ஓடிடியில் 'மாஸ்டர்' - எடுக்கப்பட்ட முடிவுகள்: திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' ஓடிடியில் வெளியிடப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.

திடீரென்று ஜனவரி 29-ம் தேதி 'மாஸ்டர்' படத்தை ஓடிடியிலும் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இது திரையரங்க உரிமையாளர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். ஆனால், எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் பேசியதால், ‘மாஸ்டர்’ படத்தின் லைசென்ஸ் பிப்ரவரி 4-ம் தேதி இரவு வரை தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆகையால் 4-ம் தேதி இரவு வரை அனைத்துத் திரையரங்குகளுக்கும் லைசென்ஸ் கொடுக்கப்படும். வெள்ளிக்கிழமை முதல் யாரெல்லாம் படத்தைத் தொடர வேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்கள் எல்லாம் அந்தந்த மாவட்ட விநியோகஸ்தர்களிடம் உடனடியாகப் பேசிவிடுங்கள். அவர்கள் படத்தைத் தொடர்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொடுப்பார்கள். 'மாஸ்டர்' படத்துக்கு இப்படித்தான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்ற வாரம் வெளியான 'கபடதாரி' திரைப்படம் 30 நாள் கழித்துத்தான் ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார். சின்ன படங்களுக்கு 30 நாட்களும், பெரிய நாட்களுக்கு 50 நாட்களும் கேட்கிறோம். இது தொடர்பாகத் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மூவரும் பேசி முடிவெடுத்தால் மட்டுமே ஒரு காரியம் வெற்றிகரமாக நடக்கும். அனைவருமே தன்னிச்சையாக முடிவெடுப்பது வியாபாரத்துக்கு அழகாக இருக்காது. முதலீடு போடும் மூவருமே சம்பாதித்தால்தான் தொழில் நன்றாக இருக்கும். எந்தவொரு முடிவையும் மூன்று சங்கங்களும் இணைந்தே எடுப்பது என்பதுதான் கரோனா காலத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள முடிவாகும்.

2020-ம் ஆண்டு அனைவருக்குமே சிரமமான ஆண்டாக அமைந்துவிட்டது. இந்த ஆண்டு நல்லபடியாக முடிவுகளை எடுத்து லாபகரமாகத் தொழில் செய்வோம். அதை நோக்கியே பயணிக்கிறோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தொடர்பான ஏதேனும் சிரமம் இருந்தால் வாட்ஸ் அப் குழுக்களில் திரையரங்க உரிமையாளர்கள் விவாதிக்க வேண்டாம். என்னையோ, பொதுச் செயலாளரையோ தொடர்பு கொண்டு சொல்லுங்கள். வாட்ஸ் அப் குழுக்ககளில் விவாதிக்காதீர்கள்".

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE