இந்திய வெகுஜன சினிமாவில் தன் பல்வேறு திறமைகளால் பல துறைகளில் சாதனைகள் நிகழ்த்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் மதிப்புக்குரிய பன்முக ஆளுமையாகத் திகழும் பிரபுதேவா இன்று (ஏப்ரல் 3) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
நடன ரத்தம்
புகழ்பெற்ற நடன இயக்குநர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா மிக இளம் வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட செவ்வியல் நடனங்களைக் கற்றுத் தேர்ந்தார். பதின்பருவம் முதல் தந்தை நடன இயக்கம் செய்த பாடல்களில் நடன உதவியாளராகவும், திரையில் கூட்டத்தில் ஒருவராகத் தோன்றும் நடனக் கலைஞராகவும் பணியாற்றத் தொடங்கினார்.
'ஏப்ரல் மேயிலே' (இதயம்), 'லாலாக்கு டோல் டப்பி' (சூரியன்), 'சிக்கு புக்கு ரயிலே' (ஜென்டில்மேன்) போன்ற பாடல்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியதோடு முதன்மை நடனக் கலைஞராகத் தோன்றி தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அவருடைய முகமும் அடையாளமும் பதிந்துபோனது. அவருடைய அபார நடனத் திறன் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் நிறைய வெற்றிப் பாடல்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றார்.
» வார்த்தைகளில் கண்ணியத்தைக் கடைப்பிடியுங்கள்: விமர்சகர்களுக்கு 'சுல்தான்' தயாரிப்பாளர் வேண்டுகோள்
நடிகராக நட்சத்திர அந்தஸ்து
பவித்ரன் இயக்கிய 'இந்து', 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா உலகையே அசர வைத்த இயக்குநர் ஷங்கரின் இரண்டாம் படமான 'காதலன்' என ஒரே ஆண்டில் இரண்டு வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்தது பிரபுதேவாவின் அடுத்தகட்டப் பாய்ச்சலாக அமைந்தது.
'லவ் பேர்ட்ஸ்', 'மிஸ்டர் ரோமியோ'. 'ராசய்யா' என நாயகனாகவும் நடன இயக்குநராகவும் பிரபுதேவாவின் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. 1997இல் ஏவிஎம் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கிய 'மின்சார கனவு' திரைப்படத்தில் பாலிவுட் கனவுக்கன்னி கஜோலுக்கு ஜோடியாக நடித்தார் பிரபுதேவா. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படம் பல தேசிய விருதுகளைக் குவித்தது. காலத்தால் அழிக்க முடியாத டூயட் பாடலான 'வெண்ணிலவே' பாடலுக்கு நடன இயக்கத்துக்கான சிறந்த தேசிய விருது பிரபுதேவாவுக்குக் கிடைத்தது. அதற்கு முன்பே தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிவிட்டிருந்தாலும் இந்த தேசிய விருதின் மூலம் பிரபுதேவாவின் புகழ் தேசிய அளவில் மேலும் பரவியது.
'வி.ஐ.பி', 'நாமிருவர் நமக்கிருவர்', 'நினைவிருக்கும் வரை', 'ஏழையின் சிரிப்பில்', 'பெண்ணின் மனதைத் தொட்டு' உள்ளிட்ட வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகரானார் பிரபுதேவா. அந்த நிலையிலும் கமல்ஹாசனுடன் 'காதலா காதலா', விஜயகாந்துடன் 'வானத்தைப் போல', பார்த்திபனுடன் 'ஜேம்ஸ் பாண்டு', முரளியுடன் 'அள்ளித்தந்த வானம்', கார்த்திக்குடன் 'உள்ளம் கொள்ளை போகுதே', பிரபுவுடன் 'சார்லி சாப்ளின்' என இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவோ துணை நாயகனாகவோ அதிக திரைப்படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைந்ததோடு இவற்றில் பிரபுதேவாவின் நடிப்பு தனி கவனம் ஈர்த்தது. குறிப்பாக 'சார்லி சாப்ளின்' இந்தியில் சல்மான்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்படும் அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
வெற்றிகரமான இயக்குநர் அவதாரம்
2005இல் வெளியான 'நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா' என்னும் தெலுங்குப் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் பிரபுதேவா. கிராமத்துப் பெண்ணுக்கும் என்.ஆர்.ஐ இளைஞனுக்குமான காதலை மையமாக வைத்து கலகலப்பான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருந்த இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் மொழிமாற்றப் பதிப்பான 'உனக்கும் எனக்கும்' படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், பிரபுதேவா இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானது நடிகர் விஜய்யின் திரை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த 'போக்கிரி' திரைப்படத்தின் மூலமாகத்தான். தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கிய படத்தை அதே தலைப்பில் மறு ஆக்கம் செய்து பிரபுதேவா இயக்கியிருந்த விதம் விஜய்யின் மாஸ் இமேஜை பல மடங்கு உயர்த்தியது. ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது.
மும்மொழிகளில் வெற்றிக்கொடி
'போக்கிரி'யின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவியை நாயகனாக வைத்து 'சங்கர்தாதா எம்பிபிஎஸ்' ('முன்னாபாய் எம்பிபிஎஸ் இந்திப் படத்தின் தெலுங்கு ரீமேக்), 'வில்லு' (சோல்ஜர் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்) 'வாண்டட்' (போக்கிரி இந்தி ரீமேக்), 'வெடி' (ஷெளர்யம் தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்), ரெளடி ரத்தோர்' (விக்ரமார்க்குடு தெலுங்குப் படத்தின் இந்தி ரீமேக்) எனத் தொடர்ந்து பல மொழிகளில் மறு ஆக்கப் படங்களை இயக்கினார். தமிழில் அவர் இயக்கிய நேரடிப் படங்களான 'எங்கேயும் காதல்' அருமையான பாடல்களுடன் முற்றிலும் வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்ட அழகான காதல் படமாக இளைஞர்களைக் கவர்ந்து வெற்றி பெற்றது.
அக்ஷய் குமாரை வைத்து பிரபுதேவா இயக்கிய 'ரெளடி ரத்தோர்' பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து 'ராமையா வஸ்தாவையா' (நுவ்வொஸ்தானண்டே நேனொந்தண்டானா இந்தி ரீமேக்), ஷாகித் கபூருடன் 'ஆர்.ராஜ்குமார்', அஜய் தேவகனுடன் 'ஆக்ஷன் ஜாக்சன்', அக்ஷய் குமாருடன் 'சிங் இஸ் ப்ளிங்', சல்மான் கானுடன் 'தபாங் 3', மே மாதம் வெளியாகவிருக்கும் 'ராதே' என பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
மீண்டும் நடிகராக
நீண்ட இடைவெளிக்குப் பின் 2016இல் விஜய் இயக்கத்தில் வெளியான மும்மொழிப் படத்தில் மீண்டும் நாயகனாக அரிதாரம் பூசினார் பிரபுதேவா. மும்மொழிகளில் தமிழ்ப் பதிப்பான 'தேவி' வணிக வெற்றி பெற்றதோடு விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்தாலும் அவருடைய தோற்றத்திலும் உடலமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. இளம் நாயகனாக நடிப்பதற்கு மிகப் பொருத்தமான தேர்வாகவே இருந்தார். இப்போதும் அப்படியே இருக்கிறார்.
தங்கர்பச்சான் இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்த 'களவாடிய பொழுதுகள்' நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. கார்த்திக் சுப்புராஜின் வசனமே இல்லாத பரீட்சார்த்த முயற்சியான 'மெர்க்குரி' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து தன் ஆழமான நடிப்புத் திறமையை நிரூபித்தார். 'குலேபகாவலி' 'தேவி 2', 'லக்ஷ்மி', 'சார்லி சாப்ளின் 2' ஆகிய படங்களிலும் நடித்தார்.
தற்போது 'பொன் மாணிக்கவேல்', 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்', 'பஹீரா', 'விக்ரம்' என அவர் நடித்துக்கொண்டிருக்கும் /நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இவற்றில் 'பகீரா' படத்தில் முற்றிலும் எதிர்மறை வேடத்தில் ஒரு சைக்கோ கொலைகாரனாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் 'விக்ரம்' படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன். இப்படியாக இயக்குநராகவும் நடிகராகவும் நடன இயக்குநராகவும் பிரபுதேவாவின் வெற்றிப் பயணம் பொலிவுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அனைவருக்கும் 'மாஸ்டர்'
நடன இயக்குநரின் மகனாகப் பிறந்து நடன உதவியாளராகக் கூட்டத்தில் ஒரு நடனக் கலைஞராக முதன்மை நடனக் கலைஞராகப் படிப்படியாக வளர்ந்து இந்தியாவின் தலைசிறந்த நடனக் கலைஞராகவும் நடன இயக்குநராகவும் பரிணமித்தவர் பிரபுதேவா. 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' என்று அழைக்கப்படும் அவருடைய தனித்தன்மை வாய்ந்த அபார நடனத்துக்காகவே அவரை இந்திய சினிமா பிரபலங்கள் அனைவரும் வியந்து போற்றுகின்றனர். அவரை விட வயதில் மூத்தவர்களும் சமகாலக் கலைஞர்களும்கூட அவரை 'மாஸ்டர்' என்றே மரியாதையுடன் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கு நடனத்தில் உச்ச புகழை அடைந்திருப்பவர் பிரபுதேவா.
மகேந்திரனின் மனம் கவர்ந்தவர்
பாடல்களில் தோன்றி மக்களுக்கு அறிமுகமாகிவிட்ட முகம் என்பதால், நடிப்புக்கும் முழுத் தகுதி படைத்தவன் தான் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் தன்னை மிகவும் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக பிரபுதேவாவைக் குறிப்பிட்டிருந்தார். அவர் எவ்வளவு சிறந்த நடிகர் என்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
இயக்குநராகவும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெற்றிகளைக் கொடுத்தவர். நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர். 25 ஆண்டுகளுக்கு மேலாக தன் பல்துறை திறமைகளின் மூலம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞராக நீடிக்கும் பிரபுதேவா இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவித்து சாதனைகளை நிகழ்த்த மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago