நான் ஃபேஸ்புக்கில் இல்லை: போலிப் பக்கம் குறித்து நடிகை அதுல்யா ட்வீட்

By செய்திப்பிரிவு

தன் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் போலி ஃபேஸ்புக் பக்கம் குறித்து நடிகை அதுல்யா ரவி ட்வீட் செய்துள்ளார்.

பிரபலங்களின் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் பக்கம் ஆரம்பிப்பது, அந்தப் பிரபலங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு செய்தி அனுப்புவது, பிரபலங்களின் பெயரில் தவறான தகவல்களை அனுப்புவது என்று இணையத்தில் வாடிக்கையாக சில குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது சர்வதேச அளவில் பல பிரபலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை. முக்கியமாக திரை நட்சத்திரங்களே இப்படியான சிக்கலில் அடிக்கடி சிக்குகின்றனர்.

தற்போது தமிழ் நடிகை அதுல்யா ரவி இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். ’காதல் கண் கட்டுதே’, ’அடுத்த சாட்டை’, ’நாடோடிகள் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அதுல்யா ரவி. தற்போது ’முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதுல்யாவின் பெயரில் போலியாக ஒரு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு அவரின் நண்பர்களுக்கு அதிலிருந்து தனிப்பட்ட செய்திகள் சென்றிருக்கின்றன.

இது தெரிந்த அதுல்யா ரவி ட்வீட் செய்துள்ளார்.

''என் பெயரில் ஃபேஸ்புக்கில் போலியாக ஒரு பக்கத்தை ஆரம்பித்து, தனிப்பட்ட முறையிலும், திரையுலகிலும் எனக்குத் தெரிந்த நபர்களுக்கு ஏன் செய்தி அனுப்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் மோசமான செயல். ஏற்கெனவே இதுகுறித்துப் புகார் அளித்துவிட்டேன்.

நான் ஃபேஸ்புக்கில் இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பக்கத்தைப் பற்றிப் புகார் கொடுங்கள்'' என்று அதுல்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து அதுல்யாவின் ரசிகர்கள் பலர் இந்தப் பக்கத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் அளித்துள்ளனர்.

தற்போது இந்தப் போலிப் பக்கம் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE