’சில்க் ஸ்மிதாவை ஃபேமிலி கேர்ள் நடிகையாக்கினேன்; அவரைப் போல நல்ல பெண்ணைப் பார்க்கவே முடியாது’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற இணைய தள சேனலில், தன் திரை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அதில், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை தமிழிலும் தெலுங்கிலும் எடுத்ததையும் சில்க் ஸ்மிதா குறித்தும் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது :
’’தெலுங்கில் மூன்று நான்கு படங்கள் செய்திருக்கிறேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் தமிழில் சூப்பர் ஹிட்டானவுடன் தெலுங்கில் படமெடுக்க முடிவு செய்தேன். தெலுங்கில் பூர்ணோதயா மூவீஸ் ஏடித.நாகேஸ்வர ராவ், மிகச்சிறந்த மனிதர். அவர் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ரீமேக் பண்ணவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்கு இதில் உடன்பாடு கிடையாது.
சரி... ’அலைகள் ஓய்வதில்லை’ சக்ஸஸ்ஃபுல் படம். அதனால் பண்ணிவிடுவோம் என்று ஒத்துக்கொண்டேன். தெலுங்கில் கார்த்திக், அருணா. அருணாவை அங்கே அறிமுகப்படுத்தினேன். ’சீதாக்கோக சில்லக்கா’ என்பது படத்தின் பெயர். மிகப்பெரிய ஹிட், சூப்பர் டூப்பர் ஹிட்டானது தெலுங்கில். அந்தப் படத்தில், ஒரு சின்னப்பையனை அறிமுகப்படுத்தினேன். அலி என்று பெயர். இன்றைக்கு மிகப்பெரிய நடிகர்.
‘சீதாக்கோக சில்லக்கா’ தெலுங்குப் படம், என்னை நல்ல இடத்தில் கொண்டு நிறுத்தியது. அப்படியே ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான். அதேசமயம், தமிழில் இல்லாத இரண்டு விஷயங்கள் தெலுங்கில் இருந்தன. ஒன்று பரதநாட்டியப் பாடல். மிகப்பிரமாதமாக அமைந்தது. ஒளிப்பதிவாளர் கண்ணனி சார் இன்றில்லை. சிறப்பாகப் படமாக்கியிருந்தார்.
இதில் நடித்த நடிகர் நடிகைகளையே அதிலும் போடலாம் என்று நினைத்தேன். ராதாவை அப்போதுதான் அறிமுகப்படுத்தியிருந்தேன். ராதாவின் உண்மையான பெயர் விஜய சந்திரிகா. ’ராதா’ என்று மாற்றினேன்.
ராதாவிடம், ‘வாம்மா, உன்னை தெலுங்கிலும் அறிமுகப்படுத்துகிறேன்’ என்று சொன்னேன். ஆனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். ஏன் என்று கேட்டேன். ‘நான் பரிட்சை எழுதவேண்டும்’ என்று சொன்னாள். எஸ்.எஸ்.எல்.சி படித்துக்கொண்டிருந்தார். ’பரிட்சைக்கு பணம் கட்டிவிட்டேன். அதனால் வரமுடியாது’ என்று சொன்னார். அப்போது சினிமா வேல்யூ தெரியவில்லை. இன்றைக்கு மிகப்பெரிய நடிகையாக வளர்ந்து, உயர்ந்து நிற்கிறார்.
அதன் பிறகு கார்த்திக்கையும் அருணாவையும் வைத்து படமெடுத்தேன். அந்தப் படம் பெரிய லெவலில் ஹிட்டானாலும் கூட, மற்ற மொழிகளில் படம் பண்ணும்போது எனக்கு மொழி ஒரு இடைஞ்சலாகவும் கஷ்டமாகவும் இருக்கும். இந்திப் படம் பண்ணும் போதும் இதை உணர்ந்தேன். நம் மொழியில் சொல்லி, பேச வைத்து வேலை வாங்குவது வேறு. அடுத்த மொழியில் வேலை வாங்குவது என்பது வேறு. ஒரு அஸோஸியேட்டை நம்பி நான் இருக்கவேண்டும்.
ஒரு அஸோஸியேட்டுக்கு தெலுங்கு தெளிவாகத் தெரியவேண்டும். ஸ்கிரிப்ட் தெளிவாகத் தெரியவேண்டும். இந்த அஸோஸியேட் தெளிவாக இல்லையென்றால், தப்பாகப் போய்விடும்.
‘பதினாறு வயதினிலே’ படத்தை இந்தியில் பண்ணும்போது ஒரு அஸோஸியேட்டை வைத்துக்கொண்டேன். டெல்லியில் இருந்து புரபஸர் ஒருவர் வந்து டயலாக்கை இந்தியில் எழுதினார். படமெல்லாம் முடிந்துவிட்டது. வெளியாகிவிட்டது. பார்த்தால், இந்தி எது போஜ்புரி எது என்கிற வித்தியாசம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனாலேயே மற்ற மொழிப் படங்கள் பண்ணுவது பற்றி யோசிப்பேன்.
இருந்தாலும் கூட, நம்மை ‘யுனிவர்சல்’லாகக் கொண்டு செல்ல மற்ற மொழிப் படங்களும் பண்ணுவது பெஸ்ட். அதனால் ரீமேக் பண்ணுவதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. நேரடியாகப் படம் பண்ணத் தயாராக இருந்தேன்.
‘16 வயதினிலே’ படம் பண்ணும்போது, அந்த டாக்டர் கேரக்டருக்கு சரத்பாபுவைத்தான் நடிக்கவைப்பதாக இருந்தேன். அதற்குப் பிறகு புதுமுகத்தைப் போட்டேன். சரத்பாபுவுக்கும் என்னுடன் பணிபுரிய ஆசை இருந்தது. அது எங்கே பலித்ததென்றால்... தெலுங்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நிறைவேறியது. தமிழில் தியாகராஜன் செய்திருப்பார். தியாகராஜனையும் நான் தான் அறிமுகப்படுத்தினேன். அந்தக் கேரக்டரை தெலுங்கில் சரத்பாபு செய்திருந்தார்.
ரொம்பப் பிரமாதமாக நடித்திருந்தார். நீண்டகாலத்துக்குப் பிறகு, நானும் சரத்பாபுவும் இணைந்து பணியாற்றினோம். அது பெரிய விருதுகளையெல்லாம் வாங்கிய படம். அதுமட்டுமல்ல... தமிழில் சில்க் ஸ்மிதா பண்ணிய கேரக்டரை தெலுங்கிலும் அவரே செய்தார். தமிழில் அவரை வேலை வாங்குவதுதான் கஷ்டமாக இருந்தது. தெலுங்கில் அப்படியில்லை. எளிதாக நடித்தார்.
அப்போது, தெலுங்கில் சில்க் ஸ்மிதா என்றால் செக்ஸி கேர்ள் என்று ஒரு இமேஜ் இருந்தது. அதையெல்லாம் உடைத்து, அவர் பிரமாதமான ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபித்தேன். ’பரவாயில்லியே... சில்க் ஸ்மிதாவையே மாத்திட்டீங்களே’ என்று என்னிடம் சொன்னார்கள்.
அற்புதமான பெண் சில்க் ஸ்மிதா. சினிமா உலகத்தில் சிலரின் இழப்பு, மறைவு மிகவும் வருத்தப்பட வைக்கும். சில்க் ஸ்மிதா மறைவு என்னை ரொம்பவே பாதித்தது. சினிமாவில் பார்க்கிற சில்க் ஸ்மிதா வேறு. நிஜத்தில் உள்ளவர் வேறு. சினிமாவில் செக்ஸியான பெண்ணாகத்தான் பார்ப்பீர்கள். ஆனால் சில்ஸ் ஸ்மிதாவைப் போல் ஒரு நல்ல பெண்ணைப் பார்க்கவே முடியாது.
எதிலும் நேர்த்தியானவர். ரசனை மிக்கவர். ஒரு புடவை வாங்கினாலும் பை வாங்கினாலும் அதில் ஒரு ரசனை இருக்கும். ஒரு நடிகை என்பதைக் காட்டிலும் சில்க் ஸ்மிதா ஒரு நல்ல பெண்மணி. வெளியுலகத்துக்கு எப்படியோ... பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்... அவர் நைஸ் கேர்ள் என்று!
தமிழில் ஆறேழு நேஷனல் அவார்டு வாங்கியிருக்கிறேன். தெலுங்கில் முதல் நேஷனல் அவார்டு, ’சீதக்கோக சில்லக்கா’வுக்கு கிடைத்தது. அதேபோல, ஆந்திராவில் பெரிதாகப் பேசப்படும் நந்தி விருது கிடைத்தது.
இன்றைக்கும் ஆந்திராவில் நான் எங்கே போனாலும் தமிழ்நாடு போலவே என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். சில ரிமோட் கிராமங்களுக்குப் போனாலும் கூட, என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். அதற்குக் காரணம் இந்தப் படம்தான்! எல்லா ஆடியன்ஸுக்கும் போய் ரீச் ஆச்சு.
அந்த தயாரிப்பாளர் ஏடித.நாகேஸ்வர ராவுக்கு நன்றி சொல்லவேண்டும்.’’
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago