‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா’ வசனம் உருவானது எப்படி? - கே.பாக்யராஜ் பகிர்வு

By செய்திப்பிரிவு

கே.பாக்யராஜ் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டு வெளியான படம் ‘இன்று போய் நாளை வா’. இப்படத்தில் இடம்பெறும் ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா’ என்ற வசனம் இடம்பெறும் நகைச்சுவை காட்சி இன்றளவும் பிரபலம். இந்த வசனம் இப்போது வரும் பல்வேறு திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் தனது யூ-ட்யூப் பக்கத்துக்காக கே.பாக்யராஜை சில தினங்களுக்கு முன்பு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் ‘ஏக் காவ் மே ஏக் கிசான்’ வசனம் உருவான விதம் குறித்து பாக்யராக் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் பாக்யராஜ் கூறியுள்ளதாவது:

நான் பள்ளியில் படிக்கும்போது எங்கள் வகுப்பு ஆசிரியர் ஒருவர் வருவார். மாணவர்களை எழுப்பி ஏதேனும் ஒரு வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லச் சொல்வார். பெரும்பாலான மாணவர்கள் பதில் சொல்லாமல் முழிப்பார்கள். சிலருக்கு ஆரம்ப வார்த்தை மட்டும் தான் வரும். அதை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லித் தருவார்.

அந்த ஆசிரியரை மனதில் வைத்தே ‘இன்று போய் நாளை வா’ படத்தில் வரும் ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா’ வசனத்தை எழுதும்போது அந்த ஆசிரியர் தான் நினைவுக்கு வந்தார். அவர் திரும்பத் திரும்பச் சொல்வதைப் போலவே அந்த இந்தி வாத்தியார் கதாபாத்திரமும் ‘ரஹ ரஹ’ என்று சொல்லிக் கொண்டிருக்கும். படம் வெளியான போது நான் எதிர்பார்க்காத விதத்தில் அந்த நகைச்சுவை பிரபலமாகி விட்டது.

இவ்வாறு பாக்யராஜ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE