‘அந்நியன்’ இந்தி ரீமேக் விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்தப் படத்துக்குப் பின் ராம் சரண் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அத்தனை பிரதான மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த இரண்டு படங்களுக்குப் பின், ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார். இதற்கான பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது. இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அந்நியன்' படத்தின் ரீமேக் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். நேற்று முதலே இந்தத் தகவல் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ‘அந்நியன்’ படத்தைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயந்திலால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஷங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
'' ‘அந்நியன்’ படத்தின் கதையைத் தழுவி இந்தியில் ஒரு படத்தை நீங்கள் இயக்கவிருக்கும் தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் நான்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து இந்தக் கதைக்கான உரிமையை நான் முழுத் தொகையையும் கொடுத்துப் பெற்றுள்ளேன். அதற்கான ஆவணங்களும் இருக்கின்றன. இந்தக் கதையின் முழு முதல் உரிமையாளர் நான் மட்டுமே. எனவே இப்படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்டவிரோதமானது.
உங்களால் இயக்கத்தில் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறாத ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு உங்கள் பெயர் உருக்குலைந்த காரணத்தால் நீங்கள் கடும் மன அழுத்தத்தில் இருந்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதன் பிறகும் நான் உங்களுக்கு 'அந்நியன்; படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினேன். அதன் பிறகு என் மூலமே நீங்கள் இழந்த இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டீர்கள். ஆனால், அதை நீங்கள் மறந்துவிட்டு, என்னிடம் தகவல் கூட தெரிவிக்காமல் என்னுடைய வெற்றிப் படமான அந்நியனின் இந்தி ரீமேக்கை இயக்குவதன் மூலம் அப்படத்தின் புகழை நீங்கள் அறுவடை செய்ய முயல்கிறீர்கள்.
நீங்கள் சில குறிப்பிட்ட தொழில் தர்மத்தைக் கடைப்பிடித்து வந்தீர்கள் என்று நான் உறுதியாகச் சொல்வேன். ஆனால், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் எப்படி உங்களால் இப்படிக் கீழ்நிலைக்கு இறங்க முடிந்தது குறித்து ஆச்சர்யம் கொள்கிறேன்.
என்னிடம் காப்புரிமை உள்ள ஒரு கதையைச் சட்டவிரோதமாக நகலெடுப்பதால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதையும் தொடராமல் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் கடிதத்துடன் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago