'இளையராஜாவுக்கு ஆறுதல் கூறிய அன்பு மனிதர் இயக்குநர் பி.மாதவன்’ - முக்தா பிலிம்ஸ் ரவி புகழாரம்

By வி. ராம்ஜி

‘’மின்சாரம் தடைப்பட்டதும் ரிக்கார்டிங் தியேட்டரில் எல்லோரும் கிண்டலாகப் பேசினார்கள். அப்போது அங்கே மாங்காடு காமாட்சி அம்மன் பிரசாதத்துடன் வந்து இளையராஜாவுக்கு ஆறுதல் கூறினார் இயக்குநர் பி.மாதவன். அப்படியொரு அன்பும் பண்பும் மிக்க மனிதர் அவர்’’ என்றார் முக்தா ரவி.

இயக்குநர் பி.மாதவன் நினைவு தினத்தையொட்டி இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி, இயக்குநர் பி.மாதவன் குறித்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது :

பழம்பெரும் இயக்குநர்கள் டி.ஆர்.ரகுநாத் மற்றும் சி.வி.ஸ்ரீதர் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றியவர் இயக்குநர் பி.மாதவன்.

ஏ.எல்.எஸ்.புரொடக்‌ஷன்ஸ் ஏ.எல்.சீனிவாசன் அவர்கள் தனது தயாரிப்பில் உருவான "மணியோசை" திரைப்படத்தின் மூலம் பி.மாதவன் அவர்களை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ’அன்னை இல்லம்’, ’நீலவானம்’, ’எங்க ஊர் ராஜா’, ’வியட்நாம் வீடு’, ’தேனும் பாலும்’, ’ஞான ஒளி’, ’பட்டிக்காடா பட்டணமா’, ’ராஜபார்ட் ரங்கதுரை’, ’தங்கப்பதக்கம்’, ’மனிதனும் தெய்வமாகலாம்’, ’மன்னவன் வந்தானடி’, ’பாட்டும் பரதமும்’, ’சித்ரா பௌர்ணமி’ ஆகிய படங்களையும் எம்.ஜி.ஆர் நடித்த "தெய்வத்தாய்" திரைப்படத்தையும் இயக்கினார். .

இயக்குநர் பி.மாதவன் மிகச்சிறந்த மனிதர். பண்பாளர். இளையராஜா அவர்கள் முதன்முதலாக இசையமைத்த ’அன்னக்கிளி’ திரைப்படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவின் போது திடீரென மின்சாரம் தடைபட்டது. நீண்டநேரமாக அனைவரும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

அதுமட்டுமல்ல, "புது மியூசிக் டைரக்டர். எடுத்தவுடனேயே தடங்கலா? விளங்கிரும்" என அங்கிருந்த சிலர் இளையராஜாவை கிண்டலடித்தார்கள்.

இளையராஜா அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தனியாக ஓரிடத்தில் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். ஒலிப்பதிவுக் கூடத்தில் சிறு சலசலப்பு நிலவிய வேளையில் சற்று மெலிந்த தேகத்துடன் ஒயிட் அண்ட் ஒயிட் டில் ஒருவர் அறைக்குள் நுழைந்தார். மெதுவாக நடந்து கொண்டே இளையராஜாவின் அருகே வந்து அவர் தோளைத் தொட்டு ’ராஜா’ என்றார். இளையராஜா ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து தனது இரு கரங்களையும் குவித்து வணக்கம் தெரிவித்தார்.

"ஒண்ணும் கவலைப்படாதே. இந்தா உனக்காக மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணினேன். பிரசாதம் எடுத்துக்கோ" என்று இளையராஜாவிடம் கொடுத்தார்.

அங்கிருந்த சிலர் அடித்த கிண்டலால் லேசான மனக் கலக்கத்துடன் இருந்த இளையராஜாவுக்கு அந்தப் பிரசாதம் நிஜமாகவே மன ஆறுதலாக இருந்தது.
"ஒன்ன என்னோட படத்துல தான் இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தணும்னு இருந்தேன். ஆனால் பஞ்சு அருணாசலம் அவர்கள் முந்திக்கிட்டார். பரவாயில்லை. எனக்கு அவர் நண்பர்தான். ரொம்ப சந்தோஷம். "அன்னக்கிளி" படத்துக்கப்புறம் உன்னோட ரெண்டாவது படம் என்னோடதாத்தான் இருக்கணும். நீ பெரிய ஆளா வருவே பாரேன்" என இளையராஜாவை வாயார வாழ்த்தினார். மனதார வாழ்த்தினார். பிறகு அங்கிருந்து சென்றார். அவர் வேறு யாருமல்ல, இயக்குனர் பி.மாதவன் அவர்கள்தான்.

பி.மாதவன் அவர்கள் அங்கிருந்து சென்ற சில விநாடிகளில் மின்சாரம் வந்தது. இளையராஜா சந்தோஷமாக வேலையைத் துவக்கினார். ’அன்னக்கிளி’ படம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, பி.மாதவன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக அவர் இயக்கிய "பாலூட்டி வளர்த்த கிளி" படத்துக்கு இசையமைத்து இயக்குனர் பி.மாதவன் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றினார் இளையராஜா. தனது வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றியவர் இயக்குநர் பி.மாதவன் என்று பேட்டி ஒன்றில் இளையராஜா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி மற்றும் மாநில திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் தேசிய திரைப்பட விருது குழுக்களில் ஒருவராகவும் பொறுப்பு வகித்து சிறப்புறப் பணியாற்றினார் பி.மாதவன்.

சிவாஜி அவர்களை வைத்து ரசித்து ரசித்துப் படங்களை இயக்கிய இயக்குநர்களில், பி.மாதவனும் ஒருவர். அற்புதமான மனிதரான பி.மாதவன் அவர்களை மறக்கவே முடியாது.

இயக்குனர் பி.மாதவன் அவர்களின் 17 வது ஆண்டு நினைவுதினம் (06-12-2003).

முக்தா பிலிம்ஸ் குடும்பத்தினர் சார்பாக அவர் நினைவைப் போற்றுகிறோம்.

இவ்வாறு முக்தா ரவி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்