'மாநாடு' டீஸர் எப்போது?- தயாரிப்பாளர் தகவல்

By செய்திப்பிரிவு

'மாநாடு' படத்தின் டீஸர் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிலம்பரசன். இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்து வருகிறார்கள்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இதில் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. பிரம்மாண்டமான அரசியல் கட்சி மாநாடு போன்ற அரங்கம் அமைத்து, சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே, இதுவரை 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டமாகப் படக்குழுவினர் ஏதேனும் வெளியிடுவார்கள் என்று சிலம்பரசனின் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், படக்குழுவினரோ எதையும் வெளியிடவில்லை.

தற்போது சிலம்பரசன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, 'மாநாடு' அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதன்படி, "பொங்கல் அன்று ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டரும், சிம்புவின் பிறந்த நாளன்று டீஸரும் வெளியாகும்" என்று அறிவித்துள்ளார். சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3-வது வாரம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

'மாநாடு' படத்தை முடித்துவிட்டு, 'பத்து தல' படத்தில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார் சிலம்பரசன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE