அஞ்சலி படங்களுக்கு தடை உத்தரவு வாங்குவேன்: இயக்குநர் களஞ்சியம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

‘‘என் படத்தில் நடித்த பிறகுதான் மற்ற படங்களில் அஞ்சலி நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது எந்த படமும் வெளியாகாதபடி நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்குவேன்’’ என்று இயக்குநர் மு.களஞ்சியம் கூறியுள்ளார்.

பூமணி, பூந்தோட்டம், கருங்காலி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். கடந்த ஆண்டு நடிகை அஞ்சலி, அவரது சித்தி பார்வதி மற்றும் இயக்குநர் மு.களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவை தவிர்த்து தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை அஞ்சலியை எதிர்த்து மு.களஞ்சியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு அஞ்சலி நடித்தார். அதன் பிறகு நடிக்கவில்லை. இதுகுறித்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பிலிம்சேம்பர், கில்டு, பெப்சி, இயக்குநர் சங்கம் ஆகியவற்றில் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை.

தெலுங்கு, கன்னட படங்களில் தொடர்ந்து நடித்துவரும் அஞ்சலி, ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தை தவிர்க்கிறார். அவர் மீண்டும் தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. அப்படி நடிப்பதாக இருந்தால் என் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடித்துவிட்டு மற்ற படங்களில் நடிக்கலாம்.

இதுதொடர்பாக என் பிரச்சினைகளை யும், பணம் முடங்கியுள்ள விஷயத்தையும் விளக்கமாக எழுதி எல்லா சங்கங்களுக் கும் கொடுத்திருக்கிறேன். முடிவு தெரிய வில்லை என்றால் அஞ்சலியின் எந்த படமும் எங்கும் வெளியாக முடியாதபடி நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு களஞ்சியம் கூறியுள்ளார்.

யாராலும் தடுக்க முடியாது அஞ்சலி பதிலடி

இதுபற்றி கேட்டதற்கு அஞ்சலி கூறுகையில், ‘‘தெலுங்கு பட வேலைகளை சிறப்பாக முடித்துக் கொடுத்துள் ளேன். தற்போது புனித் ராஜ்குமாருடன் கன்னட படத்தில் நடிக்கிறேன். என் மீது எந்த தவறும் இல்லை என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் எல்லோரும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். என் படங்களை யாராலும் தடுக்க முடியாது.

இனி என்னை வைத்து படம் எடுக்க விரும்புபவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக்கொடுப்பேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE