சேரன் பிறந்த நாள் ஸ்பெஷல்: தமிழ் மனங்களில் தனி இடம்பெற்ற படைப்பாளி 

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் யதார்த்தமான உயிரோட்டமிக்க திரைப்படங்களை இயக்கி தமிழர்களின் மனங்களில் என்றென்றும் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட இயக்குநர் சேரன் இன்று (டிசம்பர் 12) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

மதுரைக்கு அருகே பழையூர்ப்பட்டி எனும் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் சேரன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் சென்னைக்குக் குடியேறியவர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான ‘புரியாத புதிர்’ படத்திலிருந்து அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களில் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.

மதிப்பைப் பெற்றுத் தந்த மகத்துவப் படைப்புகள்

‘பாரதி கண்ணம்மா’ சேரன் எழுதி இயக்கிய முதல் திரைப்படம். கிராமத்துச் சூழலில் பொருளாதார, சாதி வேறுபாடுகளைக் கடந்த காதலை உயிர்ப்புடனும் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் கெட்டிதட்டிப்போன கிராமத்துச் சூழலில் சாதி கடந்த காதல் எதிர்கொள்ளும் துயர முடிவை முகத்தில் அடிக்கும் யதார்த்தத்துடனும் பதிவு செய்த அந்தப் படம் தலைசிறந்த படைப்பாளி ஒருவரின் வருகைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது. ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட அந்தப் படம் சாதிய அமைப்புகளின் எதிர்ப்பைக் கடந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது சமூக மாற்றம் தொடங்கிவிட்டதற்கான அடையாளமும்கூட.

கிராமத்து யதார்த்தப் பின்னணியில் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளைப் பாசாங்கில்லாமல் ஒலிக்கச் செய்த ‘பொற்காலம்’ (1997), ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைக் களையாமல் அவர்களை வெறும் வாக்கு வங்கியாகக் கருதும் அரசியல்வாதிகளைத் தோலுரித்த ‘தேசிய கீதம்’ (1998), ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற மருதகாசியின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளில் வெளிப்பட்ட உன்னதமான கருத்தை இயல்பான கதாபாத்திரங்கள், உயிரோட்டமுள்ள உணர்வுகளுடன் திரைப்படமாக விரித்த ‘வெற்றிக்கொடி கட்டு’ (2000), குடும்பப் பாசம், நட்பு, காதல் என மனித உறவுகளின் மகோன்னதத்தை நயமாக எடுத்துரைத்த ‘பாண்டவர் பூமி’ (2001) எனத் தொடர்ந்து தரமான படைப்புகளாய் கொடுத்து ரசிகர்கள் விமர்சகர்கள் மனங்களில் மதிப்புக்குரிய படைப்பாளுமையாக நிலைத்து நின்றார் சேரன்.

தேடிவந்த தேசிய அங்கீகாரங்கள்

அடுத்ததாக அவர் இயக்கிய ‘ஆட்டோகிராப்’ (2004), ’தவமாய் தவமிருந்து’ (2005) ஆகிய திரைப்படங்கள் சேரனை தேசிய அளவில் கவனம் ஈர்த்தன. இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காவிய அந்தஸ்தைப் பெற்றதோடு சேரனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தன. ‘ஆட்டோகிராப்’, கிராமத்தில் பிறந்து நகரத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மனிதர்கள் கடந்து வந்த காதல்களின் நினைவோடையாக அமைந்தது.

‘தவமாய் தவமிருந்து’ கிராமத்து உழைப்பாளி தந்தைகளின் வலிகளையும் தியாகங்களையும் ரத்தமும் சதையுமாக உலவிவட்ட காவியப் படைப்பு. இவ்விரு படங்களிலும் சேரன் காண்பித்த வாழ்வியல் அனுபவங்கள், ரசிகர்கள் அனைவரின் மன ஆழங்களுக்குச் சென்று தாக்கம் செலுத்தின. இரண்டு படங்களும் தேசிய விருதையும் மாநில அரசு விருதையும் மற்றும் பல விருதுகளையும் வென்றன.

தொடர்ந்து ‘மாயக் கண்ணாடி’ (2007), ‘பொக்கிஷம்’ (2009), ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ (2015), ‘திருமணம்’ (2019) ஆகிய படங்களிலும் தன் தனித்துவ முத்திரையை வெளிப்படுத்தினார் சேரன்.

நடிகராகவும் நன்மதிப்பு பெற்றவர்

நடிகராகவும் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர் சேரன். தங்கர் பச்சான் இயக்கிய ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் கதாநாயகனாக நடித்த சேரன் முதல் படத்திலேயே ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். அவரே இயக்கித் தயாரித்த ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்திலும் ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்திலும் சேரன் நடித்த விதம் ரசிகர்கள் அவரைத் தங்களில் ஒருவராகக் காண வைத்தது மனதுக்கு நெருக்கமான திரைப்பட ஆளுமை ஆக்கியது.

கரு.பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’, ஜெகனின் ‘ராமன் தேசிய சீதை’, மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, வசந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ என முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்தார் சேரன். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தை ஏற்று அவற்றுக்கு ஒரு தேர்ந்த நடிகரின் பங்களிப்பை வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

தொடர்ந்து நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் சேரன், சரத்குமாரின் நூறாவது திரைப்படமான ‘தலைமகன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதினார். ’மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் பாடலாசிரியரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். சமூக ஊடகங்களில் சமூகப் பிரச்சினைகள் குறித்து காத்திரமான கருத்துகளைப் பதிவு செய்கிறார்.

தவிர்க்க முடியாத படைப்பாளி

கிராமத்துக் கதைகளானாலும் நகரத்துக் கதைகளானாலும் மண்ணின் முகங்களையும் மண்ணுக்கேற்ற கதைக் களங்களையும் வைத்து மனித உணர்வுகளை உயிரோட்டத்துடன் சமூக அக்கறையைப் பாசாங்கில்லாமல் வெளிப்படுத்திய படங்களே சேரனைத் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளி ஆக்கியிருக்கிறது எனலாம். ஒரு நடிகராகவும் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்குப் பல்சுவை விருந்து படைத்திருக்கிறார்.

சேரன் இன்னும் பல தரமான படங்களை இயக்கி, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, மேலும் பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற வேண்டும் என்று அவருடைய பிறந்த நாளான இன்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்