காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர் விவேக்: சிலம்பரசன் இரங்கல்

By செய்திப்பிரிவு

காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர் விவேக் என்று சிலம்பரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக்.நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

விவேக்கின் மறைவுக்கு இந்திய திரையுலகினர் பலரும் காலையிலிருந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சிலம்பரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அன்பு அண்ணன், நம் சின்னக் கலைவாணர், இன் முகம் மாறாத மனிதர், எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர், கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர் இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயர் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சரியப்படும் மனிதர் நடிகர் விவேக் சார்.

பண்பாளர். இவ்வளவு சீக்கிரம் இழப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை. தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துகளைப் போதித்து வந்தார். மரங்களை நடுங்கள் என அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சென்று செயல்படுத்திய செயல் வீரர். பத்மஸ்ரீ விருதுக்குப் பொருத்தமானவராக நிறைந்திருந்தார்.

அவர் மறைந்தாலும், அவர் செய்து சென்றிருக்கிற செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக, கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார். என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

எப்போதும் என் நல்லது, எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக் கொண்டேயிருப்பார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மரக்கன்று வைக்க இருக்கிறேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியைச் செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இதய அஞ்சலிகள் விவேக் சார்"

இவ்வாறு சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்