தமிழ்த் திரை இசையுலகின் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத பெயர் கிருஷ்ணன்கோவின் வெங்கடாசலம் மகாதேவன். முழுப் பெயரைக் கேட்டால், யார் இவர்? என்று ரசிகர்கள் புருவம் உயர்த்துவார்கள். திரையிசைத்திலகம்.
அவரது இசை அர்ப்பணிப்புக்காக வழங்கப்பட்ட பட்டம். மாமா. அன்பு கலந்த மரியாதையால் அனைவராலும் அழைக்கப்பட்ட இசை உறவு. ஆம். உங்கள் ஊகம் சரிதான். திரையுலக இசையை சுமார் 40 ஆண்டுகள் கோலோச்சிய கே.வி. மகாதேவன் தான் இது. எத்தனையோ மயக்க வைக்கும் பாடல்களைத் தந்து, தமிழ் ரசிகர்களை அவர் கட்டிப்போட்டு வைத்திருந்தார். கே.வி. மகாதேவனின் பாடல்கள், கலையாத காவியமா? அழிக்க முடியாத அழகின் ஓவியமா?.
தென்கோடியின் நுழைவு வாயிலான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி. மகாதேவன், 1918-ம் ஆண்டு, வெங்கடாசல பாகவதர் - பிச்சையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பாட்டனார் ராம பாகவதர், திருவனந்தபுரத்து சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வான். மகாதேவனின் உதிரத்தில் கலந்த இசை தான், பின்னாளில் பலப்பல இனிய பாடல்கள் உருவாக நதிமூலம், ரிஷிமூலம்.
தாடகை மலை அடிவாரத்தில் பழையாற்றின் மேற்குக் கரையில் இருந்தது பூதப்பாண்டி. இங்குதான் மகாதேவனுக்கு இசையின் அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. பெரிய வாத்தியார் என்று அவ்வூருக்காரர்களால் அழைக்கப்பட்ட அருணாச்சல அண்ணாவி உணவும், இடமும் அளித்து மகாதேவனுக்கு இசைப்பாடம் பயிற்றுவிக்கத் தொடங்கினார். அண்ணாவியின் விரல்கள் ஆர்மோனியக் கட்டைகள் மீது சஞ்சரிக்கும் லாவகத்தை பார்க்க பார்க்க அந்தப் பாணி மகாதேவனை பற்றிக்கொண்டது. மாது. இதுதான் மகாதேவனை, அண்ணாவி வாத்தியார் அழைக்கும் செல்லப்பெயர்.
» சிஏஏ சட்டம் குறித்த திமுக நிலைப்பாடு; தேர்தல் அறிக்கையில் சில திருத்தம்: ஸ்டாலின் அறிவிப்பு
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பும், திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையின் வாசிப்பும் மகாதேவனை மயங்கச் செய்தன.
சிறு வயதிலேயே இசை மீது நாட்டம் கொண்டதால், பள்ளிப்படிப்பை மகாதேவன் மனம் நாடவில்லை. ஏட்டுச் சுரய்க்காய் கறிக்கு உதவாது என்ற உண்மை தெரிந்தோ தெரியாமலோ, மகாதேவனின் மனம், பாட்டு சுரக்கும் மனமானது. அது, பல அழகான பாடல்களைத் தரும் மலரின் மணமானது.
அண்ணாவி வாத்தியாரிடமிருந்து 13 வயதில் பிரிய நேரிட்ட மகாதேவனுக்கு கைகொடுத்தது பாய்ஸ் நாடகக் கம்பெனி. உயரமாக வளர்ந்து தோற்றமும் பளிச்சென்று இருந்து உச்ச ஸ்தாயியில் பாடவும் முடிந்ததால் மகாதேவனுக்கு பாய்ஸ் கம்பெனியில் பெண் வேடம் கிடைத்தது. நாடகங்கள் தான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்கால பொழுதுபோக்கு. பின்பு 1930-களில் தான் தமிழ் பேசும் படம் தலையெடுக்கத் தொடங்கியது. 1932-ம் ஆண்டு சென்னை வந்தார் மகாதேவன். மேடையில் நன்றாகப் பாடினார். யானைகவுனியிலே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் செலுத்த வேண்டிய தொகையை, ''ஒன்றரையனா, இரண்டரையனா'' என அறிவிக்கும் வேலை. குரல் இருக்கிறது என்பதற்காக இப்படியொரு வேலையா?. பட்டாம்பூச்சி மீண்டும் கூட்டுபுழுவாக்கலாமா?. இந்தப் பாட்டுப் பறவையின் சிறகை வெட்டி கூட்டில் அடைக்கலாமா?.
திரையுலக வாழ்வில் மகாதேவனின் முதல் நம்பிக்கை எஸ்.வி. வெங்கட்ராமன். நாடகங்களில் நடித்து தோல்வியில் தவித்து, வயிற்றுப்பாட்டிற்கு வழி தெரியாமல் இருந்த எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு வாய்ப்பாட்டுதான் கைகொடுத்தது. ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தயாரித்த நந்தக்குமார் படத்தில் இசையமைப்பாளராக எஸ்.வி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவி மகாதேவன்.
பூதப்பாண்டி அருணாச்சல கவியாரயரிடம் முறையாக இசை பயின்று, பின்னாளில் அங்கரை விஸ்வநாத பாகவதரின் இசைக்குழுவில் இணைந்தார், திரு. கே.வி. மகாதேவன். அந்த இசைக்குழுவுடன் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டார். அனுபவங்கள் தந்த ஆற்றலே, பின்னாளில் மறக்கமுடியாத பல பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தர உதவியது.
கே.வி. மகாதேவனின் திரையுலகப் பிரவேசம் அவ்வளவு எளிதாக அரங்கேறிவிடவில்லை. கே.வி. மகாதேவன் தட்டினார். கனவுத் தொழிற்சாலையின் கம்பீரமான கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்கவில்லை. கேட்டார். ஆனால், யாரும் வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை. தேடினார். இசையின் முகவரியை நன்றாக அறிந்தும் திரையிசை எனும் வாசலை மட்டும் அவரால் கண்டறிய முடியவில்லை. ஆனால், எந்த நிலையிலும் தன் முயற்சிகளை மட்டும் கே.வி. மகாதேவன் ஊனமாக்கிக் கொள்ளவில்லை. திரையிசை என்ற திரை ஆசை எப்போது நிறைவேறும் என காத்திருந்தார் கே.வி. மகாதேவன்.
'பலவீனர்களின் பாதையில் தடையாய் இருந்த கருங்கற்பாறை, பலசாலிகளின் பாதையில் படிக்கற்களாகிறது' என்றான், தன்னம்பிக்கையை தனக்குள் நிரப்பிக்கொண்ட மனிதன் ஒருவன். வாழ்க்கை சிலருக்குத்தான் வசதியாக வசப்படுகிறது. பலரை வாழ்க்கை, தன்வசப்படுத்திக் கொண்டு தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கிறது. கே.வி. மகாதேவனுக்கு சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக வசப்படவில்லை. அவமானங்கள், அழைக்கழிப்புகள், இடையூறுகள், இன்னல்கள். கே.வி. மகாதவேன் ஓயவில்லை. சினிமா உலகம் வேண்டாம் என வேறு பக்கம் சாயவில்லை.
மகாதேவனுடன் நாடகக் கம்பெனியில் இருந்த நடிகரான பி.ஏ. கல்யாணம், தெலுங்கு வீர அபிமன்யூவில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அவருடன் இணைந்து பணியாற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் விரைந்தார் மகாதேவன். இதுதான் மகாதேவனின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இடம். அவருடைய திரை இசை பங்களிப்புக்கு அஸ்திவாரம் போட்ட இடம்தான் மாடர்ன் தியேட்டர்ஸ்.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணி நாடகத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படமாக எடுத்தது. இதில், கல்யாணம்தான் இசை. ஆனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அதில் மகாதேவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. பி.யு. சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் பாடுவதாக அமைந்த ''மோகனாங்க வதனி, உனையே காணும் பாக்கியம் வருமோ'' என்ற பாடலுக்கு மாகாதேவன் மெட்டமைத்தார். பாடலும் வெற்றி அடைந்தது. ஆனாலும், மனோன்மணி படத்தில் டைட்டில் கார்டில் இசை கல்யாணம் கோஷ்டி என்றுதான் போடுவார்கள். '' கட்டுவோர் விலக்கிய கல்லே, மூலைக்கல்லானது'' என்கிறது வேதம். முதலில் மறுக்கப்படுகிறவர்கள் முடிவில் ஆராதிக்கப்பட வேண்டியவர்களாக மாறுகிறார்கள். மகாதேவனின் இசைப்பணியில் பரஸ்பர உறவுகளில் அவருடை மென்மையான போக்கும் அவர்பால் அவரை ஈர்த்தன.
மனோன்மணி, கே.வி. மகாதேவன் இசையமைத்த முதல் படம். சாஸ்திரீய இசையை சினிமாவில் புகுத்தி, பண்டிதர்களை மட்டுமின்றி, பாமரர்களையும் ரசிக்க வைத்த சுப்பராமன், ஜி. ராமநாதன் போன்றோர் சென்ற பாதையில் பயணம் செய்தவர் கே.வி. மகாதேவன். மேட்டுக்குடி ரசிகர்களிடமிருந்த கர்நாடக இசையை, தன் கைபிடித்து சினிமாவுக்குக் கூட்டிவந்து, பாமரர்களையும் பாடல்களால் சிறைபிடித்தார் கே.வி. மகாதேவன்.
மனோன்மணியைத் தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பிறகு பக்த ஹனுமான், தன அமராவதி என படங்கள் தொடர்ந்தன. மகாதேவனின் மயக்கும் திரை இசைப் பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சில் படர்ந்தன.
தமிழ் சினிமாவில் பிரத்யேக குரலில் பாடி நடிக்கும் சந்திரபாபு, மகாதேவன் இசையில்தான் முதலில் பாடினார். தன அமராவதியில் ''உன்னழகுக் கிணை எண்ணத்தை சொல்வது'' இந்தப் பாடல்தான் மகாதேவன் இசையில் சந்திரபாபு பாடிய முதல் பாடல்.
ஜம்பம், தேவதாசி படங்களுக்குப் பிறகு படம் இல்லாமல் சிரமப்பட்ட மகாதேவனை வறுமை தழுவிக்கொண்டது. அப்போதுதான் கே.வி. மகாதேவன் தன் பெயரைக் கொண்ட இன்னொரு கே.வி. மகாதேவனை சந்தித்தார். கீழைமங்கலம் விஸ்வநாத பாகவதர் மகாதேவன் என்ற வயலின் கலைஞர் ஹெச்.எம்.வி. என்ற நிறுவனத்தில் இசை அமைப்பாளர் பொறுப்பை கே.வி. மகாதேவன் ஏற்கும்படி செய்தார். குறைந்த மாதச்சம்பளம் ராயப்பேட்டை முத்துத்தெருவில் வாடகை வீடு. சாஸ்திரிய இசை, பக்தி இசை, மெல்லிசை, சினிமா இசை என்ற பல ரகப்பட்ட இசை வகைகளை கேட்கும் சந்தர்ப்பத்தை மகாதேவனுக்கு ஹெச்.எம்.வி. வழங்கியது.
ஒரு நாள், காலை வேளை மகாதேவன், ஹெச்.எம்.வி. அலுவலகம் சென்றபோது அவருக்காக காத்திருந்தார் ஒரு பாடகர். பெயர் சௌந்தர் ராஜன் என்ற சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே, ஜூபிடரின் கிருஷ்ண விஜயத்தில் சில பாடல்கள் பாடியிருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரியிலும் பாடியிருந்தார். தற்போது, எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை என வருத்தப்பட்டார். சௌந்தர்ராஜனுக்கு நம்பிக்கை கொடுத்து, நட்புடன் பேசிக் கொண்டிருந்தார் மகாதேவன். "நல்ல காலம் வரும். காத்திருங்கள்" என ஆறுதல் சொன்னார் மகாதேவன். ஹெச்.எம்.வி. மேலாளர் கே.எஸ். ஐயரிடம், சௌந்தர்ராஜனை அழைத்துச் சென்றார். நல்ல குரல் வளம் உடைய சௌந்தர்ராஜனை வைத்து இரண்டு பாட்டு எடுக்கலாம் என சிபாரிசு செய்தார்... பாடும் வாய்ப்போடு, 180 ரூபாய் சம்பளமாகக் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார்.
"வள்ளல் பெருமைதனை சொல்லப் போமோ" என்ற திருவருட் பிரகாச வள்ளலார் பற்றி மருதகாசி பாடல் வரிகளை சௌந்தர்ராஜன் மெட்டமைத்து வைத்திருந்தார். பாடல் வரிகளும், மெட்டும் மகாதேவனுக்குப் பிடித்திருந்ததால், சௌந்தர்ராஜன் குரலில் அதை பதிவு செய்தார். மார்கழி மாதங்களில், பக்திப் பாடல்கள் பந்தி வைக்கப்படுவதற்கு சௌந்தர்ராஜன் பாடிய வள்ளல் பெருமையே தலைவாழை இலையாய் தலை நிமிர்ந்து நின்றது.
'மதன மோஹினி' என்ற படத்தின் வசனகர்த்தாவான மாஸ்டர் பரமேஸ்வரன், அப்படத்தின் இசையமைப்பாளரான கே.வி. மகாதேவனிடம் சிபாரிசு செய்து, புகழேந்தி என்ற இளைஞரை சேர்த்துவிட்டார். மகாதேவனின் உதவி இசையமைப்பாளர் புகழேந்தி என்ற ஒரு அத்தியாயம் தொடங்கப்பட்டது. ஒருசில படங்களில் இசையமைத்து வந்தாலும், மகாதேவனின் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி வைத்தது எம்.ஏ. வேணு தயாரிப்பில் உருவான 'டவுன்பஸ்'.
மகாதேவினின் இசையமைப்பில் மயங்கிய எம்.எஸ்.வி., இந்தப் பாடலின் அடிப்படையில் தான் பின்னாளில், குழந்தையும் தெய்வமும் படத்தில் 'கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே' பாடலை அமைத்ததாக ஒரு தகவல்.
மகாதேவனை, தனது ஆஸ்தான இசையமைப்பாளராக ஆக்கிக் கொண்டவர்கள் இருவர்... ஒருவர் A.P. நாகராஜன். கடவுள் மறுப்பாளர்களையும், தனது புராணப் படங்களை ரசிக்க வைத்த கலைப் படைப்பாளி திரு. A.P. நாகராஜன். காரணம், கொஞ்சி விளையாடும் அவரது வசனத் தமிழ். A.P. நாகராஜனிடம் 10 நிமிடம் பேசுவது, 10 இலக்கியப் புத்தகங்கள் படிப்பதற்கு சமம் என்றார் கவியரசு கண்ணதாசன். சமய இலக்கியங்களிலும், பிற தமிழ் இலக்கியங்களிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த A.P. நாகராஜனுடன் இணைந்து, கே.வி. மகாதேவன் சாதனை வெற்றிகளைக் குவித்தார்.
மகாதேவனை, தனது ஆஸ்தான இசையமைப்பாளராக ஆக்கிக் கொண்ட மற்றொருவர் சின்னப்பா தேவர். ஜூபிடர் பிக்சர்ஸின், ராஜகுமாரி படத்தில் நாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தபோது, தேவருக்கும், அவருக்கும் நட்பு மலர்ந்தது. 1956-ம் ஆண்டு எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து, 'தாய்க்குப் பின் தாரம்' படத்தை எடுத்தார் தேவர். படத்திற்கு கே.வி. மகாதேவன் தான் இசை. பாடல்கள் அனைத்தும் கற்கண்டு.
தொடர்ந்து, நான் பெற்ற செல்வம், மக்களைப் பெற்ற மகராசி, ராஜராஜன் உள்ளிட்ட படங்களில் இசையால் ஈர்த்து, ரசிகர்களின் மனதில் சிம்மாசனத்தில் அமரத் தொடங்கினார் கே.வி. மகாதேவன்.
ரஞ்சனை கதாநாகனாக வைத்து, தேவர் தயாரித்த நீலமலைத் திருடன் மிகப்பெரிய வெற்றிப்படம்.
முக்தா சீனிவாசன் இயக்கிய முதல் படமான முதலாளியில், கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, கொஞ்சம் ஜனரஞ்சகமாக அமைக்கப்பட்ட ஒரு பாடல் பட்டிதொட்டியெல்லாம் மகாதேவனின் புகழை பரப்பியது.
தமிழ்த் திரையுலகில் எத்தனையோ தெம்மாங்குப் பாடல்கள் வந்திருக்கலாம். ஆனால், இந்தப் பாடல் இன்று வரை தெம்மாங்கு பாடல் வரிசையில் எழுந்து நிற்கிறது. ரசிகர்களை எழுந்து ஆட வைக்கிறது.
மெட்டுக்கு பாட்டா? பாட்டுக்கு மெட்டா? திரைப்பாடல் ஒலிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கும் பட்டிமன்ற கேள்வி இது. இதற்கு, இசையை வசப்படுத்திக் கொண்ட கே.வி. மகாதேவனின் திட்டமிட்ட பதில் என்ன தெரியுமா? 'பாட்டுக்குத்தான் மெட்டு'. அதனால் தான் அவரிடம் பணிபுரிய வந்த பாடலாசிரியர்கள், 'வந்தார்கள், வென்றார்கள்'.
மாண்புமிகு அம்மாவை திரைப்பாடகியாகவும் மாற்றிய பெருமை மாமா மகாதேவனுக்கு உண்டு. அடிமைப்பெண்ணில் வரும் 'அம்மா என்றால் அன்பு' பாடல் அம்மாவின் பெருமை பேசும்.
அத்தி பூத்தாற்போல் என்று சொல்வார்களே! அதுபோல, திரையிசையிலும் ஒருசிலர் எப்போதாவது பாட வந்து ஒருசில பாடல்களைப் பாடி, நம் நினைவில் நிரந்தரமாக குடியேறிவிடுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் தாராபுரம் சுந்தரராஜன். சொற்பமாய் சில பாடல்களைப் பாடி, அவற்றை சொர்க்கமான இசையில் இணைத்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர். கே.வி. மகாதேவன் இசையில், ஜமுனாராணியுடன் இணைந்து அவர் பாடிய பாடல். 'எனக்காகவா? உனக்காகவா'. இல்லையில்லை. தமிழ் ரசிகர்களுக்காக!
சாண்டோ சின்னப்பாதேவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கே.வி. மகாதேவன், கண்ணதாசன் கூட்டணி, தன் வெற்றிப்பரிவாரத்தை பல ஆண்டுகளாக நடத்திக் காட்டியது. தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக, தேனினும் இனிய பாடல்களைத் தந்து, பாட்டு சாம்ராஜ்யம் நடத்தினார் கே.வி. மகாதேவன்.
துள்ளல் பாடல்களின் துடிப்பான நாயகி எல்.ஆர். ஈஸ்வரி. 'நல்ல இடத்து சம்பந்தம்' மூலம் அவரை பாடகியாக்கிய கே.வி. மகாதேவன், தனது இசையில், ஈஸ்வரியை பல வெற்றிப்பாடல்களைப் பாடவைத்து பெருமை சேர்த்தார். துள்ளல் பாட்டுப் பாடகியை, பரீட்சார்த்த முறையில் மெல்லிய இசையுடன் கூடிய பாடலைப் பாடவைத்தும் வெற்றி பெற்றார். ஈஸ்வரியின் மெல்லிய ரீங்காரத்துடன் ஒலிக்கும் இந்த பாடல், இரவில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு வானம் பார்க்கிற அழகு. சிந்தையை குளிர வைக்கும் சித்திரை மாதத்து நிலவு.
வார்த்தைகள் வலம்வரும் பாதையை கண்ணீர் அடைத்துக்கொள்ள, நீளமான நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே முடிகிறது. பள்ளி, கல்லூரியின் கடைசி நாள். தொட்டணைத்தூரும் மணற்கேணி போல, தோண்டத்தோண்ட Bore Well தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது. Bore Well போல இந்த Farewell பாடல் கண்ணீரால் நனைக்கிறது. கே.வி. மகாதேவன் இசையில் வெளிவந்த இந்த பாடல், இன்றுவரை கல்லூரி வாழ்வின் கடைசி நாள் தேசியகீதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் ரத்தத்திலகம் படத்தில் வரும் 'பசுமை நிறைந்த நினைவுகளே... பாடிப் பறந்த பறவைகளே' என்ற பாடல்.
கவியரசர் கண்ணதாசன் கற்பனையில் உதித்த கடினமான, ஆனால் கவிநயம் மிக்க வரிகளைக் கூட, தனது இசைக்குக் கட்டுப்படுத்தி வைத்தவர் கே.வி. மகாதேவன். அடுத்தவர் அழுக்கை வெளுத்து, தனது அடிவயிற்றைக் குளிரவைத்துக் கொள்கிறார்கள் சலவைத் தொழிலாளர்கள், சமுதாயத்தின் அழுக்கை அடித்துத் துவைத்து தூய்மைப்படுத்தும் முற்போக்காளர்களைப் போல. சலவைத் தொழிலாளர்களின் சலசலக்கும் இசையில், மாமா கே.வி. மகாதேவனின் மந்திரப் பாடல் இது.
தெலுங்கில் பல படங்களில் ஜொலித்த மகாதவனின் இசை, சங்கராபரணத்தில் அவரை சாதனை நாயகனாக்கியது.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில், முக்கியமான இடத்தைப் பிடித்த தில்லானா மோகனாம்பாளுக்கு மகாதேவன் தான் இசை. நாதத்தோடு இணைந்த நளினமான இசை, ரசிகர்களை நலம்தானா? எனக் கேட்க வைத்தது.
காவியமா நெஞ்சின் ஓவியமா, சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா, உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல, ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, பாட்டு ஒரே பாட்டு, கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு, அமுதும் தேனும் எதற்கு, ஆகா நம் ஆசை நிறைவேறுமா, நடக்கும் என்பார் நடக்காது, ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், மணமகளே மருமகளே வாவா, கள்ளமலர் சிரிப்பிலே, கண்களின் அழைப்பிலே, மன்னவன் வந்தானடி,
எண்ணிரண்டு 16 வயது, சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, ஏரிக்கரையினிலே போறவளே, மாமா, மாமா போன்ற பாடல்களை தமிழ் ரசிகர்கள் மறக்கத்தான் முடியுமா? மாமாவின் பாடல்கள் இருக்கும்போது, அமுதும் தேனும் எதற்கு?
திரு. கே.வி. மகாதேவனின் திரையிசை சாதனையை, ஒருசில மணி நேரத்திற்குள் சொல்வதென்பது, வானத்தை வானவில்லுக்குள் அடைப்பது போன்றதாகும். வெற்றிகள் அவரை சுற்றிவளைத்த போதும், எதற்கும் வளையாத இசை நேர்மை அவரிடம் இருந்தது. எந்த வெற்றியைும் அவரை கர்வம் அடையச் செய்யவில்லை. கே.வி. மகாதேவனின் சாதனைகளைச் சொல்ல 'ஒரு நாள் போதுமா'.
லாரன்ஸ் விஜயன்
மூத்த பத்திரிகையாளர்
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago