம் போய் நொந்து போன சிவாஜி... அத்தனையிலும் அவரின் உடல்மொழி அப்படிப் பொருந்தியிருக்கும். விளையாடியிருக்கும். பேச்சும் தோரணையும் அப்பாவித்தனமும் கம்பீரமும் காட்டி நிற்கும். ஆனால் இவை அத்தனையிலும் அடர்த்தியான அந்த சகோதரப் பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதில்தான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கிறது ’பாசமலர்’.

அண்ணனின் நண்பன் என்று தெரியாமலேயே ஜெமினிகணேசனைக் காதலிப்பதும் பின்னர் தெரிந்து வருந்துவதும் ஒருகட்டத்தில் அண்ணன் கலங்கியிருப்பது கண்டு, அந்தக் காதலையே விட்டுவிடுவதும் ஆனால் அந்த அன்பைப் புரிந்துகொண்டு, தன் நண்பனுக்கே தங்கையைத் திருமணம் செய்து வைக்க சம்மதம் சொன்னதைக் கண்டு ஆனந்தத்தில் திளைக்கும் போதும் ‘ஆனந்தா... என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். இதுல எப்பவும் ஆனந்தக்கண்ணீரைத்தான் நான் பாக்கணும்’ என்று கரம்பிடித்துக் கொடுக்கும் போதும்... நடிகர்திலகத்தை விடுங்கள். அவரைத்தான் நமக்குத் தெரியுமே. அங்கே... சிவாஜி எனும் மலையையே அசைத்துப் பார்க்கிற நடிப்பையும் மேனரிஸங்களையும் திரை முழுவதும் படரவிட்டிருப்பார் சாவித்திரி. அதனால்தான் அவர் நடிகையர் திலகம்!

பொறுப்புடன் இருக்கிற சாவித்திரி, பொறுப்பே இல்லாமல் மேல்படிப்புக்குக் கிளம்புகிற சிவாஜியின் மனைவி எம்.என்.ராஜம் ... இருவரைக் கொண்டும் இல்லறம் பேணுதலை உணர்த்தியிருப்பார் பீம்சிங்.

‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்று அவளின் எதிர்காலம் குறித்த ஆசையைச் சொல்லும் அண்ணனின் வழியே, பாசத்தைப் பாடலாக்கியிருப்பார் கண்ணதாசன். ‘யார் யார் அவள் யாரோ...’ என்று ஜெமினியும் சாவித்திரியும் பாடுகிற டூயட்டில், அத்தனை கண்ணியம். பாடலில் அவ்வளவு இலக்கியம். இந்தப் படம் வந்த பிறகு, ’வாராயோ தோழி வாராயோ...’ பாடலை ஒலிக்கச் செய்யாத கல்யாண வீடுகளே இல்லை.

படத்தின் க்ளைமாக்ஸில் பார்வையை இழந்த நிலையில், ‘கை வீசம்மா கைவீசு..’ என்று சிவாஜி பேசுகிற வசனத்தைக் கேட்டு, அழுதுகொண்டே கைத்தட்டினார்கள் ரசிகர்கள். அண்ணனின் அன்பே மெய்... அந்த அன்புக்கு இணை இங்கு எதுவுமில்லை, எவருமில்லை என்பதை சாவித்திரி, ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தன் நடிப்பால் ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார். ஜெமினி கணேசன் மட்டும் என்ன... வழக்கமாக, தன் இயல்புடனே நடித்து, அந்தக் கேரக்டருக்கு உரிய நியாயங்களைச் செய்திருப்பார். தங்கவேலுவின் காமெடிகளும் ரசிக்கவைக்கும்.

ஒரு பாட்டு ஆரம்பித்தது முதல் முடிகிற அந்த நாலரை முதல் ஐந்து நிமிடங்கள் வரை, அழுதுகொண்டே கேட்க முடியுமா. பார்க்கமுடியுமா. ‘மலர்ந்தும் மலராத பாதிமலர் போல...’ பாடல் ஆரம்பிக்கும்போதே அழுதுவிடுவார்கள் பெண்கள். பாட்டு முடியும் போதுதான் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொள்ளும் ஆண்களும் அழுதிருக்கிறார்கள் என்பது தெரியும்.

’யானைப் படைகொண்டு சேனை பல வென்று’ என்று டி.எம்.எஸ். பாடும் போது சிவாஜியே பாடுவது போலவும் ‘தங்கக்கடியாரம் வைர மணியாரம் தந்துவிலை பேசுவார்’ என்று சொல்லிவிட்டு, ‘மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்’ என்று பி.சுசீலா பாடும்போது, அது சாவித்திரியின் குரலாகவும் நமக்குக் கேட்டது. அப்படி நினைக்கவைத்ததுதான் அவர்களின் அசாத்திய நடிப்பு. அதிலும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...’ என்று இடையே பாடும்போது கிறங்கிக் கதறிவிடுவோம். பாட்டின் நிறைவாக, ‘ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...’ என்று டிஎம்எஸ் பாட... ‘அன்பே ஆரிராரோ ஆரிராரோ...’ என்று சுசீலா பாட... முட்டிக்கொண்டு, முகம் திருப்பிக் கொண்டிருக்கிற அண்ணன் தங்கைகள் கூட அதைக் கேட்டு, பாசத்தில் நெகிழ்ந்து கரைந்து போவார்கள்.

அந்தப் பாடலை படமாக்கியிருக்கும் விதம் அத்தனை நேர்த்தி. ஹாலில் படுத்தபடி பாடுகிற சிவாஜியை டாப் ஆங்கிளிலும் க்ளோசப்பிலுமா ரசித்துச் ரசித்து கேமிரா, தனக்குள் கடத்திப் பதிவு செய்து, நமக்குப் பந்திவைத்திருக்கும். அதுமட்டுமா? வீட்டுச் சுவரில், கன்னத்தில் கைவைத்தபடி உள்ள சிவாஜியின் புகைப்படம் கூட பேசும். அவ்வளவு ஸ்டைலான போஸ் அது!

விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசை, கண்ணதாசனின் பாடல்கள், சிவாஜி சாவித்திரி, ஜெமினியின் நடிப்பு ஆரூர்தாஸின் அருமையான அழகான, எளிமையான வசனங்கள். பீம்சிங்கின் மிகச்சிறந்த இயக்கம் என கதம்பமாலையாய் மணக்கிறது பாசமலர்.

இந்தப் படம் வந்த பிறகு, வீடுகளில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு சாவித்திரி போல் அன்புத்தங்கையாக இருக்கவேண்டும் என்று நினைத்து, ‘ராதா’ என்று பெயர்வைப்பது வழக்கமாக இருந்ததாம். திரையிட்ட பல தியேட்டர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. சில தியேட்டர்களை வெள்ளிவிழா கண்டது. இன்னும் சில தியேட்டர்களில் தீபாவளிக்கு புதுப்படங்கள் ரிலீஸ் செய்யவேண்டிய கட்டாயம் என்பதால், மனமே இல்லாமல் ‘பாசமலர்’ படத்தை தியேட்டரிலிருந்து எடுக்கும்படியாயிற்று.

பாசமலர் என்றதும் சிவாஜியையெல்லாம் தாண்டி, அந்த வெள்ளந்தியான கண்களும் முகமும் சேர்ந்து சிரிக்கிற சாவித்திரியின் முகம்தான் நினைவுக்கு வரும். அந்த முகம்... முகம் வழியே பரவிய பாசமலர்... இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மறக்கவே மறக்காது நமக்கு!

1961ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி வெளியானது ‘பாசமலர்’. படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் நூற்றாண்டுகள் கடந்தாலும், அண்ணன் தங்கை எனும் பாச நேச நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்