எஸ்.பி.ஜனநாதன் -  இறுதிவரை எளிய மக்களுக்காக இயங்கிய திரைப் படைப்பாளி

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் அரசியல் புரிதலுடன் இயங்கும் படைப்பாளிகள் வெகு குறைவு. அதையும் தாண்டி சினிமா உள்ளடக்கத்துக்கு மட்டும் அரசியலைப் பயன்படுத்தாமல் தான் பேசும் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் பொருத்தமாகத் தனது வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டவர்கள் மிக அரிதானவர்கள்.அப்படிப்பட்ட அரிதான திரைப் படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்.

2003-ல் வெளியாகி சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்ற 'இயற்கை' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குநராக அறிமுகமானார் ஜனநாதன். தமிழகத்தின் கடலோரப் பகுதியை வந்தடையும் கப்பல் மாலுமி ஒருவன் அங்கு வசிக்கும் பெண்னுடன் காதல் வயப்படுவதுதான் படத்தின் மைய இழை. ஆனால் இது காதல் கதை மட்டும் அல்ல. கப்பல்கள் வந்து சேரும் கடலோரப் பகுதிகளில் எளிய மக்களின் வாழ்வியலை கப்பல் பயணிகளைச் சார்ந்திருக்கும் அவர்களது வாழ்வாதாரத்தைப் பதிவு செய்த படம். ஒவ்வொரு காட்சியிலும் பாடலிலும் கடற்கரைக் காற்றின் உப்பு வாசம் வீசியது. உள்ளடக்கம் மட்டுமல்லாமல் உருவாக்கமும் உயர்தரமாக அமைந்திருந்தது. வித்யாசாகரின் பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விதம் ஜனநாதனின் கலைத் திறமையை பறைசாற்றின.

'கலை மக்களுக்காகவே' என்னும் இடதுசாரி சித்தாந்தத்தில் இறுதிவரை மிக உறுதியான பிடிப்பைக் கொண்டிருந்தார் ஜனநாதன். அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் எளிய மக்கள் மீது சுமத்தப்படும் பிரச்சினைகளைப் பேசின. மனிதர்களின் பிரச்சினைகளுக்கும் வர்க்க (பொருளாதார) வேறுபாடுகளுக்கும் இருக்கும் தொடர்பே அவருடைய திரைப்படங்களின் பிரதான பேசுபொருளாக இருந்துள்ளன.

மருத்துவ வணிகத்தின் பெரும்பசிக்கு பலியாக்கப்படும் அடித்தட்டு மக்களைப் பற்றிய சித்திரமான 'ஈ', பழங்குடி சமூகத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரியாக வன இலாகா அதிகாரியாக அரசு பதவியைப்பெறும் இளைஞன் எதிர்கொள்ளும் அவமதிப்புகளையும் சவால்களையும் முன்வைத்த 'பேராண்மை', அரசு என்னும் அமைப்பில் ஊடுருவியுள்ள வன்முறைத்தன்மையை அம்பலப்படுத்திய 'புறம்போக்கு என்னும் பொதுவுடைமை' என ஜனநாதன் இயக்கிய அனைத்து படங்களும் ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளை விரிவாகப் பதிவுசெய்ததோடு ஜனநாதனின் இடதுசாரி அரசியல் பார்வையுடன் அந்தப் பிரச்சினைகளை அவற்றை விளைவித்த காரணிகளையும் தீர்வுகளையும் ஆராய்ந்தவை. அவர் வசனம் எழுதி அவருடைய முன்னாள் உதவி இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கிய 'பூலோகம்' திரைப்படத்தையும் இந்தப் பட்டியலில் இணைக்கலாம்.

விஜய் சேதுபதி- ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள 'லாபம்' திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில் ஜனநாதன் மரணமடைந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் டீசரில். 'லாபம்', இந்திய ஏழைகளைப் பாதிக்கும் சர்வதேச வணிக சதி ஒன்றை அனைவருக்கும் புரியவைக்கும் திரைப்படம் என்பதை உணர முடிந்தது. இதுவும் ஜனநாதனின் அரசியல் சித்தாந்தத்தை இன்னும் காத்திரமாகப் பேசும் திரைப்படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்க வைத்தது.

தமிழ் சினிமாவில் தற்போது மாறிவரும் ரசனை, சமூக ஊடகங்களால் முன்பைவிட அதிகமாக அரசியல் பார்வைகளைப் பெற்றிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால் அரசியல் சினிமாக்களுக்கான இடமும் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. ஆனால் இது நடைபெற்றிராத காலத்திலேயே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை மட்டுமே இயக்கியவர் ஜனநாதன். தமிழ் சினிமாவில் இன்று பொருளாதார, சாதிய ஏற்ற தாழ்வுகள் குறித்த துணிச்சலாகப் பதிவு செய்யும் திரைப்படங்களும் அவற்றை முன்வைக்கும் படைப்பாளிகளும் அதிகரித்திருப்பதற்கு ஜனநாதன் போன்ற படைப்பாளிகள் முன்னத்தி ஏர்களாக இருப்பார்கள்.

அறுபது வயதில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இயற்கையுடன் கலந்துவிட்ட ஜனநாதன் அவருடைய படைப்புகள் அவற்றால் விளைந்த தாக்கங்கள் மூலம் என்றென்றும் நம்முடன் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்