சென்னையின் நாட்டுப்புற இசை கானாதான்: சந்தோஷ் நாராயணன்

By செய்திப்பிரிவு

நம் சென்னையின் நாட்டுப்புற இசை கானாதான் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

'ஏ1' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் சந்தானம் - இயக்குநர் ஜான்சன் மீண்டும் இணைந்துள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரன், மாருதி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் முழுக்க வடசென்னை பின்னணியில் நடக்கும் காமெடிக் கதையாகும்.

முழுக்க கானா பாடல்கள் கொண்ட இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது:

"'ஏ1' படம் பண்ணும்போது இயக்குநர் ஜான்சனிடம் ஒரு விஷயத்தை கவனித்தேன். நாம் வடசென்னையைத் திரையில் ஒருவிதமாகப் பார்த்துள்ளோம். வெகு சில இயக்குநர்கள் அதை ரொம்ப ஜாலியாகக் காட்டியுள்ளனர். அதில் ஜான்சன் மிக முக்கியமானவர். சாதிகளைக் கடந்து காதல், மதங்களைக் கடந்து நட்பு உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ரொம்ப சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் ஜான்சன் ஒரு ஸ்பெஷல் நண்பர்.

'பாரிஸ் ஜெயராஜ்' மூலம் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆல்பம் முழுக்கவே கானா பாடல்கள்தான். சென்னையின் நாட்டுப்புற இசை கானாதான். சுமார் 300 ஆண்டுகளாக அதைக் கொண்டாடியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய இசையை சினிமாவில் கொண்டு வர முடிந்தால் அதைவிடப் பெரிய விஷயம் எதுவுமே இல்லை.

இந்தப் படத்தின் காட்சிகளுக்குப் பின்னணி இசை அமைக்கத் தாமதம் ஆனது. ஏனென்றால், காட்சிகளைப் பார்த்துச் சிரித்துவிடுவேன். ஆகையால், ரொம்பத் தாமதமானது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்".

இவ்வாறு சந்தோஷ் நாராயணன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE