தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கள்ள ஓட்டு: மாவட்டப் பதிவாளரைச் சந்தித்து டி.ஆர். புகார்

By செய்திப்பிரிவு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, மாவட்டப் பதிவாளரைச் சந்தித்து மனுவொன்றை அளித்துள்ளார் டி.ராஜேந்தர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணி வெற்றி பெற்றுள்ளது. டி.ஆர். அணி சார்பில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றுள்ளார். தனது தோல்வி குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார் டி.ஆர்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 27) டி.ராஜேந்தர், தனது அணியினருடன் மாவட்டப் பதிவாளரைச் சந்தித்து மனுவொன்றை அளித்துள்ளார்.

அதில் டி.ஆர். கூறியிருப்பதாவது:

"நான் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன். இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுள்ள 1,303 உறுப்பினர்களில் 1,050 உறுப்பினர்கள் வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலைச் சரி பார்த்தபோது 400க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என்பது தெரியவருகிறது.

கடந்த மார்ச் மாதம் நமது சங்கத்திலிருந்து வெளிவந்த அறிக்கையில் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவைக் கட்டவில்லை எனவும், கட்டத் தவறினால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறிப்பிட்ட சிலர் 200க்கும் அதிகமான அடையாளம் தெரியாத தொடர்புகொள்ள முடியாத உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஆண்டு சந்தாவைச் செலுத்தி, அவர்களின் அடையாள அட்டையைப் பெற்று அதன் மூலம் கள்ள ஓட்டுகள் போட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இதுகுறித்து எனது அணியினர் என்னிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து, என் அணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குத் தெரியப்படுத்துவது எனது கடமையாகும். எனவே, தாங்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை எனக்குக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

* வாக்களித்த 1,050 உறுப்பினர்களின் முகவரி, அலைபேசி எண் அடங்கிய பட்டியல்.

* ஒவ்வொரு மணி நேரத்திற்குப் பதிவானதாக தாங்கள் அறிவித்த வாக்குகளின் விவரம்.

* வாக்களித்த உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற நீதியரசர் ஜெயச்சந்திரனின் கையொப்பமிட்ட அடையாள அட்டையை பெற்றுக்கொண்டபோது சம்பந்தப்பட்ட உறுப்பினர் கையொப்பமிட்ட ரிஜிஸ்டரின் நகல்.

* வாக்களிப்பதற்கு முன் வாக்குச்சீட்டுகளைப் பெறும்போது உறுப்பினர் கையொப்பமிட்ட ரிஜஸ்டரின் நகல்.

இந்த ஆவணங்களைத் தர வேண்டும்.”

இவ்வாறு டி.ஆர். தெரிவித்துள்ளார்.

டி.ஆர். அணியினருடன் துணைத் தலைவருக்குப் போட்டியிட்ட சிங்காரவேலன், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஜே.சதீஷ் குமார் ஆகியோரும் உடனிருந்தனர். மனு அளித்துவிட்டு வெளியே நின்ற பத்திரிகையாளர்களிடம் எதிரணியினர் மீது மறைமுகமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE