காணாமல் போன பெண்ணைத் தந்தையும், காதலனும், காவல்துறையும் தீவிரமாகத் தேடினால், உணர்வுபூர்வமான போராட்டத்துக்குப் பிறகு அதற்கான பதில் கிடைத்தால் அதுவே 'அன்பிற்கினியாள்'.
சிவம் (அருண் பாண்டியன்) நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை. எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிகிறார். இவரது மகள் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்) செவிலியர் படிப்பு முடித்த பட்டதாரி. அம்மாவின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கும் பொருட்டு கனடா சென்று நர்ஸாகப் பணிபுரிய முயல்கிறார். அதற்காக ஐஇஎல்டிஎஸ் பயிற்சிக்குப் பகுதி நேரமாகச் செல்கிறார். பிறகு, மிகப்பெரிய மால் ஒன்றில் இருக்கும் சிக்கன் ஹப்பில் ஊழியராகப் பணிபுரிகிறார். இதனிடையே தந்தைக்குத் தெரியாமல் தன் காதலை ரகசியமாக வளர்த்து வருகிறார்.
ஒருநாள் மகளின் காதல் ரகசியம் காவல் நிலையத்தில் வெளிப்படுகிறது. இதனால் தந்தை அருண் பாண்டியன் மகள் மீது பாராமுகமாக இருக்கிறார். தந்தையின் புறக்கணிப்பு கீர்த்திக்கு வலியைக் கொடுக்கிறது. சிக்கன் ஹப்புக்குப் பணிபுரியச் சென்ற கீர்த்தி நள்ளிரவு 12 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. மகளைத் தேடி அலையும் அருண் பாண்டியன் ஒருவழியாகக் காவல் நிலையம் வந்து புகார் கொடுக்கிறார். கீர்த்தியின் காதலர் அந்த நேரத்தில் வேலைக்காக ஹைதராபாத் விரைவது தெரியவருகிறது. காதலனுடன் கீர்த்தி ஓடிவிட்டதாக போலீஸ் கூறுகிறது.
உண்மையில் நடந்தது என்ன, அப்பாவின் அன்புக்காக ஏங்கிய கீர்த்திக்கு என்ன ஆனது, அவரால் ஏன் வீடு திரும்ப முடியவில்லை, காதலனுக்கும் இதற்கும் உள்ள சம்பந்தம் என்ன, கீர்த்தி கிடைத்தாரா போன்ற கேள்விகளுக்கான விடை திரைக்கதையாக விரிகிறது.
மலையாளத்தில் ஹிட்டடித்த 'ஹெலன்' படத்தைத் தமிழில் மறு ஆக்கம் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜுங்கா' படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ஐந்தாவது படம். மறு ஆக்கம் என்று எடுத்துக்கொண்டால் முதல் படம்.
பெரும்பாலும் மலையாளப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும்போது அதன் ஆன்மாவைக் கடத்துவதில் பெரும் சிக்கல் எழும். அதனாலேயே தமிழில் அத்தகைய படங்களை ரீமேக் செய்வதில் போதாமை நிலவும். ஆனால், கோகுல் இதில் விதிவிலக்கு. உறவுச் சிக்கல்களை உணர்வு ரீதியாக அப்படியே கடத்தி அப்ளாஸ் அள்ளுகிறார்.
சுமார் 35 ஆண்டுகளாக நடிப்புத் துறையில் இருக்கும் அருண் பாண்டியன் சொந்த மகளுக்காக (கீர்த்தி பாண்டியன்) மறுவருகை புரிந்துள்ளார். அவர் நடிப்பும், குரல் மொழியும் கொஞ்சம் செயற்கையாகத் தெரிந்தாலும் அதுதான் அவரது இயல்பு என்பதைப் பழைய படங்களின் மூலம் அறிய முடிகிறது. மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் மிகக் குறைவாகவே வெளிப்படுத்துகிறார். ஆனால், மகளின் காதலனை எதிர்கொள்ளும் விதத்திலும், காவல் நிலையத்தில் போலீஸாரை அணுகும் விதத்திலும் அட போட வைக்கிறார்.
'தும்பா' படத்துக்குப் பிறகு கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள இரண்டாவது படம். எந்த ஒரு நாயகிக்கும் பெண் மையச் சினிமாவில் நடிப்பது கனவாகவே இருக்கும். கீர்த்தியைப் பொறுத்தவரையில் அந்தக் கனவு இரண்டாவது படத்திலேயே நனவாகியுள்ளது. அதற்கேற்ப தன் முழுமையான பங்களிப்பைக் கொடுத்து அசர வைக்கிறார். ஆபத்தில் சிக்கிய அவர் சவாலான இடங்களில் கச்சிதமான நடிப்பில் கவர்கிறார்.
கீர்த்தி பாண்டியனின் காதலனாக சார்லஸ் செபாஸ்டியன் கதாபாத்திரத்தில் பிரவீன் ராஜ் இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். எஸ்.ஐ.யாக நடித்த ரவீந்திர விஜய் வழக்கமான கெட்ட போலீஸின் குணங்களை பிரதிபலித்தார். சிக்கன் கடை மேலாளராக நடித்த பூபதி ராஜாவும், மால் செக்யூரிட்டியாக நடித்த ஜெயராஜும், ஏட்டாக நடித்த அடிநாட் சசியும் பாத்திரம் உணர்ந்து நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். கைதியாக வரும் இயக்குநர் கோகுலும் போகிற போக்கில் ஸ்கோர் செய்கிறார்.
இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் இசையும், பின்னணியும் படத்தைப் பெரிய அளவில் தூக்கி நிறுத்துகின்றன. அளவான பாடல்களும் கவனம் ஈர்க்கின்றன. நாயகியின் அண்டை வீட்டுச் சூழலை இயல்பாகக் காட்டிய ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, சிக்கன் ஹப் இருக்கும் மாலின் பரப்பையும், சிக்கன் ஹப் கடையின் உட்புறத்தையும் வெவ்வேறு கோணங்களில் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார்.
தந்தை- மகள், காதலன் - காதலி, ஆண் மேலாளர்- பெண் ஊழியர் என்று மூன்று விதமான உறவுச் சிக்கல்களைப் பற்றி இயக்குநர் பதிவு செய்துள்ள விதம் பாராட்டுக்குரியது. கீர்த்தி பாண்டியனுக்கு நடக்க இருக்கும் ஆபத்தும் கதைக்குள் ஒவ்வொரு படியாகக் காட்டப்படுகிறது. எறும்பு, எலி மூலம் அதனைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அந்த ஆபத்தின் எல்லை அறிந்த பிறகு சோர்வில்லாமல் படம் நகர்வது சாதாரணம் இல்லை. திரைக்கதையின் பலமும், நாயகியின் நடிப்பும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம். அந்த விதத்தில் இயக்குநர் கோகுலும், நாயகி கீர்த்தி பாண்டியனும் முழு பலத்தை அளிக்க, பிரதீப் ராகவும் நேர்த்தியான எடிட்டிங்கில் கூடுதல் வலு சேர்த்துள்ளார். அப்பா- மகள் கதை வழக்கமும் பழக்கமும் ஆனது என்பதால் அதில் த்ரில்லர் பாணியைச் சேர்த்திருப்பது திரைக்கதையின் கட்டமைப்புக்குக் கை கொடுக்கிறது.
காவல்துறையின் விசாரணை என்கிற பெயரில் அவர்களின் அணுகுமுறை என்னவாக இருக்கிறது, எண்ணவோட்டம் எவ்வாறாக வெளிப்படுகிறது என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தி பொதுப்புத்தியின் மீது இயக்குநர் கல்லெறிகிறார்.
அப்பா- மகள் உறவுதான் படத்தின் பிரதானம் என்பதால் அதை நிறுவ ஏன் சுமார் 45 நிமிடங்கள்? அதிலும் பாசத்தையும், நண்பர்களைப் போல் பழகுகிறார்கள் என்று காட்டவும் ஏன் வழக்கமான காட்சிகள்? இன்ஸ்பெக்டர் நல்லவர், எஸ்.ஐ.கெட்டவர், நாயகியைச் சீண்டும் ஆட்டோ ஓட்டுநர் போன்றவையும் மாறாத டெம்ப்ளேட் அம்சங்கள். ஏட்டு, மால் செக்யூரிட்டி பாத்திரப் படைப்பு மட்டும் பாசிட்டிவ் தன்மையால் ரசிக்கப்படுகிறது. இந்தச் சிறு குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் அன்பையும், நம்பிக்கையையும் பரப்பும் அனுபவத்துக்காக அன்பிற்கினியாளை தாராளமாக வரவேற்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago