’கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு 20 ரூபாய் கொடுத்து என்னை சென்னைக்கு அனுப்பி வைத்த நண்பனை ‘காதல் ஓவியம்’ படத்தின் தயாரிப்பாளர் என்று டைட்டிலில் போட்டேன்’ என்று இயக்குநர் பாரதிராஜா தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் பாரதிராஜா ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணைய தள சேனலில், தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அதில் பாரதிராஜா தெரிவித்திருப்பதாவது:
‘சீதாக்கோக செல்லக்கா’ தெலுங்குப் படம் முடித்தேன். அடுத்து தமிழ்ப்படம் பண்ணவேண்டும். அந்த சமயத்தில் என் நண்பன் கதாசிரியர் கலைமணி, பேச்சுவாக்கி இரண்டு லைன் சொன்னார்... ’காசுக்காக பாடுறவன் இல்ல. நான் கடவுளுக்காகப் பாடுறவன்’.
ஒரு சின்னக் கதையும் சொன்னார். கிளாஸிக்கலான கதை. ஒரு பாடகர். ஒரு நாட்டியக்காரி. பொயடிக்கா இருந்தது. வித்தியாசமா எடுக்கவேண்டும் எடுக்கவேண்டும் என்று சொன்னேனே... இதை எடுத்தால் என்ன தோன்றியது. அந்தப் படத்திற்கு என்ன பெயர் வைப்பது? ‘காதல் ஓவியம்’ என்று முடிவு செய்தேன்.
இந்தக் கதையைச் சொன்னதும் இளையராஜாவுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ’சொல்லுய்யா... இந்தப் படத்துல அருமையா பாட்டு போட்டுடலாம்’ என்று இளையராஜா சொன்னான். படத்தில் எங்கெல்லாம் பாட்டு வைக்கலாம் என்றும் சொன்னான். எல்லாப் பாடல்களும் பிரமாதப்படுத்தினான் இளையராஜா.
கதை விவாதத்திற்காக, நான், கலைமணி, சித்ரா லட்சுமணன், இன்னும் சில உதவி இயக்குநர்கள் எல்லோரும் பெங்களூரு சென்றோம். மூன்று நாள் இருந்துவிட்டு, பிறகு சென்னைக்கு வந்தோம். இப்போது மாதிரி டிராபிக்கெல்லாம் இருக்காது. கோலார் பகுதியைக் கடந்து வந்துகொண்டிருந்தோம்.
எதிரில் ஒரு கும்பல். தலையில் துண்டு கட்டிக்கொண்டு, வேட்டி கட்டிக்கொண்டு வண்டியை நிறுத்துகிறார்கள். ஏதோ தவறாக இருக்கிறதே என்று யோசித்தோம். ‘வண்டியை நிறுத்தாதே. ஓட்டு’ என்றேன். பொள்ளாச்சி டிரைவர். வண்டியை ஒரு அழுத்து வேகமாக்கினார். அந்த கும்பல், பெரிய பாறாங்கல்லை தூக்கி காரில் போட்டது. கண்ணாடியெல்லாம் உடைந்து, எங்களுக்கு அடி. கையில் தோளிலெல்லாம் ரத்தம். ’வண்டியை நிறுத்தாதே’ என்றேன்.
ஒரு பத்து கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற பிறகுதான் நிறுத்தினோம். கார் கண்ணாடி உடைந்து, காயமெல்லாம் ஏற்பட்டிருந்தது. ‘என்ன சார், கதை விவாதம் பண்ணிட்டு வரோம். இப்படி நடந்துருச்சே’ என்றார்கள். ‘யோவ் என்னய்யா, இதையெல்லாம் ஒரு சென்டிமென்டா பாக்கறீங்களேய்யா’ என்றேன்.
அப்புறம் என்னடான்னா, ‘இதுக்கே பாருங்க சார். படம் சூப்பரா ஓடப்போவுது சார்’ என்றார்கள். நமக்குத் தகுந்தது மாதிரி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாமே.
அடுத்து, ஆர்ட்டிஸ்ட் செலக்ட் பண்ண வேண்டுமே. அப்போது ராதா, கனவுக்கன்னி. ’சார், நீங்க அறிமுகப்படுத்தின ராதாவையே ஹீரோயினாப் போடலாம்’ என்றார்கள்.சரி என்றேன். ராதாவும் சரியென்றார். ஹீரோ? கார்த்திக் வேண்டாம். புது ஹீரோ போடுவோம் என்றேன். பாடகருக்கான முகம் வேண்டும். எனக்கு அந்தக் கேரக்டர் மீதான கற்பனை இருந்தது.
தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, சாமா லாட்ஜ் என்று இருக்கிறது. பக்கத்தில் ஒரு டீக்கடை இருக்கிறது. அந்த இடத்துக்கு அருகில் வந்துகொண்டிருந்தபோது, அங்கே ஒருபையன் கலர் குடித்துக் கொண்டிருந்தான். வண்டியை நிறுத்தச் சொன்னேன். ‘அந்தப் பையனை ஆபீஸுக்கு கூட்டிட்டு வாய்யா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
அவனுக்கு தமிழ் தெரியவில்லை. இந்திப்பையன். எனக்கு இதெல்லாம் தெரியாது. அப்புறம் ஆபீஸ் அழைத்து வந்தார்கள். அவனிடம் பேசினேன். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றான். ஸ்டில் எடுத்தோம். ஓ.கே. என்றேன்.
முதலில் பாட்டுதான் எடுத்தோம். இன்றைக்கும் சொல்லுகிறேன். மிகச்சிறந்த ஆர்ட்டிஸ்ட் அவன். ஒரே படத்துடன் ஓடிப்போய்விட்டான். நடிக்கவே இல்லை. ’வீட்டுக்குப் போய் நடிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துரு’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன். யாருடனும் பேசமாட்டான். அமைதியாக இருப்பான். நடிப்பைத் தவிர வேறு எந்த கவனமும் இருக்காது. எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் எழுதிவைத்துக்கொண்டு வாயசைத்தான். இன்றைக்கு பார்த்தீர்கள் என்றாலும், பாடல்கள் அனைத்தும் அவனே பாடுவது போலவே இருக்கும்.
தயாரிப்பு என்று எப்போதுமே மனோஜ் கிரியேஷன்ஸ் என்று போடுவேன். என்னுடைய தம்பி ஜெயராஜ், என்னுடைய நண்பன் எஸ்.பி.சிகாமணி இருவர் பெயரையும் போட்டேன். நான் சென்னைக்கு வருவதற்கு மூலகாரணமாக இருந்தவர் சிகாமணி. என்னை மாப்ளே மாப்ளே என்றுதான் கூப்பிடுவார்.
அவருடைய அப்பா லாரி ஆபீஸ் வைத்திருந்தார். கஷ்டகாலத்தில் நான் சென்றிருந்த போது, இவர் சட்டைப்பையில் 20 ரூபாயை மடித்து என்னை சென்னைக்கு அனுப்பிவைத்தார். பிறகு, நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு, அவரை சென்னைக்கு வரச்சொல்லி, என் தயாரிப்பு நிர்வாகியாக வைத்துக்கொண்டேன்.
’நிழல்கள்’ படத்தில், சந்திரசேகர் கம்போஸ் செய்ய தயாரிப்பாளராக இவர் நடித்திருப்பார். அன்பானவன். என் உயிருக்கு உயிரானவன். அவனுடைய சிறு உதவியில் வளர்ந்த ஆள் நான்.
என்னுடைய தம்பி ஜெயராஜ், கணக்கு வழக்குகளில் தெளிவாக இருப்பான். எனக்கு இதெல்லாம் புரியாது. ‘காதல் ஓவியம்’ படத்தின் தயாரிப்பு என்று தம்பியையும் நண்பனையும் டைட்டிலில் போட்டேன்’
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago