தமிழ் சினிமா வரலாற்றில் நூற்றுக்கணக்கான காதல் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில படங்கள் மட்டும் என்றென்றைக்கும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடிக்கும். அவை தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாகவும் அமைந்துவிடுவதுண்டு. அப்படிப்பட்ட காதல் பாடங்களில் ஒன்றான 'மின்னலே' பிப்ரவரி 2, 2001 அன்று வெளியானது. அதாவது இன்றோடு அந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.
காதல் என்னும் கிறுக்குத்தனம்
ரீனாவை (ரீமா சென்) கண்டவுடன் காதலில் விழும் ராஜேஷ் (மாதவன்) அவளுக்கு சாம் (அப்பாஸ்) என்பவனுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதை அறிந்துகொள்கிறான். அதனால் பின்வாங்காமல் சாமின் அடையாளத்தைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து அவளுடைய வாழ்க்கைக்குள் நுழைகிறான். தனக்குப் பிடித்தவளைக் கவர்வதற்காக முதலில் அவளை ஏமாற்றிவிட்டு அவளது காதலைப் பெற்றதும் சமாதானம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறான். அவளுடைய காதலையும் பெற்றுவிடுகிறான். ஆனால், ராஜேஷ் உண்மையைச் சொல்வதற்கு முன்பு ரீனாவே உண்மையான சாமைப் பார்த்துவிடுகிறாள். ராஜேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த மறுகணம் அவனைத் தன் வாழ்விலிருந்து விலக்குகிறாள். ராஜேஷ் ரீனாவைப் பின்தொடர்ந்து சென்று தன் தவறை மன்னித்து, காதலை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறான். அந்த முயற்சிகளுக்கு அடிபணியாத ரீனாவின் கோபத்தை ராஜேஷ் மீதான அவளது காதல் வென்றுவிடுகிறது.
காதலுக்காக ஒரு பெண்ணை ஏமாற்றுவது தவறுதான். ஆனால், விளைவுகளை யோசிக்காமல் இதுபோன்ற தவறுகளைச் செய்யத்தூண்டும் கிறுக்குத்தனமும்தானே காதல்! இதை ரசிகர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள், ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் இந்த அறச்சிக்கல் படத்துக்குக் கிடைத்த வெற்றியையும் பாராட்டுகளையும் பாதிக்கவில்லை.
சுயமரியாதையின் சீற்றம்
அதே நேரம் படத்தில் இந்த அறச்சிக்கல் கையாளப்பட்ட விதம் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் கெளதம் மேனனைப் பெண்களை மதிக்கும் முதிர்ச்சியான படைப்பாளியாக அடையாளம் காட்டியது. தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த மறுகணம் தன்னை ஏமாற்றிய ராஜேஷைத் துரத்திவிடுகிறாள் ரீமா. அதற்கு முன் அவன் மீது அவள் காதல் வயப்பட்டிருந்தாலும் தன்னால் காதலிக்கப்பட்டவன் என்னும் கரிசனத்தைவிடத் தன்னை ஏமாற்றியவன் என்னும் கோபமே ராஜேஷ் குறித்த ரீமாவின் முதன்மையான உணர்வாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பொதுவாக நாயகன் நாயகியை இதுபோல் ஏமாற்றுவது போன்ற பல படங்களில் காதலித்துவிட்டதாலோ, தாலி கட்டித் திருமணம் செய்துகொண்டுவிட்டதாலோ தன்னை ஏமாற்றியவன் என்பதை மறந்து தன் காதலன் அல்லது கணவன் என்பதால் அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பெண்களாகத்தான் நாம் கதாநாயகிகளை அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் கருணை, தியாகம், அடங்கிச் செல்லுதல் போன்ற செயற்கையாக வரையறுக்கப்பட்ட குணாதிசயங்களைவிட ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணுக்கு இயல்பாக எழக்கூடிய கோபத்தையும் அதன் பின்னால் உள்ள சுயமரியாதையையும் முதன்மைப்படுத்தியிருப்பார் இயக்குநர் கெளதம் மேனன்.
முன்னோக்கிச் சென்ற படம்
இறுதியில் ரீமா ராஜேஷைத்தான் திருமணம் செய்துகொள்கிறாள் என்பது தமிழ் வணிக சினிமா விதிகளுக்காகச் செய்துகொள்ளப்பட்ட சமரசமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் அவளை ஏமாற்றியது பெரும் தவறு என்பதை அவனுக்கு உணர்த்திவிடுகிறாள் என்பதே 'மின்னலே' வெளியான காலச்சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.
குறிப்பாக நாயகியிடம் சென்று தன் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது போன்ற ஒரு காட்சியில் ராஜேஷ் அவளிடம், “நாம் தனிமையில் இருந்தபோது உன்னை நான் என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும், நீயும் அதற்குத் தயாராகவே இருந்தாய்” என்று பாலியல் ஒழுக்கத்தை முன்னிறுத்தித் தான் ஏமாற்றியதை நியாயப்படுத்தும் விதமாகப் பேசும்போது “இப்போது ஒன்று சொன்னாய் அல்லவா. இதுதான் நீ. உன்னை நான் விலக்கியது தவறேயில்லை” என்று சீற்றத்துடன் சொல்லிவிட்டுச் செல்வாள் ரீமா.
குறிப்பிட்ட இந்த உரையாடலே 'மின்னலே' படத்தை அதன் காலகட்டத்தின் சூழலிலிருந்து மிகவும் முன்னோக்கிச் சென்ற படமாக ஆக்குகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் பாலியல் ஒழுக்கம், கற்பு ஆகியவை நாயகர்கள் (ஆண்கள்) நாயகியரை (பெண்களை) அடக்கி வைப்பதற்கே பயன்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் காட்சியில் அதைக் கையிலெடுத்ததால் நாயகன் அவமதிக்கப்படுகிறான். தனக்கு அவள் இனி கிடைக்க மாட்டாள் என்பதை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
அனைவரையும் கவர்ந்த அம்சங்கள்
இதுபோன்ற சீரியஸான விஷயங்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டாலும் 'மின்னலே' ஒரு மிக அழகான இளமைத் துள்ளல் மிக்க காதல் படம். அனைத்து வயதினரையும் கவர்ந்த காதல் படமும்கூட. இதற்கு முந்தைய ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயக நடிகராக அறிமுகமான நடிகர் மாதவனின் இரண்டாவது வெற்றிப் படமாகவும் அவரை இளம் பெண்களின் கனவு நாயகனாக நிலைநிறுத்திய படமாகவும் அமைந்தது.
இந்தப் படத்தின் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரீமா சென் அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். ஆனாலும், இந்தப் படத்தில் இருந்ததுபோல் கண்ணியமான கதாபாத்திரம் அவருக்கு அமையவில்லை. அந்தக் கண்ணியத்தால் கிடைக்கும் கூடுதல் மதிப்பும் அழகும் அந்தப் படங்களில் இல்லை. ஒரு இயக்குநராக கெளதம் மேனன் தன் படங்களில் நாயகியாக நடிப்பவர்களுக்குச் செய்யும் ஜாலம் என்ன என்பதை இதிலிருந்தே உணரலாம்.
1990களின் பிற்பகுதியில் முன்னணி நாயகனாக நடித்துவந்த அப்பாஸ் இந்தப் படத்தில் நாயகனுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்தார். அவரை வில்லன் என்று சொல்லிவிட முடியாது. உண்மையில் அவர் ஏற்று நடித்த ராஜீவ் சாமுவேல்ஸ்தான் நல்லவர், நேர்மையானவர், திருமணத்துக்கு ஒரு சில மணித்துளிகள் முன்பாக பெண்ணின் உணர்வைப் புரிந்துகொண்டு அவளைத் தனக்கு பிடித்தவரைத் தேர்ந்தெடுக்கவிட்டு கண்ணியமாக நகர்ந்து செல்லும் பண்பாளர். இப்படி ஒரு அரிதான எதிர்-நாயக கதாபாத்திரம் அப்பாஸின் திரைவாழ்வில் ரசிகர்களால் அதிகம் நினைவுகூரப்படுவதாக அமைந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.
நாயகனின் தாத்தாவாக அவரைக் காதலிக்கத் தூண்டுபவராக காதல் தூதுவனாக நடித்த நாகேஷுக்கு அவருடைய நீண்ட திரைப் பயணத்தின் இறுதி ஆண்டுகளில் அவருடைய திறமையையும் ஆளுமையையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட படமாக 'மின்னலே' அமைந்தது. நாயகனின் நண்பனாக விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களைச் சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக 'டேய் லாரிக்குள்ள 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்குது. அதுல ஓடாத வண்டியாட இத்துனூண்டு எலுமிச்சம் பழத்துல ஓடிடப் போகுது” என்பது போல் நகைச்சுவையில் பகுத்தறிவு வசனங்களைப் புகுத்தும் அவருடைய நகைச்சுவை முத்திரை இந்தப் படத்தில் அழுத்தமாக வெளிப்பட்டது.
திரை இசையுலகை வியக்க வைத்த பாடல்கள்
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையிசை உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தினார். படத்தில் இடம்பெற்ற ஒன்பது பாடல்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. பின்னணி இசையும் தீம் இசைத் துணுக்குகளும்கூட ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதற்கு முன்பே சில படங்களில் பாடல்களை எழுதியிருப்பவரான தாமரை இந்தப் படத்தில் எழுதிய 'வசீகரா', 'இவன் யாரோ' உள்ளிட்ட பாடல்களின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இந்தப் படத்துக்குப் பிறகு கெளதம்-ஹாரிஸ்-தாமரை கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.
கூட்டு முயற்சியின் வெற்றி
'மின்னலே' வெளியான பிறகு பிறந்தவர்களில் சிலர் இன்று ஓட்டுப் போடும் வயதை எட்டியிருப்பார்கள். இருந்தாலும் இப்போது பார்த்தாலும் புத்துணர்வளிக்கும் படமாகத் திகழ்கிறது 'மின்னலே'. காதலைப் புதுமையான கோணத்தில் சொன்ன அதன் கதைக்களம், காதல், கல்லூரிப் பருவ சேட்டைகள், நண்பர்களுடனான நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகிய அனைத்தும் சரிவிகிதத்திலும் சிறப்பாகவும் அமைந்த அதன் திரைக்கதை, சுருக்கமான ரசிக்கத்தக்க வசனங்கள், கண்ணைக் கவரும் காட்சி அமைப்புகள் அருமையான பாடல்கள் என்று இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். அனைத்து துறைகளிலும் ரசிக்க வைத்த அனைவருடைய பங்களிப்பும் சிறப்பாக அமைந்த கூட்டு முயற்சியின் வெற்றி என்பது 'மின்னலே' படத்தின் முக்கியமான சிறப்பம்சம்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago