உங்கள் இழப்பை உணர்கிறோம்: விவேக் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

விவேக்கின் இழப்பை உணர்கிறோம் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

விவேக் மறைவுக் குறித்து திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்புகளின் தொகுப்பு:

அட்லி: உங்கள் இழப்பை உணர்கிறேன் சார். இதைத் தாங்க முடியவில்லை. எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. எங்கள் உண்மையான உணர்வு என்னவென்பதை வார்த்தைகள் விவரிக்காது. ஜீரணிக்கக் கடினமாக இருக்கிறது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

சிம்பு தேவன்: சிரிக்காத நாள் வீணடிக்கப்பட்ட நாள் - சார்லி சாப்ளின். பிறரைச் சிரிக்க வைப்பதே கடினமான விஷயம்! அதில் சிந்திக்கவும் வைப்பது அபூர்வமான விஷயம்! அப்படி ஒரு அபூர்வ கலைஞரை இழந்து விட்டோம்! பெரும் சோகம்! தங்கள் நினைவுகளை நீங்கள் நட்டு வைத்த லட்சக்கணக்கான மரங்கள் பேசும் விவேக் சார்!

ஜீவா: சொல்ல வார்த்தைகள் இல்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இல்லாத குறையை தமிழ் திரையுலகம் என்றுமே உணரும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

பி.எஸ்.மித்ரன்: சிரித்துக் கொண்டே அவர் விதைத்த மரங்களும், சிரிக்க வைத்து அவர் விதைத்த சிந்தனைகளும், காலம் தாண்டி வாழும்! போய் வாருங்கள் விவேக் சார்

வி.ஜே.ரம்யா: இது மிகவும் துயரமாக இருக்கிறது. நாங்கள் சரியாக யோசித்துப் பார்க்கும் முன் நீங்கள் எங்களை விட்டு விலகிவிட்டீர்கள். விவேக் அவர்களுக்கு ஒரு இரங்கல் செய்தி அடிக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அறிவு-அழகு-கனிவு-உங்களிடம் எல்லாம் இருந்தது. மரத்துப் போனது போல உணர்கிறேன். சொல்ல வார்த்தைகள் இல்லை.

சதீஷ்: தமிழ் சினிமாவிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் தாங்க முடியாத பேரிழப்பு விவேக் சார். நீங்கள் விட்டுச் சென்ற கருத்துக்களும் நட்டுச் சென்ற மரங்களும் என்றும் உங்கள் பெயர்ச் சொல்லும். மிஸ் யூ விவேக் சார்.

கார்த்திக் சுப்புராஜ்: உண்மையில் பேரதிர்ச்சி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார்

ஷான் ரோல்டன்: நடிகர் விவேக் அவர்களின் மறைவைக் கேள்விப்பட்டு உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. இசை, தத்துவம், வாழ்க்கை விஷயங்கள் என அவருடன் மனமார நிறையப் பேசியிருக்கிறேன். எனது இசைக்கு மிகப்பெரிய ஆதரவாளர். இந்த நாள் வரும் என்றே நினைக்கவில்லை. இந்த இழப்பைத் தாங்க முடியவில்லை.

அர்ச்சனா கல்பாத்தி: அதிர்ச்சியில், மனமுடைந்து போயிருக்கிறேன். எங்கள் முதல் படமான திருட்டுப்பயலேவிலிருந்து பிகில் வரை ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார். திரையிலும், திரையைத் தாண்டியும் எங்களை நீங்கள் சிரிக்க வைத்த தருணங்களை என்றும் நான் நினைவில் வைத்திருப்பேன். உங்கள் இழப்பை உணர்வோம். இன்றிலிருந்து சொர்க்கம் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

அல்லு சிரிஷ்: நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருக்கிறேன். அவர் எனக்குப் பிடித்தமான நடிகர்களில் ஒருவர். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார். நீங்கள் இல்லாத குறையை உணர்வோம்.

ரமேஷ் அரவிந்த்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக். அதிக புத்திசாலித்தனம் நிறைந்த அவரது நகைச்சுவைப் பாணி மிக அரியது. எனக்கும் அவருக்கும் தமிழில் முதல் படமான மனதில் உறுதி வேண்டுமை நினைத்துப் பார்க்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின்: அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கருணாநிதியின் அன்பைப் பெற்றவர். திமுக தலைவர் ஸ்டாலினின் நண்பர். 'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார்-வழிநடத்தினார். திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்குப் பேரிழப்பு. தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படித் தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூகப் பணிகளை நாம் தொடருவோம்

பா.இரஞ்சித்: சிறந்த நகைச்சுவை கலைஞர் நடிகர் விவேக் அவர்களின் மரணச் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. அவரின் பிரிவில் வாடும் திரை உலகிற்கும், ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!! #RIPVivekSir

ப்ரியா பவானி சங்கர்: தன்னைச் சுற்றி அன்பு, நேர்மறை சிந்தனை, சந்தோஷம் ஆகியவற்றை மட்டுமே பரப்பிய கனிவான மனிதர். இந்த இழப்பு மோசமான கனவைப் போல இருக்கிறது. நீங்கள் விட்டுச் சென்ற, நாம் பகிர்ந்த அத்தனை சிரிப்பையும், நினைவுகளையும் நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன் விவேக் சார். நான் உங்களிடம் ஒருமுறை சொன்னதைப் போல, நீங்கள் எப்போதும் அந்த இளம் கருத்து கந்தசாமியாகத்தான் என் பார்வையில் இருப்பீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம், மதிக்கிறோம்.

பி.சி.ஸ்ரீராம்: உங்கள் நகைச்சுவை எங்களைச் சிரிக்க, சிந்திக்க வைத்தது. நீங்கள் நட்ட மரங்கள் எங்களுக்கு நல்ல சுவாசத்தைத் தந்தது. அர்ப்பணிப்புடன் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தீர்கள். இப்போது நீங்கள் இல்லாத நிலையில் உங்கள் பணி பல தலைமுறைகளுக்கு உந்துதலாக இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக்.

அருள்நிதி: இது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. விவேக் சார், அனைவருக்கும் நீங்கள் மிகப்பெரிய உந்துதல் தருபவர். மிகச்சிறந்த மனிதர், நேர்மறையானவர். உங்களை அறிந்தது, உங்களுடன் பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். என் தாத்தாவின் குரலில் நீங்கள் பேசியது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார்

ஹன்சிகா: உற்சாகத்தின் மறுவடிவம். நீங்கள் இல்லை என்பதை இன்னும் நம்பமுடியவில்லை சார். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் இழப்பு உணரப்படும். உங்களுக்கு மாற்று யாரும் கிடையாது.

மோகன்லால்: மனமார்ந்த அனுதாபங்கள்.

சூரி: உங்களால் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டும் அல்ல... நீங்கள் உருவாக்கிய விழிப்புணர்வால் நடப்பட்ட கோடிக்கணக்கான மரங்களும் உங்களுக்காகக் கண்ணீர் விடுகின்றன... சென்று வாருங்கள் விவேக் சார்

ரகுல் ப்ரீத் சிங்: மூத்த நடிகர் விவேக் அவர்களின் மறைவைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன், சோகமடைந்தேன். அவரது குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

லோகேஷ் கனகராஜ்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார்.

மஹத்: எதிர்பாராத செய்தி. ஏன் இவ்வளவு சீக்கிரம் சார்? நமது கஷ்ட காலத்தில் அவரது நகைச்சுவை நம்மைச் சிரிக்க வைத்தது. நமது கவலைகளை மறக்கச் செய்தது. உண்மையில் ஒரு சிறந்த மனிதர். உங்கள் இழப்பை உணர்வோம் சார்.

வரலட்சுமி சரத்குமார்: இப்படி ஒரு மோசமான செய்தியைக் கேட்டுக் கண் விழிக்கவே எனக்குப் பிடிக்காது. பல சிரிப்புக்கு, சந்தோஷத்துக்கு நீங்கள் காரணமாக இருந்தீர்கள். நீங்கள் மறைந்துவிட்டதை நினைத்தாலே மனமுடைகிறது. சீக்கிரம் சென்றுவிட்டீர்கள். நமது துறைக்கு மட்டுமல்ல, மனிதக் குலத்துக்கும் பெரிய இழப்பு. அப்படி ஒரு கனிவான, பொறுப்பான மனிதராக நீங்கள் இருந்தீர்கள்.

ஜெயம் ரவி: ஒரு அற்புதம் நடந்து நீங்கள் பாதுகாப்பாக மீள்வீர்கள் என்று நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் இப்போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதிர்ச்சியில் இருக்கிறேன். உங்களுடன் பணியாற்றியது இன்னும் என் மனதில் அப்படியே புதிதாக இருக்கிறது. உங்கள் மரங்கள் மூலம் உங்கள் மேன்மையும் வாழும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். உங்கள் குடும்பத்துக்கு என் ஆறுதல்கள், பிரார்த்தனைகள்.

ஆதி: அவருடன் பணியாற்றியதில்லை. ஆனால் அவரது நகைச்சுவை சிரிப்பைத் தாண்டி இருக்கும். ஒரு அற்புதமான நடிகர். நல்ல மனிதர். உங்கள் இழப்பை உணர்வோம் விவேக் சார். அவரது குடும்பத்தினருக்கும், நெருக்கமானவர்களுக்கும் என் அனுதாபங்கள்.

துல்கர் சல்மான்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். உங்களைத் திரையில் பார்க்கும்போது ஏதோ ஒரு விஷயம், நீங்கள் எங்களுக்கு நீண்ட நாட்களாகப் பரிச்சயமானவர் என்கிற உணர்வைத் தரும். இது உண்மையில் மனதைப் பிசைகிறது.

சிபி சத்யராஜ்: நம்மைச் சிரிக்கவும் வைத்து,சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் இன்று நம்மிடையே இல்லை என்பதனை மனம் ஏற்க மறுக்கிறது!

க்ரிஷ்: நாங்கள் அனைவரும் இந்தச் செய்தால் உடைந்து போயிருக்கிறோம். விவேக் அண்ணா, நீங்கள் என்னே ஒரு நடிகர், என்னே ஒரு மனிதர். எங்களை கண்ணீரில் விட்டுச் சென்று விட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

சிம்ரன்: விவேக்கின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். விவேக் நீங்கள் என்றும் எங்கள் மனங்களில் இருப்பீர்கள். விவேக் அவர்களின் குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள்.

அனிருத்: வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் இருக்கிறேன். எங்கள் முதல் பாடல் வெளியான போது என்னை அழைத்து வாழ்த்திய முதல் நபர் அவர் தான். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். நீங்கள் விட்டுச் சென்ற மரபு என்றும் வாழும்.

மாதவன்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். திடீரென, இவ்வளவு சீக்கிரமாக நீங்கள் சொர்க்கத்துக்குப் பயணப்படுகிறீர்கள் என்பதைப் பார்த்து மனமுடைந்து, உறைந்து போயிருக்கிறேன். இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்காகவும், அனைத்து விஷயங்களுக்காகவும் அக்கறை எடுத்துக் கொண்ட உண்மையான ஒரு நல்ல மனிதரை உலகம் இழந்துவிட்டது. அது உங்கள் சிரிப்பு, அன்பு, அறிவு இல்லாத குறையை உணரும். சொர்க்கத்துக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ்: விவேக் சார் மறைவு செய்தி மிகவும் வேதனை, அதிர்ச்சியைத் தருகிறது. நகைச்சுவையினால் விழிப்புணர்வினை ஏற்படுத்திய அவர் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை, கண்ணீர் அஞ்சலி .

சாந்தனு: நல்ல மனிதர்கள் வாழனும்..வாழுவாங்க. இது உண்மையா இல்லையான்னு எனக்கு இப்போ புரியல. நம்மள எவ்வளவோ சிரிக்க வெச்சாரு சிந்திக்க வெச்சாரு ஆனா இப்போ இத எழுத எழுத கண் கலங்குது..நம்ம சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராகப் பார்த்தோம்.

நிக்கி கல்ராணி: விவேக் அவர்களின் மறைவைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். அவ்வளவு நேர்மறையான, சந்தோஷமான ஆன்மா அவர். உடற்பயிற்சி சிகிச்சை மையத்தில் அவ்வபோது உங்களை திடீரென சந்திக்கும் தருணங்களை நினைத்துப் பார்ப்பேன் சார். அவரது சொந்த பந்தங்களுக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.

கவிதாலயா: கவிதாலயாவின் வரலாற்றில் ஒரு துரதிர்ஷ்டமான நாள். எங்கள் அன்பார்ந்த நடிகர் விவேக்கின் இழப்பை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. தமிழகத்துக்கும், துறைக்கும் மிகப்பெரிய இழப்பு. நீங்கள் நட்ட லட்சக்கணக்கான மரக்கன்றுகளும், மனங்களின் விதத்தை நல்ல சிந்தனைகளும் உங்களைப் பற்றிப் பேச என்றும் வாழும். நீங்கள் திரையில் உருவாக்கிய உயிர்ப்பான தருணங்கள் லட்சக்கணக்கானோரை உற்சாகப்படுத்தியது. என்னே ஒரு உயர்ந்த பங்களிப்பு !!

விக்ரம் பிரபு: பல சிரிப்புக்கும், புன்னகைக்கும் நீங்கள் தான் காரணம் சார். மிகச்சிறந்த நகைச்சுவையாளர், அற்புதமான நடிகர், சமூகத்துக்காகச் சிந்தித்த குடிமகன். நீங்கள் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. உங்கள் ரசிகர்களில் ஒருவராக உங்கள் இழப்பை என்றும் உணர்வேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

வெங்கட் பிரபு: விரைவில் சென்றுவிட்டீர்களே சார். வாழ்க்கை உண்மையிலேயே நியாயமற்றது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். அவரது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்