இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி: இமான் 

By செய்திப்பிரிவு

இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது கூடுதல் சந்தோஷமாக இருக்கிறது என்று இமான் தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 22) மாலை 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. இதில் இசையமைப்பாளர் டி.இமானுக்கு, 'விஸ்வாசம்' படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது கிடைத்துள்ளது.

இது தொடர்பாக இசையமைப்பாளர் இமான் கூறியிருப்பதாவது:

"இறைவனுக்கு நன்றி. என்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'விஸ்வாசம்' படக்குழுவினரான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார், இயக்குநர் சிவா சார், அஜித் சார், நயன்தாரா மேடம் என ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக அஜித் சாருடைய ரசிகர்களுக்கும் நன்றி. உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கும் நன்றி.

"கண்ணான கண்ணே" பாடல் உருவாக்கும்போது அனைத்து அப்பா - மகளுக்கும் பொருந்த வேண்டும் என்றுதான் யோசித்து உருவாக்கினோம். அது கதைக்கும் பொருந்தி, பாடல் வெளியாகும்போதும் குடும்பத்தில் ஒரு பாடலாக எடுத்துக் கொண்டார்கள். அது பெரிய பிளஸ். படத்தின் வெற்றிக்கும் பெரிய அங்கமாக மாறியது. அந்தப் பாடலைக் கேட்டவுடனே, இப்படியொரு நல்ல பாடல் நம் படத்தில் இருப்பது சந்தோஷம் என்று சொன்னார் அஜித் சார். இப்போது இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது கூடுதல் சந்தோஷமாக இருக்கிறது".

இவ்வாறு இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE