’வளையல் கடை வைச்சிருந்த பாண்டியனை ஹீரோவாக்கினேன் ; என் தயாரிப்பில் நான் டைரக்ட் பண்ணாத படம் எது தெரியுமா?’ - இயக்குநர் பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ அனுபவங்கள்

By வி. ராம்ஜி

’என்னுடைய தயாரிப்பில் நான் இயக்காத ஒரே படம் எது தெரியுமா? ‘மண்வாசனை’ படத்துக்கு ஹீரோ கிடைக்கவே இல்லை. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனை ஹீரோவாக்கினேன்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணைய தள சேனலில், தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

அதில் பாரதிராஜா தெரிவித்ததாவது:

’’தெலுங்குப் படமான ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம், ‘சீதக்கோக சில்லக்கா’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சொந்தப் படம் ஏதாவது பண்ணலாம் என்று யோசித்தேன். ‘மெல்லப் பேசுங்கள்’ படம் தயாரித்தேன். பாரதி - வாசு (சந்தான பாரதி - பி.வாசு) டைரக்‌ஷன்.

இதுவரைக்கும் என் கம்பெனியில் வேறு யாரும் டைரக்ட் பண்ணினதில்லை. இந்த ஒரு படம் மட்டும் விதிவிலக்கு. பாரதி - வாசு மேல் எனக்குப் பிரியம் உண்டு. ’படம் பண்ணுங்க, டைரக்ட் பண்ணுங்க’ என்றேன். ஒரு கதையை செலக்ட் செய்தோம். நல்ல கதை.

அப்போது ஹீரோயினை தேடினோம். நான் ஒருவரை சிபாரிசு செய்தேன். ரேவதியை அப்போதுதான் பார்த்து வைத்திருந்தேன். ’மண் வாசனை’க்காக தேர்வு செய்து வைத்திருந்தேன். அடுத்து என்னுடைய படம், ‘மண் வாசனை’. ரேவதியின் கண்கள் அழகாக இருக்கும். பரத நாட்டியம் தெரியும். எக்ஸ்பிரஷன் நன்றாக வரும். அதனால் அந்தப் பெண்ணைப் பார்த்து ஓகே பண்ணிவிட்டேன்.

’மெல்ல பேசுங்கள்’ படத்துக்கு இன்னொரு ஹீரோயின் தேவைப்பட்டது. ‘ரேவதியை நடிக்க வைத்துக்கொள்ளுங்கள்’ என்றேன். இப்போது அதெல்லாம் சொல்லக்கூடாது. ’என்ன சார் இது, உயரம் இல்லையே சார், குட்டையா இருக்கு’ என்று சொன்னார்கள். அவர்களுக்கு உடன்பாடு இல்லை.

அதன் பிறகு அவர்களுக்கு இன்னொரு சாய்ஸ் கொடுத்தேன். என மகன் மனோஜ், அப்போது ஸ்விம்மிங் போய்க்கொண்டிருப்பான். உட்லண்ட்ஸில் ஸ்விம்மிங் போய்க்கொண்டிருப்பான். சின்னப் பையன். ’டாடி டாடி, ஒரு பொண்ணைப் பாத்தேன். அவங்களை ஹீரோயினாப் போடலாம் டாடி, நல்லாருக்கும்’ என்று அவன் முடிவு செய்து சொன்னான்.

விசாரித்துப் பார்த்தால்... அவர்தான் பானுப்ரியா. ஆபீஸ் வரவைத்து எல்லா டெஸ்ட்டும் எடுத்தோம். பானுப்ரியா நாயகி என்பது முடிவானது. பாரதி - வாசு இயக்கும் படத்துக்கு பானுப்ரியா; ‘மண் வாசனை’ படத்துக்கு ரேவதி என்று முடிவானது.

’மண்வாசனை’ படத்துக்கு தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். என் நண்பர். எனக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்தார். இன்றைக்கு பெரிய தயாரிப்பாளர், இயக்குநர். என் கூடவே இருந்தார். ‘உனக்கு ஒரு படம் பண்றேன்’ என்று நான் செய்ததுதான் ‘மண் வாசனை’.

இந்திப் பட வேலைக்குச் சென்றுவிட்டு, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஏழெட்டு பேரை வரவைத்து ஹீரோ தேடினேன். எவரும் எனக்கு செட்டாகவில்லை. யூனிட்டையெல்லாம் மதுரைப் பக்கம் படப்பிடிப்புத் தளத்திற்கு அனுப்பிவிட்டேன். ‘சரி, மதுரைக்குப் போய் தேடுவோம்’ என்று முடிவு செய்தேன்.

ஒளிப்பதிவாளர், ரேவதி உட்பட எல்லோரும் போடி பக்கம் போய்விட்டார்கள். மதுரை தியாகராஜா காலேஜ், அமெரிக்கன் காலேஜில் தேடுவோம் என்று நினைப்பு. செளபா என்று பத்திரிகையாளர். ‘சீவலப்பேரி பாண்டி’ கதைக்கு ஆசிரியர். அவன் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். அவன் மூலமா சிலரைப் பார்த்தேன். திருப்தி இல்லை. எல்லோரும் போடியில் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது பிரபலம் என்பதால், நிறையபேர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வருவார்கள். அப்படி வரும்போது, அவர்களுக்கு கையெழுத்து போடாமல் அப்படியே அவர்களை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கம் வந்து நின்றேன். அதில் ஒருபையன் ஆட்டோகிராப் வாங்க வந்தான். அவனைப் பார்த்தேன். சூரிய வெளிச்சம் பின்னால் இருந்தது. பூனைக்கண்ணாக இருந்தான். மதுரைப் பேச்சு சரளமாக வந்தது.

‘யார் நீ? வந்து வண்டில ஏறு’ என்றேன். ’நல்ல சாப்பாட்டுக்கடையா பாத்து நிறுத்து’என்றேன். சித்ரா லட்சுமணன் தயாரிப்பாளர். இதைப் பார்த்து ஷாக்காயிட்டான். ’எதுக்கு இந்தப் பையனை வண்டில ஏத்துறீங்க’ என்றான். ‘விடுய்யா, வரட்டும்’ என்றேன்.

ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். அப்போது தமிழ்நாடு ஹவுஸில் தங்கியிருந்தேன். ’சினிமால நடிக்கிறியா?’ என்று கேட்டேன். அந்தப் பையன் திருதிருன்னு முழிச்சான். ’சினிமா பாத்துருக்கியா?’ என்று கேட்டேன். ‘அப்பப்ப, நைட் ஷோவெல்லாம் போவேன்’ என்றான். ’இங்கே என்ன பண்றே?’ என்று கேட்டேன். ‘வளையல் கடை வைச்சிருக்கேன்’ என்றான். மீனாட்சி அம்மன் கோயில் வழில வளையல் கடை வைச்சிருந்தான்.

அதற்கு முன்னதாக, சின்ன டெஸ்ட் ஒன்று வைத்தேன். ஒரு எறும்பு போவதாக நினைத்துக் கொண்டு பார் என்றேன். விருட்டென்று கோபமாகத் திரும்பிப் பார் என்றேன். பார்த்தேன். ‘இது போதும், வா’ என்றேன். தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி... ‘இவனைப் போய் ஹீரோவாக்கறாரே’ என்று!

அடுத்தநாள் போடி வரச் சொன்னேன். வந்தான். ஒரு ஷாட் வைத்தேன். பருத்திக்காட்டில் ரேவதியும் அவர் தோழியும் பருத்தி எடுத்துக்கொண்டிருக்கும் காட்சி. அப்போது இவன்... பாண்டியன், ‘ஹோய்...’ என்று மதுரைக்கே உரிய பாஷையில் பேசினான் . ‘ஓகே’ என்று சொல்லிவிட்டு ஒளிப்பதிவாளர் கண்ணனை பார்த்தேன். ‘நீங்க சொன்னா சரி சார்’ என்றார்.
இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. மூன்றாம் நாள்... சித்ரா லட்சுமணன், கதாசிரியர் கலைமணி, என் மைத்துனன் மனோஜ்குமார் இன்னும் சிலர் என்னைப் பார்க்க அறைக்கு வந்தார்கள். ‘பூனைக்கு யார் மணி கட்றதுன்னு தெரியாம, எங்கிட்ட மணியைக் கொடுத்து விட்டுருக்காங்க’ என்று கலைமணி சொன்னார்.

’என்னய்யா’ என்றேன். ‘நிஜமாவே இந்தப் பையனை வைச்சுத்தான் படம் எடுக்கறீங்களா?’ என்று கேட்டார். என்னுடைய முந்தைய படம் சரியாகப் போகவில்லை. அதனால் அவர்களுக்கு இப்படியொரு கேள்வி.

உடனே நான் சொன்னேன்... ’சரி... ஜெமினி கணேசன் மாதிரி ஒரு அழகான பையனை தேடிக் கண்டுபிடிச்சு கொண்டு வருவோம், படம் ஆரம்பிப்போம். இப்போ போகலாம், பேக் அப்’ என்று சொன்னேன். அவ்வளவுதான்... தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஆடிப்போய்விட்டான். ‘சார்... எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார், எனக்கு தெரியாது சார்’ என்றான். ’வேணாம்யா, ஒரு நல்ல ஹீரோவைப் பாப்போம். எதுக்காக இவனை வைச்சிக்கிட்டு?’ என்று சொன்னேன்.

எல்லாரும் மிரண்டு போய்விட்டார்கள். அந்தப் பையனைக் கூப்பிட்டேன். ‘இங்கே வாடா, எங்கேயும் போகாதே. எங்கூடவே இரு’ என்று சொல்லி ஒருவாரம் அவனை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். கலைத்து குலைத்துவிட்டுவிடுவார்கள். அவனுக்கே அவன் தான் ஹீரோ என்று தெரியாது.

ஒருவாரம் படமெடுத்ததை ரஷ் போட்டுப் பார்த்தோம். ‘சார், இந்தப் பையனைத் தவிர இந்தக் கேரக்டருக்கு இப்படிப் பொருந்தமாட்டாங்க சார். அப்படி இருக்கான்’ என்று எல்லோருமே சொன்னார்கள்.

அப்படித்தான் ‘மண்வாசனை’ படத்தில் பாண்டியனையும் ரேவதியையும் நடிக்கவைத்தேன்’’

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்