முதல் பார்வை: மாறா

By க.நாகப்பன்

சிறுவயதில் தான் கேட்ட கதைக்கு ஓவியத்தின் மூலம் உயிர் கொடுத்திருக்கும் கலைஞனைத் தேடிச் செல்லும் இளம்பெண்ணின் கதையே 'மாறா'.

பார்வதி என்கிற பாரு (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) சிறுவயதில் பாட்டி, அம்மாவுடன் பேருந்தில் செல்லும்போது கதை கேட்டு அடம் பிடிக்கிறார். ஒரு ஊர்ல ஒரு ராஜா, நரிக் கதை என்றே பாட்டி கதை சொல்கிறார். அது பாருவுக்குப் பிடிக்கவில்லை. அருகில் அமர்ந்திருக்கும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர், சிப்பாயி கதையைச் சொல்கிறார். அது பாருவின் மனதில் ஆழப் பதிகிறது. பாரு வளர்கிறார். அந்தக் கதையை மட்டும் அவர் மறக்கவில்லை. பழமையான கட்டிடங்களை அதன் தன்மை மாறாமல் மறு சீரமைத்துப் பாதுகாக்கும் கட்டிடக் கலை நிபுணராகப் பணிபுரியும் அவருக்குத் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்த வரன் பிடிக்காமல் குடும்பத்தை விட்டு விலகி வேறு ஊருக்குச் செல்கிறார். தோழியின் உதவியுடன் வாடகை எடுத்துத் தங்க வீடு பார்க்கிறார்.

சிறுவயதில் தான் கேட்ட கதையின் காட்சிகள் அங்கே ஓவியமாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். அதற்குக் காரணமான மாறா (மாதவன்) இருந்த வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் இருக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் உண்மைக் கதையின் சித்திரம் இருப்பதைப் பார்க்கிறார். ஆனால், அது பாதியிலேயே நிற்கிறது. கதையின் முடிவை அறிந்துகொள்ளும் ஆவலுடனும், மாறாவைச் சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அவரைப் பற்றிய விசாரணையை அவருக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு, தன் தேடல் பயணத்தைத் தொடர்கிறார். அந்தச் சித்திரக் கதை முழுமை அடைந்ததா, மாறாவைப் பாரு சந்தித்தாரா, சிறுவயதில் கேட்ட கதையை மாறா எப்படி ஓவியமாக வரைய முடிந்தது, அதற்கான இணைப்பு என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு மார்ட்டின் ப்ரக்காட்டின் இயக்கத்தின் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் 'சார்லி'. அதைத் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார் திலீப் குமார். படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.

ஆனால், ரீமேக்கின் சாதக பாதகங்கள் அனைவரும் அறிந்ததே. ஒரு படம் ரீமேக் செய்யப்பட்டால், அது மூலப் படத்துடன் ஒப்பிடப்படும். ரீமேக் படம் எந்த அளவில் தனித்து நிற்கிறது என்று அலசப்படும். அந்த மாதிரி ஒருசில படங்களுக்கு மட்டுமே அமைவது துரதிர்ஷ்டம். அசல் படத்தின் ஜீவனை பெரும்பாலான ரீமேக் படங்கள் சரியாகக் கடத்துவதில்லை. அந்த விதத்தில் 'மாறா' மறக்க முடியாத படமாக அமையவில்லை என்பதுதான் சோகம். நேட்டிவிட்டியைத் தொலைத்த, கதாபாத்திரங்களுக்கான நுட்பமான உணர்வுகளை இழந்த படமாகவே 'மாறா' உள்ளது.

வயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்பதை மாதவன் நடிப்பு காட்டிக்கொடுத்துவிடுகிறது. கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், துள்ளல், உற்சாகம் எனக் கதாபாத்திரத்தின் அசல் தன்மை இதில் இல்லை. மாறாக, பக்குவமும், முதிர்ச்சியும் மாதவனிடம் அதிகம் தென்படுகின்றன. அதனாலேயே அவர் எல்லோரையும் நிதானமாக எதிர்கொள்கிறார். அவரின் சமாதானம் கூட ஓரளவிலேயே உள்ளது. மாதவனின் வயதை மனதில் கொண்டு மாறா கதாபாத்திரத்தை இவ்வாறு வடிவமைத்திருந்தாலும், நாடோடிக்கான இலக்கணத்தில் அது சுத்தமாகப் பொருந்தவில்லை. இறுதியில் நாடோடிக்கான காரணத்தை அவர் சொல்வது இப்படத்தில் புதிது. ஆனால், அது திரைக்கதை உத்தியாக மட்டுமே பயன்படுகிறது.

நாயகி மைய சினிமாதான் இது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அசல் படத்தை விட இதன் திரைக்கதையில் பெரிய மாற்றம் நாயகியை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டுள்ளது. தான் கேட்ட கதை ஓவியமாக ஒரு ஊரில் கண்முன் விரிவதைக் கண்டு ஆச்சரியப்படும் ஷ்ரதா அடுத்தடுத்து மாறாவின் மீதான ஆர்வத்தை நடிப்பால் நிறுவும் விதம் பாராட்டுக்குரியது. அவரின் தேடல் பயணத்துக்கான சுவாரஸ்யத்தை நடிப்பால் கொடுப்பது சாதாரணமில்லை. அதைத் தன்னால் முடிந்த அளவுக்கு நியாயப்படுத்துகிறார்.

இசையைக் குழைத்து ஸ்டேண்ட் அப் காமெடி மூலம் இணையத்தைக் கலக்கி வரும் அலெக்ஸாண்டர் பாபு இதில் திருடனாகத் திறமை காட்டியுள்ளார். மௌலி, அபிராமி, கிஷோர், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர் என்று அனுபவமிக்க நடிகர்கள் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அபிராமியின் நடிப்பில் அழுத்தம் இல்லை. மௌலியின் நடிப்பு நாடகத்தனமாகவும், செயற்கையாகவும் இருக்கிறது. ஷிவதா மட்டும் தன் குற்ற உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். நாயகன் தவிர்த்த கதாபாத்திரத் தேர்வில் மெனக்கெட்ட இயக்குநர், பாத்திரப் படைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் அஜயனின் உழைப்பும் படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ஜிப்ரான் இசையும், பின்னணியும் படத்தின் கதையோட்டத்துக்குப் பொருந்துகின்றன. அசல் படத்தை விட சுமார் 15 நிமிடங்கள் கூடுதலான படம் என்றாலும், அலுப்பு தட்டாத வகையில் நேர்த்தியான எடிட்டிங்கில் புவன் சீனிவாசன் கவனிக்க வைக்கிறார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் செய்யும் படம் என்பதாலும், மாதவன் போன்ற அனுபவ நடிகரை வைத்துப் படம் பண்ணுவதாலும் இயக்குநர் திலீப் குமார் திரைக்கதையில் மாற்றங்கள் செய்திருக்கலாம். ஆனால், படத்துக்கு அது எந்த விதத்தில் பயனுள்ளதாக உள்ளது என்று பார்க்க வேண்டியதும் அவசியம். மலையாளத் திரைப்படங்கள் கதை சொல்லும் அம்சத்தில் பாய்ச்சலை, பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அப்படங்களை மறு ஆக்கம் செய்யும்போது அதன் ஆன்மாவைச் சிதைக்காமல் இருப்பதே ரீமேக் படங்களுக்கான வெற்றியாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்