சர்ச்சைக்குள்ளான பாடலின் பெயர் மாற்றம்: 'கர்ணன்' இயக்குநர் மாரி செல்வராஜ்

By செய்திப்பிரிவு

சர்ச்சைக்குள்ளான பண்டாரத்தி பாடல் இனிமேல் மஞ்சனத்தி பாடல் என்று மாற்றப்படும் என 'கர்ணன்' இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்திலிருந்து வெளியிடப்பட்ட பாடல்கள், டீஸர் ஆகியவற்றுக்கு இணையத்தில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. இந்தப் படத்தின் பாடல்கள் பட்டியல் 'பண்டாரத்தி புராணம்' என்ற பெயரில் பாடலொன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் பெரும் சர்ச்சையானது. இதனைப் படத்திலிருந்து நீக்க வேண்டும், பாடலை இணையத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் மாரி செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'கர்ணன்' திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுக்கொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும் தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கப்பட்டது தான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத் தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாகச் சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன்.

ஆனால், நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன, பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிடப் போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும். காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்"

இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்