தமிழ் சினிமாவுக்கு காதல் ஒரு தவிர்க்க முடியாத உள்ளடக்கமாக இருந்துவருகிறது. 1990களின் இறுதிவரை ஒவ்வொரு கதாநாயக நடிகரும் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு முதல் படியாகக் காதல் படங்களில் நடித்து இளசுகளின் மனங்களில் இடம்பிடித்தாக வேண்டும். 1990-களின் பிற்பகுதியில் கவனம் ஈர்க்கத் தொடங்கிவிட்ட பிரசாந்த், விஜய், அஜித் மூவரும் தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்துவந்தனர். அவர்களில், விஜய்யின் காதல் படங்களில் தரமான வெற்றிப் படமாகவும் இன்று மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் அவருடைய திரைவாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவும் அமைந்த படங்களில் ஒன்றான ‘காதலுக்கு மரியாதை’ வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன (1997 டிசம்பர் 19).
மலையாளம் மட்டுமல்லாமல் தரமான தமிழ்ப் படங்களை இயக்கி தமிழிலும் மதிப்புக்குரிய இயக்குநரான பாசில், நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கிய படம் ‘காதலுக்கு மரியாதை’, 1997 மார்ச்சில் மலையாளத்தில் அவர் இயக்கிய ’அனியத்திப்ராவு’ என்னும் படத்தின் தமிழ் மறு ஆக்கம் இது. தென்னிந்தியப் படங்களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கிக் கொண்டிருந்த பேபி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமான படம் ‘அனியத்திராவு’. தமிழ் மறு ஆக்கத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாகக் கால்பதித்தார். மலையாளத்தில் குஞ்சக்கோ போபன் நடித்த நாயகன் வேடம் தமிழில் விஜய்க்குச் சென்றது.
இந்து மதத்தைச் சேர்ந்த நாயகனும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நாயகியும் காதலிக்கிறார்கள். மதம் கடந்த காதலைச் சொன்ன பல படங்களைப் போலவே இதிலும் நாயகியின் குடும்பத்திடமிருந்து காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. ஆனால், எதிர்ப்புக்கான காரணம் மதம் அல்ல. நாயகியின் அண்ணன்களுக்கு நாயகன் மீது சில எதிர்பாராத மோதல்களின் விளைவாக வெறுப்பு ஏற்படுகிறது. தங்கள் அழகான குடும்பத்தில் போற்றி வளர்க்கப்பட்ட இளவரசியான தங்கையைத் தங்களுக்குப் பிடிக்காதவன் காதலிப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இதனால் நாயகனைத் துன்புறுத்துகிறார்கள்.
ஒரு கட்டத்தில் நாயகனும் நாயகியும் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். ஆனால் மனம் மாறி, பெற்றோரின் சம்மதம் இல்லாமல் வாழ்வில் இணையக் கூடாது என்று முடிவெடுத்து காதலைத் துறந்து தமது குடும்பங்களுடன் இணைகிறார்கள். இறுதியில் சம்பிரதாயமாக இருவரின் குடும்பங்களும் சந்தித்துக்கொள்ளும்போது இருவரின் அம்மாக்களின் உணர்வுபூர்வமான முன்னெடுப்பால் நாயகன் – நாயகியின் காதல் கைகூடுகிறது.
மதம் கடந்த காதல் என்றாலும் மனிதர்களுக்கிடையிலான முன் தீர்மானம் சார்ந்த வெறுப்பே காதலுக்கு எதிரியாக அமைவதும் அதைத் தாண்டி நல்ல மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் வெளியே சொல்லிக்கொள்ளாத ஈர்ப்பு அந்தக் காதலை வெற்றிபெறச் செய்வதுமாக முழுக்க முழுக்க அன்பு, பாசம், நட்பு, வெறுப்பு என மனித உணர்வுகளை மையப்படுத்தி தன்னுடைய முத்திரையைப் பதித்திருப்பார் பாசில்.
படத்தின் நாயகனான விஜய் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும் மிகவும் நட்பார்ந்த மனப்பான்மை கொண்ட மென்மையான இளைஞனாகவும், அதே நேரம் துணிச்சல்காரராகவும், உண்மையான காதலனாகவும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
குடும்பத்துக்கும் காதலனுக்கும் இடையிலான ஊசலாட்டத்தை வெகு சிறப்பாகப் பிரதிபலித்து தமிழ் சினிமாவுக்கு ஒரு திறமையான நடிகையின் நல்வரவைப் பதிவு செய்தார் ஷாலினி. நாயகியின் அண்ணன்களாக ராதாரவி, தலைவாசல் விஜய், ஷாஜி கான், அம்மாவாக கேபிஏசி லலிதா. நாயகனின் பெற்றோராக சிவகுமார், ஸ்ரீவித்யா, நண்பர்களாக சார்லி, தாமு, காதலர்களுக்கு அடைக்கலம் தரும் மீனவர் குடியிருப்பின் பெரிய மனிதராக மணிவண்ணன் என அனைத்துத் துணை நடிகர்களும் மறக்க முடியாத நடிப்பை வழங்கியிருந்தனர்.
இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களாக அமைந்தன. ஹரிஹரன் குரலில் காதலின் ஏக்கத்தை வெளிப்படுத்திய ‘என்னைத் தாலாட்ட வருவாளா’, அன்பான அழகான குடும்பத்தின் கதகதப்பை உணரச் செய்யும் ‘ஆனந்தக் குயிலின் பாட்டு’, மீனவர்களின் கொண்டாட்டப் பாடலான ‘அய்யா வூடு’, கே.ஜே.யேசுதாஸின் தேமதுரக் குரலில் அமைந்த ‘ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே’, விஜய்யின் அபார நடனத் திறமையைப் பறைசாற்றிய ஆரம்பக் காலப் பாடல்களில் ஒன்றான ‘ஓ பேபி பேபி’ என அனைத்துப் பாடல்களும் இன்றும் தலைமுறைகளைக் கடந்து அனைவரையும் வசீகரித்துக் கொண்டிருக்கின்றன. .
ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், காதலர்களின் உடல்சார்ந்த நெருக்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் என எதுவும் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் ஏற்ற குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக அமைந்தது ‘காதலுக்கு மரியாதை’. அதே நேரம் கனமான கதையம்சம் பொருந்திய உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்ட அரிதான காதல் படங்களில் ஒன்றாகவும் இருந்தது. அந்த வகையில் ‘காதலுக்கு மரியாதை’ ரசிகர்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago