தமிழ் சினிமாவில் எளிய பின்னணியிலிருந்து வந்து சாதித்துக் காட்டிய வெற்றியாளர்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதும் கூடுதலான அன்பும் மதிப்பும் இருக்கும். ரசிகர்களின் அந்தக் கூடுதல் அன்பையும் மதிப்பையும் மிகக் குறைந்த காலத்தில் பெற்றுவிட்டதோடு தான் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பொதுவெளிச் செயல்பாடுகளாலும் ரசிகர்களால் தங்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுவிட்டவரான நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (பிப்ரவரி 17) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
வெகுசிலரில் ஒருவர்
எப்போதும் உச்சக்கட்ட போட்டி நிலவும் சினிமா உலகில் வெற்றி பெறுவதும் வெற்றிபெற்ற பிறகும் பல ஆண்டுகளுக்கு நீடித்து நிலைப்பதும் மிக அரிதிலும் அரிதான சாதனைதான். பல்லாயிரங்களில் ஒருவருக்கே திரைப்படங்களில் தலைகாட்ட வாய்ப்பு கிடைக்கும். லட்சங்களில் ஒருவருக்குத்தான் ரசிகர்களால் அடையாளம் காணப்படும் வகையில் சினிமாவில் எதையாவது செய்து காண்பிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதிலும் வெற்றிபெற்றுத் தொடர் வெற்றிகளைக் கொடுத்து நிலைத்து நிற்பதும் நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதும் கோடியில் ஒருவருக்கு மட்டுமே வாய்க்கும் நற்பேறு. அதையும் தாண்டி பொதுவான சினிமா பார்வையாளர்கள் திரையில் தோன்றும் நடிகரை இவர் நம்மவர் இவருடைய வெற்றி நம்முடைய வெற்றி இவர் என்றும் வென்றுகொண்டே இருக்க வேண்டும், இவருக்கும் எப்போதும் நன்மையே நடக்க வேண்டும் என்று தன்னைப்போல் ஒரு திரை நட்சத்திரத்தையும் நினைக்க வைப்பது விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சிலருக்கே வாய்த்திருக்கிறது. அந்த வெகுசிலரில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
திருச்சியில் பிறந்து வளர்ந்தவரான சிவகார்த்திகேயன் கல்லூரிப் பருவத்திலிருந்தே கலை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மட்டும் ஸ்டேண்ட் அப் காமெடி கலைஞராகப் பங்கேற்று உள்ளூர் அளவில் திறமைசாலியாக அங்கீகரிக்கப்பட்டவர். அந்தத் திறமைகளின் மூலமாகவே புகழ்பெற்ற தனியார் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய அபார மிமிக்ரி, நகைச்சுவைத் திறமை மூலமாக வெற்றிகளைக் குவித்தார். சிவகார்த்திகேயனின் மிமிக்ரியில் ஒரு தனித்தன்மை இருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிமிக்ரி செய்யும் பலர் அவருடைய குரலையும், உச்சரிப்பையும், வேகமாகப் பேசும் பாணியையும் பிரதியெடுப்பார்கள். சிவகார்த்திகேயன் ஒரு படி மேலே போய் ரஜினி தமிழ் பேசும்போது அதிகமாகப் பயன்படுத்தும் சொற்கள், ஒரு சொற்றொடரிலிருந்து இன்னொரு சொற்றொடரை யோசிக்கும் ஒரு நொடிப்பொழுது இடைவெளியை நிரப்புவதற்காகப் பயன்படுத்தும் சொற்கள் (filler) ஆகியவற்றையும் கச்சிதமாக மிமிக்ரியில் கொண்டுவந்தார். இதுவே ஒரு மிமிக்ரி கலைஞராக அவருக்குத் தனிக் கவனத்தை ஈர்த்தது.
தொகுப்பாளராகவும் ரசிக்கவைத்தவர்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளர் என்பதைத் தாண்டி அதே தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்தபின் சிவகார்த்திகேயனின் சின்னதிரை ரசிகர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்தது. ஒரு தொகுப்பாளராக அவரிடமிருந்து வெளிப்பட்ட இயல்பான கிண்டலும், குறும்பும், இவற்றைத் தாண்டிய அப்பாவித்தனமும் சிவகார்த்திகேயனை மக்கள் மனங்களுக்கு நெருக்கமாக்கியது. திரைப்படங்களிலும் இன்றுவரை வெளிப்படும் அந்த இயல்புகளே சிவகார்த்திகேயனை மக்களால் நேசிக்கப்படும் கலைஞராக உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றின.
அறிமுகப் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய 'மெரினா' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை நாயகனாக்கினார். இந்தப் படம் வெளியான பிறகுதான் அவர் தனுஷுடன் நாயகனின் நண்பன் என்னும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்த '3' வெளியானது. இவ்விரு படங்களும் சிவகார்த்திகேயன் மீது திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க உதவின. எழில் இயக்கத்தில் 'மனம் கொத்திப் பறவை' என்னும் படத்தில் தன் சிறுவயதுத் தோழியை உருகி உருகிக் காதலிக்கும் சிற்றூர் இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தார் சிவகார்த்திகேயன். நகைச்சுவையை மையமாகக் கொண்டிருந்தாலும் காதல், பாடல்கள்,சென்டிமென்ட் காட்சிகள் என மற்ற அம்சங்களிலும் நிறைவளித்த அந்தப் படம் வெற்றி பெற்றது.
குழந்தைகளைக் கவர்ந்த நாயகன்
தமிழ்த் திரையுலகில் சிவகார்த்திகேயனின் திறமையை முன் உணர்ந்தவர்களில் முக்கியமானவர் அன்று முன்னணி நட்சத்திரமாக இருந்த தனுஷ். சிவகார்த்திகேயனை நாயகனாக்கி, வெற்றிமாறனின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய துரை செந்தில்குமாரை இயக்குநராக அறிமுகப்படுத்தி 'எதிர்நீச்சல்' என்னும் படத்தைத் தயாரித்தார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த கதையையும் அனிருத்தின் அருமையான பாடல்களையும் கொண்டிருந்த அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைந்து சிவகார்த்திகேயனை நட்சத்திர ஏணியின் முதல் படிக்கட்டில் அமரவைத்தது என்று சொல்லலாம்.
அதற்கடுத்து பெரும்புகழைப் பெற்ற இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதித் தயாரித்த 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்தார். எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் செய்யும் மான் கராத்தே போஸில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வது அன்றைய குழந்தைகள் இடையே மிகப்பெரிய ட்ரெண்டானது. இதன் மூலம் குழந்தைகள் பலர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களானார்கள். குழந்தைகளை மகிழ்விக்கப் பெற்றோர் அழைத்துச் செல்லும் படங்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் இடம்பிடித்தன. இப்படியாகக் குழந்தைகளையும் அதன் வாயிலாக குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த நட்சத்திரமாக அங்கீகரிக்கப்பட்டார் சிவகார்த்திகேயன்.
இவ்விரு படங்களுக்கிடையில் அறிமுக இயக்குநர் பொன்ராமின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் கிராமத்து ரோமியோ இளைஞராக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். மட்டற்ற நகைச்சுவையை வாரி வழங்கிய இந்தப் படம் சிவகார்த்திகேயனை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றது. ஆல் சென்டர் ஸ்டார் என்கிற அங்கீகாரமும் அவருக்குக் கிடைத்தது. இதே கூட்டணி மீண்டும் இணைந்த 'ரஜினி முருகன்' படமும் அனைத்து சென்டர்களிலும் ஹிட் ஆகி சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்துக்கு வலுவூட்டியது. இவற்றுக்கிடையில் மீண்டும் தனுஷ்-துரை செந்திலுடன் கூட்டணியுடன் இணைந்து அவர் நடித்த 'காக்கி சட்டை', விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றதோடு சிவகார்த்திகேயனை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் கவனிக்க வைத்தது.
பெரிய பட்ஜெட்டும் சீரியஸ் கன்டென்ட்டும்
அடுத்ததாக பெரிய பட்ஜெட்டில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி போன்ற உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை உள்ளடக்ககிய 'ரெமோ' படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ஒரு பெண் செவிலியராக மாறு வேடமிட்டு மருத்துவரான தன் காதலியைக் கவரும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனின் மேக்கப்பும், கெட்டப்பும், நடிப்பும் கதையிலிருந்த நகைச்சுவையும் கலகலப்பும் பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்தது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றானது 'ரெமோ'.
இதற்கடுத்து 'தனி ஒருவன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு எம்.ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தில் நாயகனாக நடித்தார் சிவகார்த்திகேயன். தனிநபர் நேர்மை, ஒழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு, கார்ப்பரேட் ஊழல் எதிர்ப்பு என்பது போன்ற கனமான உள்ளடக்கங்களைக் கொண்டிருந்த இந்தப் படம் சிவகார்த்திகேயன், நகைச்சுவையை மையப்படுத்திய லைட் ஹார்ட்டட் படங்களில் மட்டுமே நடிப்பவர் என்னும் பிம்பம் நீங்க உதவியது.
நாயகத் திறமையின் முழுவீச்சு
எல்லாத் துறைகளிலும் வெற்றி தோல்வி சகஜம். மிகப் பெரிய மக்கள் பரப்பைக் கவர வேண்டிய தேவை இருக்கும் திரையுலகிலோ தோல்விகள் தவிர்க்கவே முடியாத நிதர்சனம். அதற்கேற்ப சிவகார்த்திகேயனுக்கும் அடுத்தடுத்த ஒரு சில தோல்விப் படங்கள் அமைந்தன. ஆனால், ரசிகர்கள் எண்ணிக்கையும் அவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பும் அப்போதும் குறைந்துவிடவில்லை.
இயக்குநர் பாண்டிராஜுடன் மூன்றாம் முறையாக இணைந்து 'நம்மவீட்டுப் பிள்ளை' படத்தில் ஒரு பெருங்குடும்பத்தில் தந்தையை இழந்த தலைமகனாக, உறவுகளைக் கொண்டாடும் உறுப்பினராக, தங்கையை உயிருக்கு மேலாய் மதிக்கும் தமையனாக உணர்வுபூர்வமான நடிப்பிலும் அசத்தியிருந்தார் சிவாகார்த்திகேயன். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம் ஒரு நாயக நடிகராக சிவகார்த்திகேயனுடைய திறமையின் முழுவீச்சை உணர வைத்தது.
அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் படங்கள் சிவகார்த்திகேயன் இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என்னும் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன. 'கோலமாவு கோகிலா புகழ்' நெல்சன் இயக்கியுள்ள 'டாக்டர்' மார்ச் 26 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்திருக்கிறார்.
'இன்று நேற்று நாளை' என்னும் அறிவியல் புனைவு திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் ஆர்.ரவிகுமாரின் 'அயலான்' என்னும் படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் மாறுபட்ட அதே நேரம் மிக முக்கியமான படமாக அமையும் என்று உறுதியாக நம்பலாம். இவை தவிர சிபி சக்ரவர்த்தி என்னும் புதியவர் இயக்கவிருக்கும் 'டான்' படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தரமான படங்களின் நேசர்
இவற்றுக்கிடையில் ஒரு தயாரிப்பாளராக முதல் படத்திலேயே தரமான படங்களின் நேசராக முத்திரை பதித்துவிட்டார். தன்னுடைய நண்பரும் பன்முகத் திறமையாளருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை முன்வைத்து ஒரு விவசாயியின் மகளின் வெற்றிக் கதையை முதன்மைப்படுத்திய 'கனா' படத்தைத் தயாரித்தார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகி வெற்றிபெற்ற அந்தப் படம் மகளிர் கிரிக்கெட் பற்றிய வெகுஜன சினிமாவின் முதல் பதிவாக அமைந்தது.
தன்னைப் போன்று தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த ரியோவை நாயகனாக்கி 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தயாரித்து, யூடியூப் பிரபலங்களுக்கும் சினிமாவுக்கான வாய்ப்பு வாசல்களைத் திறந்துவிட்ட விதத்திலும் சிவகார்த்திகேயனின் பங்கு முக்கியமானது.
பொதுவாகக் குறுகிய காலத்தில் வெற்றி பெறுபவர்கள் அதிர்ஷ்டத்தால் வென்றவர் என்ற நியாயமற்ற அவப்பெயரைச் சுமக்க நேரும். யாராலுமே அதிர்ஷ்டத்தால் மட்டும் வென்றுவிட முடியாது. திறமையும், உழைப்பும், சரியானதைச் செய்வதற்கும் தவறுகளைத் தவிர்ப்பதற்கும் தன்னை மீறி நிகழும் தவறுகளை மீண்டும் செய்யாததோடு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கான மதியூகமும் இல்லாதவர்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியாது. அப்படியே வென்றாலும் அந்த வெற்றி நீண்ட காலத்துக்கு நிலைக்காது.
சிவகார்த்திகேயனின் குறுகிய காலத்தில் ஈட்டிய வெற்றிக்கும் அது நீடித்து நிலைப்பதற்கும் அவருடைய திறமையும், உழைப்பும், எதைச் செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எதைச் செய்யக் கூடாது என்னும் தெளிவுமே காரணம். இவை மூன்றும் அவருடன் என்றும் இருக்கும். அவற்றோடு அவருடைய வெற்றிகளும், சாதனைகளும் மென்மேலும் அதிகரிக்கும் என்று நாம் மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago