இந்தி டப்பிங்கும் ஒரே நாளில் வெளியீடு: 'மாஸ்டர்' மூலம் விஜய் சாதனை

By செய்திப்பிரிவு

இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, ஒரே நாளில் வெளியிட 'மாஸ்டர்' படக்குழு முடிவு செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படம் தற்போது தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வெளியீட்டுக்குத் தயாராகி வந்தது.

இந்நிலையில், இந்தி டப்பிங்கும் தயாராகியுள்ளது. இந்தியில் 'விஜய் தி மாஸ்டர்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. வரும் வாரத்தில் அங்கும் தணிக்கைப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. தமிழ், தெலுங்கு வெளியாகும் அதே நாளில் இந்தியில் வெளியாகவுள்ளது 'மாஸ்டர்'.

விஜய் நடிப்பில் வெளியான படங்களில் இது முதல் முறையாகும். இதுவரை ஒரு சில நாட்கள் கழித்தே இந்தி டப்பிங் படங்கள் வெளியாகி வந்தன. தற்போது ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர். கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டவுடன்தான் வெளியீடு குறித்து முடிவு செய்யவுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமன்றி கன்னட டப்பிங்கும் நடைபெற்று வருவதாகப் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரே சமயத்தில் ஜனவரி 13-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் 'மாஸ்டர்' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'மாஸ்டர்' பணிகள் முடிவடைந்துவிட்டதால், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தயாராகி வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE