களத்தில் சந்திப்போம் - முதல் பார்வை

By செய்திப்பிரிவு

ஜீவாவும் அருள்நிதியும் கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். இவர்கள் இருவர்களின் வாழ்க்கையில் காதல், திருமணம் என்கிற கட்டம் வரும்போது அரங்கேறும் குழப்பங்கள், அது இவர்கள் நட்பை பாதிக்கும் விதம், அதிலிருந்து இவர்கள் இருவரும் மீண்டு வருவதே கதை.

ஜீவா, அருள்நிதி என இருவருமே அந்தந்தக் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்கள். சின்னச்சின்ன சேட்டைகளில், கலாய்ப்புகளில் ஜீவாவும், ஆவேசமாக சண்டையிடுவதில், அடங்கிப் போவதில், அப்பாவி முகம் காட்டுவதில் அருள்நிதியும் ஈர்க்கின்றனர்.

இரட்டை நாயகர்கள் இருக்கும் கதையில் அதி முக்கியக் கதாபாத்திரமாக, நடக்கும் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது மஞ்சிமா மோகனின் கதாபாத்திரம். முதலில் யோசித்து முடிவெடுப்பது, எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது, தன் காதல் மேல் தைரியமாக இருப்பது என நடிப்பில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படம்.

மற்றொரு நாயகி பிரியா பவானி சங்கர் திரையில் இருக்கும் நேரம் குறைவென்றாலும் அவர் நடிப்பில் குறையில்லை. அவரது கதாபாத்திரமும் திரைக்கதையில் முக்கியமான ஒன்றாகவே படைக்கப்பட்டுள்ளது. நாயகர்களை வழிநடத்தும் அனுபவஸ்தராக ராதாரவி, எப்போதும் போல தனது நிஜ நடிப்பு அனுபவத்தோடு அந்தக் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். ஆடுகளம் நரேன், இளவரசு, ரேணுகா என மூத்த நடிகர்கள் அனைவருமே கச்சிதம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன. பின்னணி இசையில் பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக் கொள்ள வைத்திருக்கிறார். அபினந்தன் ராமானுஜம் காரைக்குடி வீதிகளையும், வீடுகளையும் அழகு குறையாமல் காட்டியிருக்கிறார். தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு கபடி காட்சிகளுக்கு சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் இரட்டை நாயகர்கள் இருக்கும் திரைப்படங்களில் அதிலும் இருவருமே முதன்மை கதாபாத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் யாராவது ஒருவர் இன்னொருவருக்காக சற்றே அதிக இடம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் இருவருக்குமே சரிசமமான முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சியமைப்புகளாலும், திரைக்கதையினாலும் பாராட்ட வைக்கிறார் இயக்குநர் ராஜசேகர். நாம் நினைக்கும் இடத்தில் திருப்பங்கள் வந்தாலும் அந்தத் திருப்பங்களின் தன்மை நம்மால் யூகிக்க முடியாத விதத்தில் இருப்பது கதைக்கு சாதகமாக இருக்கிறது.

போகிற போக்கில் விளையாட்டாக பேசும் விஷயத்தால் ஏற்படும் பிரச்சினைகள், அதன் நீட்சியாகத் தொடரும் சங்கடங்கள், குழப்பங்கள், அதனால் நண்பர்களுக்குள் எழும் பிரச்சினை என அடுத்தடுத்து கோர்வையாக நகரும் திரைக்கதையில் சம்பவங்கள் இயல்பாகவே அரங்கேறுகின்றன.

நண்பர்களின் பந்தத்தைச் சொல்ல வலுவான காட்சிகள் இல்லாமல் போனது, பல இடங்களில் திணிப்பாக இருக்கும் ரோபோ சங்கர் - பால சரவணன் கூட்டணியின் ஒரு வரி, ஒரு வார்த்தை நகைச்சுவை, தொய்வைத் தரும் பாடல்கள், லாஜிக் கேள்விகள் எழும் சில இடங்கள் என குறைகள் இருந்தாலும் படம் ஒட்டுமொத்தமாகத் தரும் பொழுதுபோக்கு அவற்றைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக் கொள்கின்றன.

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வந்திருந்தால் கண்டிப்பாக குடும்பமாகப் படம் பார்க்கும் ரசிகர்களின் ஆதரவை களத்தில் சந்திப்போம் வென்றிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்