தமிழ் சினிமாவில் புதிய நூற்றாண்டில் முதல் தடம் பதித்த இயக்குநர்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பவர்களில் ஒருவரான இயக்குநர் செல்வராகவன் இன்று (மார்ச் 5) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் பதின்பருவத்தில் எளிய நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெறக்கூடிய அனுபவங்கள் அனைத்தையும் கடந்துவந்தவர். அவற்றிலிருந்தே அவர் தன் படைப்பாளுமையை அதன் உந்து சக்தியாக இருக்கும் வாழ்வு, சமூகம் பற்றிய பார்வையை உருவாக்கிக்கொண்டார் என்று சொல்லலாம். அவருடைய படைப்புகளில் குறிப்பாக முதல் மூன்று படங்கள் அதற்குச் சான்றாக நிற்கின்றன. சமூகத்தில் பெரும்பகுதியைச் சேர்ந்த எளிய மனிதர்களுக்கு நெருக்கமான அவர்களில் பலர் எதிர்கொண்டிருக்கக்கூடிய அனுபவங்களை உணர்வுகளை உயிர்ப்புடன் காட்சிப்படுத்தும் அபாரத் திறன் செல்வராகவனுக்கு இத்தனை பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
2002இல் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் செல்வராகவன். விடலைப் பருவத்தின் இனம்புரியா உணர்வுகளை விடலை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் காட்சிப்படுத்திய அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. அடுத்த ஆண்டு 'காதல் கொண்டேன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் தான் விடலை விவகாரங்களைக் கடந்த காத்திரமான விஷயங்களைப் பேசும் திறனும் ஆழமும் படைத்த படைப்பாளி என்று நிரூபித்தார். காதலின் உடைமை உணர்ச்சியால் மனப்பிறழ்வுக்குள்ளாகும் இளைஞனின் கதையை முன்வைத்த உயிர்ப்பு மிக்க அந்தப் படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பதிவு செய்த முதல் தமிழ்ப் படமுக்கூட. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் '7ஜி ரெயின்போ காலனி' என்னும் படத்தின் மூலம் மேலும் பல ரசிகர்களையும் விமர்சகர்களையும் வியப்புக்குள்ளாக்கினார். ஊதாரியாகத் திரிபவன் காதலால் பொறுப்புமிக்க மனிதனாக மாறும் கதையை மிக யதார்த்தமாகவும் ரசிக்கும் வகையிலும் படமாக்கியிருந்தார்.
» முதல் பார்வை: நெஞ்சம் மறப்பதில்லை
» போட்டி சங்கம் நடத்துவதா?- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
இந்த மூன்றுப் படங்களுக்குப் பிறகு செல்வராகவனின் திரைப்படங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் அடுத்தடுத்த தடங்களுக்கு உயர்ந்தன. 'புதுப்பேட்டை' தமிழ் சினிமாவின் கேங்ஸ்டர் படங்களில் புதிய கல்ட்டாக உருவெடுத்தது. அந்தப் படத்தின் மூலம் சூழ்நிலை சந்தர்பத்தால் ரவுடியாகி அதையே தன் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு இறுதியில் அதனால் அனைத்தையும் இழக்கும் மனிதனின் அர்த்தமற்ற வாழ்க்கையையும் ரவுடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள பிணைப்பையும் அதிலுள்ள துரோகங்களையும் ரத்தமும் சதையுமாகப் பதிவுசெய்திருப்பார். ரவுடிகளை நாயகர்களாகக் கொண்ட படங்கள் அவர்களை மிகத் தூயவர்களாகச் சித்தரித்து வந்த நிலையில் தன் நண்பனின் தங்கையின் திருமணத்தைத் தடுத்து அவளை மிரட்டி திருமணம் செய்துகொள்ளும் 'கொக்கி' குமாரின் வழியாக நாயக அந்தஸ்தைப் பெற்றுவிட்ட ரவுடிகளின் இருண்ட பக்கங்களையும் காண்பித்த படம் 'புதுப்பேட்டை'.
அடுத்ததாக 'ஆயிரத்தில் ஒருவன்' யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியம். தனிமைப்படுத்திக்கொண்டு பொதுசமூகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு அரசர் காலத்து வாழ்வியலுடன் அதே நேரம் பஞ்சத்தில் அடிபட்டு கொடிய வாழ்நிலையில் இருக்கும் சோழ அரசகுல வழித்தோன்றல் மற்றும் அவனுடைய குடிகள் அவர்களுக்கு எதிராக நவீன அரசு, ராணுவக் கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவி அந்த பலத்தைக் கொண்டு சோழர்களைப் பழிவாங்கும் பாண்டிய குல வழித்தோன்றல்கள் என்னும் கற்பனையே மிகப் பிரம்மாண்டமானது. அதைக் காட்சிப்படுத்தியதில் திரையில் பிரம்மாண்டத்துக்கு புதிய இலக்கணம் வகுத்தார் செல்வராகவன். வணிகரீதியாக எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறாத இவ்விரு படங்களே செல்வாவை பலர் வியந்து போற்றுவதற்கும் கொண்டாடுவதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.
இரண்டு பிரம்மாண்ட படைப்புகளில் பொதுச் சமூகம் சார்ந்த விஷயங்களைக் கையாண்ட பின் 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் மீண்டும் அக உணர்வுகளுக்குத் திரும்பினார் செல்வராகவன். சமூக எதிர்பார்ப்பின் அழுத்தங்களுக்கு அஞ்சாமல் தன் கனவை நோக்கிப் பயணிக்கும் நாயகனுக்கு உற்ற துணையாக வரும் நட்புகள், காதல், துரோகம், சாதிப்பதற்கான தடைகளால் விளையும் மன அழுத்தத்தின் விகார வெளிப்பாடுகள் என மனித உறவுகள் மற்றும் உணர்வுகளின் ஆழங்களுக்குச் சென்று ஒளிபாய்ச்சினார் செல்வராகவன். மனித உணர்வுகள் சார்ந்த நுண்ணுணர்வும் கலைரசனையும் கொண்ட ரசிகர்கள் பலருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது 'மயக்கம் என்ன'.
ஆழமான விஷயங்களைப் பேசும் செல்வராகவன் படங்கள் அனைத்திலும் இயல்பான நகைச்சுவை இழையோடிய படியே இருக்கும். பாடல்கள் பிரமாதமாக அமையும், காட்சிப்படுத்தல் இசையின் உயர்தரத்துக்கு நியாயம் செய்திருக்கும். தெலுங்கில் அவர் இயக்கிய 'ஆடவாரி மாடலுக்கி அர்த்தாலே வெறுலே' படம் த்ரிஷாவிடமிருந்த நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்த கலகலப்பான உணர்வுப்பூர்வமான படம். அந்தப் படம் தமிழில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டு தனுஷ் - நயன்தாரா நடிப்பில் 'யாரடி நீ மோகினி' என்னும் பெயரில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்றது.
'மயக்கம் என்ன'வுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்கள் வணிகரீதியாகவும் வெற்றிபெறவில்லை விமர்சகர்களின் பாராட்டையும் பெறவில்லை. சிலம்பரசனுடன் 'கான்', சந்தானத்துடன் 'மன்னவன் வந்தானடி' போன்ற படங்கள் அறிவிப்பின் போதே பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பின. ஆனால் பாதியில் தடைபட்டுவிட்டன. ஆனாலும் அவருடைய ரசிகர் படை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இன்றளவும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரிதும் கொண்டாடப்படும் படைப்பாளியாகத் திகழ்கிறார் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில் இன்னொரு இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே சூர்யா நாயகனாக நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' நீண்ட தாமதத்துக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்றும் எப்படியாவது வெளியாகிவிட வேண்டும் என்று ரசிகர்களைப் பெரிதும் ஏங்க வைத்த படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மார்ச் 5, 2021 என்று உறுதி செய்யப்பட்டதிலிருந்து ட்விட்டரில் ட்ரெண்டிங் டாபிக்குகளில் ஒன்றாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் பதிவுகள் இடம்பெற்றிருக்கிறன. நேற்றுவரை நீடித்த கடைசி நேரத் தடையைக் கடந்து ஒருவழியாக இன்று வெளியாகிவிட்ட படத்துக்குப் பாராட்டும் விதமான விமர்சனங்கள் பரவலாகக் கிடைத்துவருவது செல்வராகவன் ரசிகர்களை உச்சக்கட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் திரையில் இந்தப் படத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இனிவரும் காலத்தில் செல்வராகவன் அவருடைய படைப்புலகின் சாளரங்களை அவற்றிலிருந்து படைப்பாளுமையின் புதிய பரிமாணங்களை எப்போதும் போலத் துணிச்சலாகவும் காத்திரமாகவும் வெளிப்படுத்தும் திரைப்படங்கள் அமைய வேண்டும். மதிப்புக்குரிய அந்தத் திரைப் படைப்பாளி தொடர்ந்து இயங்குவதற்கான எரிபொருளாகத் தொடர் வெற்றிகளும் அரிய விருதுகளும் ரசிகர்களின் வரவேற்பும் கொண்டாட்டமும் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago