வசன உச்சரிப்பு ஒரு நடிகருக்கு மிக அவசியம். முக பாவனைகள் மிக மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனும் உடல்மொழி ரொம்பவே அவசியம். வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்துகிற நடிகர்கள்... கலைஞர்கள். மகா கலைஞர்கள். அப்படியான உன்னதக் கலைஞன்... நாகேஷ்.
ஒல்லியான தேகம்தான். வேலை பார்த்துக்கொண்டே நாடகம், நாடகத்தில் நடித்தபடியே சினிமாவில் வாய்ப்பு தேடுதல்... என தொடர்ந்த முயற்சிகளும் முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் நாடகத்தில் அங்கே ஒன்று இங்கே ஒன்று என வாய்ப்புகள் வந்தன.
கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பாராம் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. வாலியிடம் இருந்தால் அது நாகேஷின் பணம்.
சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தை இயக்கினார். நாடகங்களில் வாய்ப்பு தந்த பாலசந்தர், திரைத்துறையிலும் பயன்படுத்தினார். தன் முதல்படமான ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷை நடிக்கவைத்தார். நாகேஷ் தான் நாயகன். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் நடிப்பைக் கண்டு திரையுலகமே வியந்து மிரண்டது.
» திருமணம் ஆகிவிட்டதா? - சனம் ஷெட்டி மறுப்பு
» ஓடிடியில் 'ஜகமே தந்திரம்': தனுஷ் Vs தயாரிப்பாளர் சசிகாந்த்
இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ... பெரிய கேரக்டரோ... ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.
எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.
அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி... ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி... முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.
‘எங்க வீட்டு பிள்ளை’ படம் முழுக்க, ஒவ்வொரு முறை பேசும்போதும், வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி காமெடி பண்ணுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வைத்தி எனும் கேரக்டரும் ‘திருவிளையாடல்’ படத்தின் தருமி கதாபாத்திரமும் சாதாரணன் மிகப்பெரிய நடிகனாகிற ‘சர்வர் சுந்தரம்’ படமும் சினிமாப் படமெடுக்கிற ஓஹோ புரொடக்ஷன்ஸ் ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பாவும் கற்பனையில் இருந்து நிஜமாகவே உருவெடுத்து உலவவிட்டதில் நாகேஷின் நடிப்புக்கும் உடல்மொழிக்கும் பெரும்பங்கு இருக்கிறது. 'பாமா விஜயம்’ ‘அனுபவி ராஜா அனுபவி’ என நாகேஷ் முத்திரை பதிக்காத படங்களே இல்லை.
மாடிப்படி மாது (எதிர்நீச்சல்)வை எவராலும் மறக்கவே முடியாது. ‘வேட்டைக்காரன்’, ’பாமா விஜயம்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘ஊட்டி வரை உறவு’ என நடித்த படங்களைப் பட்டியலிடுவது அசாதாரணம்.
ஒருகட்டத்துக்குப் பிறகு, மீண்டும் நடிப்பில் பிஸியானார் நாகேஷ். நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்தவர் இந்த முறை வில்லனாக நடித்தார். அதிலும் வில்லன்களுக்கெல்லாம் பெரிய வில்லன் இவர்தான். அதுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’. இதைத் தொடர்ந்து, ‘இந்திரன் சந்திரன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நம்மவர்’, ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’ என அடுத்த ரவுண்டிலும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து வெளுத்து வாங்கினார் நாகேஷ். அதிலும் ‘நம்மவர்’ படத்தில் இவர் நடித்ததெல்லாம் வேற லெவல். மகளைப் பறிகொடுத்து அவர் புலம்புகிற அந்தப் பத்துநிமிடங்களும் நம்மை உலுக்கிப் போட்டுவிடுவார்.
‘பீம்பாய் பீம்பாய்’ அதுவொரு ரகம் காமெடி. ‘மேகின்னா ஸ்டெப்னியா?’ என்று கேட்கும் ‘பஞ்ச தந்திரம்’ காமெடி வேறு வகை சரவெடி. ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்ததைப் பார்த்து, பிணமே எழுந்து வாய்விட்டுச் சிரிக்கும்.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுகிற, தனி முத்திரை பதித்துவிடுகிற மகா கலைஞன், நகைச்சுவை நாயகன் நாகேஷ்... சாகாவரம் பெற்ற கலைஞன். பூமியும் வானமும் உள்ளவரை, பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபமெடுத்து நின்றிருப்பார் நாகேஷ். மக்கள் மனங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.
அடைமொழி கூடிய சினிமா உலகம். இரண்டு படங்கள் நடித்தாலே பெயருக்கு முன்னே பட்டம் வைத்துக் கொள்கிற உலகில், நாகேஷுக்கு எந்த அடைமொழியும் இல்லை என்பது ஆச்சரியம்தான். ஆனால் என்ன... நகைச்சுவையின் இன்னொரு பெயர்... நாகேஷ் என்கிறது சினிமா அகராதி.
1933ம் ஆண்டு பிறந்த நாகேஷுக்கு ஜனவரி 31ம் தேதி நினைவுநாள். 2009ம் ஆண்டு மறைந்துவிட்டாலும் மறைந்து 12 ஆண்டுகளாகிவிட்டாலும் நாகேஷ் எனும் கலைஞனுக்கு காலநிர்ணயமெல்லாம் இல்லை. காலங்களைக் கடந்தும் நாகேஷின் புகழ் இருந்துகொண்டே இருக்கும்.
- நாகேஷ் நினைவு தினம் இன்று
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago