குழலிசைக் குரலோன் அருண்மொழி;  பாடகர் அருண்மொழி பிறந்தநாள் ஸ்பெஷல்

By வி. ராம்ஜி

இளையராஜா வந்த பிறகு எஸ்.பி.பி., சுசீலாம்மா, ஜானகி என்று பலரும் முன்பை விட அதிகப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். அதேசமயம் புதுப்புது குரலை நமக்கு அறிமுகப்படுத்தினார் இளையராஜா. மலேசியா வாசுதேவன் தொடங்கி ஜென்ஸி, சசிரேகா என்று அந்தப் பட்டியல் மிக நீளம். அப்படி அவர் அறிமுகப்படுத்திய அந்த வசீகரக் குரலில் சொக்கித்தான் போனோம். அந்த குழல் குரல்... நம்மை மெல்லத் தீண்டி இதம் தந்தது.

ஆமாம்... அந்தக் குழல் குரலில்... நமக்கு முதலில் பரிச்சயமானது அவரின் குழலிசைதான். அவர் முகம் தெரியாது. பெயர் கூட தெரியாது. ஆனால் பாடல்களுக்கு முன்னேயும் நடுவேயும் கூடவாகவும் வந்து, நம் கூடவே பயணித்துக்கொண்டே இருந்தது குழலிசை. பிறகு அவரின் குரல்... குழல் தந்த இனிமையைத் தந்தது. அவரின் பெயர் தெரிந்தது. முந்தைய பெயரும் தெரிந்தது. இளையராஜா அவருக்குச் சூட்டிய புதிய நாமகரணம் இன்னும் இன்னுமாகவே அவரை நமக்கு நெருக்கமாக்கியது. அந்த குழலிசைக்காரர்... நெப்போலியன். இளையராஜா அவருக்குச் சூட்டிய பெயர்... அருண்மொழி.

76ம் ஆண்டு இளையராஜா ‘அன்னக்கிளி’ மூலம் நமக்குக் கிடைத்தார். 44 ஆண்டுகளாக இளையராஜாவின் இசையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவரின் இசை நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 35 ஆண்டுகளாக, இளையராஜாவுடன் இருக்கும் நெப்போலியன் என்கிற அருண்மொழி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

சிறுவயதில் அப்பா வாங்கித் தந்த புல்லாங்குழலை வாசித்துக் கொண்டே இருந்த நெப்போலியன்... பின்னாளில், குழலாலும் குரலாலும் உலகறியப் போகிறோம் என்று தெரிந்திருக்குமா? தெரியவில்லை.

தஞ்சாவூர்க்காரர். கெமிக்கல் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தவருக்கு, பண்டிட் ஹரி பிரசாத் சௌராசியாதான் எல்லாமே!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இசைமேதை சி.ஆர்.சுப்பராமனின் மகன் சிதார் கண்ணன், பாடல் பதிவைக் காட்டுவதற்காக நெப்போலியனை அழைத்துச் சென்றார். நெப்போலியன் வந்திருந்தார். ஆனால் புல்லாங்குழல் வாசிப்பவர் அன்றைக்கு வரவில்லை. ரிக்கார்டிங் ஸ்டூடியோ பதட்டமாகிப் போனது.

கண்ணன் மெல்லச் சென்று, ‘என் கூட நண்பர் ஒருத்தர் வந்திருக்கார். ஃப்ளூட் பிரமாதமா வாசிப்பார். வேணும்னா முயற்சி பண்ணிப்பாருங்க’ என்றார். வாசிக்கச் சொன்னார்கள். சம்மதம் சொன்னார்கள். அப்படி நெப்போலியனையும் புல்லாங்குழல் திறனையும் கண்டு சம்மதித்து வாய்ப்பு வழங்கியவர்கள் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ்.

ஆக, இப்படியாக திரைத்துறைக்குள் நுழைந்தார் நெப்போலியன்.

பிறகு கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி., தட்சிணாமூர்த்தி, கேரளத் திரையுலகின் இசையமைப்பாளர்கள் என பலரிடமும் வாசிக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனாலும் நெப்போலியனுக்கு ஆசை... ‘இளையராஜாவைப் பாக்கணும், அவர் இசையில் வாசிக்கணும்’ என்பதுதான்!

நெப்போலியனின் குழலிசையை தற்செயலாகக் கேட்ட இளையராஜா, ‘அவரை வரச்சொல்லுங்க’ என்று ஆளனுப்பினார். நெப்போலியனுக்கு கைகால் ஓடவில்லை. இளையராஜாவின் தரிசனம் கிடைத்தது. அவரின் அண்மை கிடைத்தது. அவரின் இசையை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் பாடல்... ‘ஒரேமுறை உன் தரிசனம்’ ! ‘என் ஜீவன் பாடுது’ படத்தின் பாடல். தரிசனமும் கிடைத்தது; வாய்ப்பும் கிடைத்தது நெப்போலியனுக்கு. ‘தொடர்ந்து நம்மகிட்ட ஃப்ளூட் வாசிக்கலாம்தானே. வேற வேலை இருக்கா?’ என்று இளையராஜா கேட்டார். ’இல்ல சார், சரி சார், ரொம்ப சந்தோஷம் சார்’ என்றார். நெக்குருகிப் போனார் நெப்போலியன்.

அவ்வளவுதான். அன்றில் இருந்து நெப்போலியன் எனும் புல்லாங்குழல் கலைஞனுக்கு விதம்விதமான வாய்ப்புகளை, தன் பரீட்சார்த்த விளையாட்டுகளை இளையராஜா வழங்கிக் கொண்டே இருந்தார். எத்தனை கடினமான நோட்ஸ்கள் என்றாலும் அவற்றை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, ராஜ விருப்பத்தை வெகு அழகாகத் தந்து கொண்டிருக்கிறார் நெப்போலியன்.

எண்பதுகளின் மத்தியில் இருந்து இன்றளவும் ராஜாவின் இசையில் வருகிற குழலிசை... நெப்போலியன் வாசித்தவையே!

‘ராஜா சார்கிட்ட வேலை செய்ற ஒவ்வொரு நாளும் பரிட்சைதான். பாடம்தான். தினம் தினம் அவர்கிட்டேருந்து கத்துக்கிட்டே இருக்கேன்’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் நெப்போலியன்.

ஒருநாள்... வாய்ஸ் ரூமில் மற்றொரு இசைக்கலைஞருக்கு வாசிக்க வேண்டிய ஸ்வரத்தை பாடிக்காட்டினார் நெப்போலியன். அதை கவனித்த இளையராஜா, நெப்போலியனை அழைத்தார். "நெப்போலியன் இந்த பாட்டை நீங்களே பாடிடுங்க" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் இளையராஜா.

’எல்லோரும் சொல்வது போல இளையராஜா சார், யாருடனும் பேசமாட்டார், ஜாலியாக இருக்கமாட்டார் என்பதெல்லாம் இல்லை. அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ஜாலியாகவும் கேலியாகவும் பேசுவார். ஆனால் ‘நீயே பாடிரு’ என்று சொன்னது நிஜமாகவா, கேலியாகவா என்று தெரியவில்லை. குழப்பமாகத்தான் இருந்தது’ என்று அந்தநாள் குறித்து சொல்லும்போதே, வியப்பு மேலிடுகிறது அவருக்கு.

மறுநாள்... தமிழ் சினிமாவுக்கு புதியதொரு பாடகர் உதயமானார். ‘நெப்போலியன், உங்க பேரை மாத்திடலாம். நடிகர் நெப்போலியன் வேற இருக்கார். அதனால உங்க பேர் அருண்மொழி’ என்றார் இளையராஜா. பாரதிராஜா நெப்போலியனுக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்ததற்குக் காரணமே நெப்போலியன் நெப்போலியன் என்று இளையராஜா அழைத்ததை கவனித்துதான்! அப்படியிருக்க, இப்போது நடிகர் நெப்போலியன் இருப்பதால், ரமணரின் அருண்மொழித்திரட்டு என்ற நூலின் தாக்கத்தால் நெப்போலியனுக்கு, அருண்மொழி எனப் பெயர் சூட்டினார் இளையராஜா.

‘அப்புறம்... கமலுக்கு பாடப்போறீங்க. பெரியாளா வரணும். நல்லாப் பாடுங்க’ என்று ஆசீர்வதிக்க... அந்தப் பாடல்... ‘நானென்பது நீயல்லவோ தேவதேவி’ என்ற பாடலாக, தமிழகமெங்கும் ஹிட்டானது. ‘சூரசம்ஹாரம்’ படத்தில் இந்தப் பாடலுடன் இன்னொரு பாடலையும் அருண்மொழிக்குக் கொடுத்தார் இளையராஜா. அது... ‘நீலக்குயிலே’ பாட்டு!

அருண்மொழியின் குரல், குழலைப் போலவே மெல்லிசைக்குரல். சாத்வீகக்குரல். காதலையும் சொல்லும். காதல் பிரிவையும் உணர்த்தும் காந்தக் குரல் அது. ‘வெள்ளிக்கொலுசு மணி’ என்று பாடினால், அந்தக் கொலுசே அருண்மொழியின் குரல் கேட்டு நாணிவிடும்.

எண்பதுகளின் இறுதியில் தொடங்கிய அவரின் பாட்டுப் பயணம் இப்படியாகத்தான் நம்மைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறது. எந்த நடிகருக்குப் பாடினாலும் அங்கே அருண்மொழியின் குரல் தனி ஜாலம் காட்டிக் கொண்டிருக்கும். கமலுக்கு - ’நானென்பது நீயல்லவோ’ ரஜினிக்கு - ’ஆத்துல அன்னக்கிளி’ என்றெல்லாம் பாடினார்.
’வாசக் கறிவேப்பிலையே’ என்று பாடும் போது, விஜயகாந்துக்குப் பாடியது அப்படியே பொருந்திப் போன குரலாக இருந்தது.

’ மனசுக்குள்ள நாயன சத்தம்’ என்ற பாடலில் சத்யராஜ் முகம் காட்டியிருப்பார் அருண்மொழி. பிரபு, கார்த்திக், பார்த்திபன், ராமராஜன், விஜய் என்றெல்லாம் ஏகப்பட்ட பேருக்குப் பாடினார். இவர்களில், ராமராஜனுக்கும் பார்த்திபனுக்கும் வெகு பாந்தமாகப் பொருந்தியது அருண்மொழியின் குரல்.

’மல்லிகமொட்டு மனசத்தொட்டு’ என்ற பாடலால் நம் மனதைத் தொட்டார். ‘உன்னைக் காணாமல் நானேது’ என்ற பாடலில், கொஞ்சிக் குழைந்தார். ’என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்கறே’, ’என் மனசைப் பறிகொடுத்து உன் மனசில் இடம்புடிச்சேன்’ என்று நம் மனதைப் பிடித்துக் கொண்டார் அருண்மொழி. பார்த்திபனுக்கு ‘ஆராரோ பாட்டுப் பாட’ எனும் ‘பொண்டாட்டி தேவை’ படத்தின் பாடலுக்குப் பிறகு பார்த்திபனின் பல படங்களுக்கு பாடினார்.

கஸ்தூரி ராஜாவின் ‘நாட்டுப்புறப் பாட்டு’ இளையராஜாவின் இசையில், அருண்மொழியின் குரலில் ஒலித்த ‘ஒத்தரூபா தாரேன் அட ஒனப்பத்தட்டும் தாரேன்’ என்ற பாடலுக்காகவே வெள்ளிவிழா கொண்டாடியது.

குழலும் குரலுமாக நம் நெஞ்சங்களில் ராஜாவுடன் இணைந்து இன்னமும் பிரமாதப் படுத்திக்கொண்டிருக்கிறார் நெப்போலியனாகவும் அருண்மொழியாகவும்!

குழலிசை நாயகன் அருண்மொழிக்கு இன்று டிசம்பர் 8ம் தேதி பிறந்தநாள்.

அருண்மொழியையும் அவரின் புல்லாங்குழலையும் வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்