‘ஜெமினி மாமா என் வாழ்வின் பொக்கிஷம். அவரிடம் பாராட்டு வாங்கியிருக்கிறேன். திட்டு வாங்கியிருக்கிறேன். நானும் திட்டியிருக்கிறேன். மன்னிப்பு கேட்டிருக்கிறேன்’ என்று ஜெமினி கணேசன் 100வது பிறந்தநாளையொட்டி, அவருடனான நினைவுகளை கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார்.
நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்தநாளையொட்டி அவரின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ், இணையதள சேனலில் ஜெமினி கணேசன் குறித்து பிரபலங்கள் சொல்லும் பதிவுகளை அனுபவங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் கமல்ஹாசன் தெரிவித்ததாவது:
நடிகர் ஜெமினி கணேசன் அவர்களைப் பற்றி சொல்லும் போது, இந்த விஷயத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது மிகப்பெரிய யோசனையாக இருக்கிறது. அப்படியொரு பெரிய தொடர்பு உண்டு எங்களுக்குள்.
» மக்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரு சவால்தான்: வெற்றிமாறன் பேச்சு
இதில் உண்மை என்னவென்றால், நான் சந்தித்த முதல் சினிமா நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள்தான். எனக்கு மூன்றரை வயது இருக்கும் போது, அவர் ஒரு சினிமா நடிகர் என்று என்னிடம் சொல்லிக் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆனால் அவர் என்னைப் பார்த்ததுமே தூக்கிக் கொஞ்சினார். ஜெமினி கணேசன் எனும் நடிகரை நாம் இன்னும் பார்க்கவில்லை. இவர் வேறு யாரோ என்று நான் நினைத்துக்கொண்டேன். அப்போது சாவித்திரியம்மா ஓடிவந்து, ‘இது யாரு?’ என்று என்னைக் கொஞ்சியதும், இதையெல்லாம் பார்த்துவிட்டு பத்திரிகைக்காரர்கள் வந்து புகைப்படம் எடுத்ததும் நினைவில் இருக்கிறது.
ஏவிஎம் ஸ்டூடியோவிற்குப் பின்னால் இருக்கும் மாங்கொல்லையில் இது நடந்தது. என் முதல் ஸ்டூடியோ பிரவேசமும் முதல் நடிகர் சந்திப்பும் ஜெமினி மாமாவுடன் தான். அவரை ஜெமினி மாமா என்றுதான் அழைப்பேன். அவர் இறக்கும் வரை அப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தேன். ’நான் உங்களை எப்படிக் கூப்பிடணும்?’ என்று அவரிடம் நான் கேட்டதற்கு, அவர் ‘இப்படிக் கூப்பிடு’ என்று சொன்னார். அதன்படிதான் ஜெமினி மாமா என்று அவரை அழைத்தேன்.
ரொம்ப சந்தோஷமான இளைஞராகத்தான் அவர் எனக்கு நினைவில் இருக்கிறார். யதார்த்தமாக என்னுடன் விளையாடிக்கொண்டே, பல விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் ஜெமினி மாமா. ’டை’ கட்டத் தெரிந்த நடிகர்கள் மிகவும் குறைவு. நான் இன்றைக்கு ‘டை’ கட்டுகிறேன் என்றால் அதற்குக் காரணம் ஜெமினி மாமாதான். வேட்டி கட்டக் கூட அவர்தான் கற்றுக் கொடுத்தார் எனக்கு!
சேரில் அவர் உட்காருவதே வித்தியாசமாக இருக்கும். கைப்பிடி உள்ள நாற்காலியோ கைப்பிடி இல்லாத நாற்காலியோ அதை அப்படியே திருப்பிப் போட்டு, அதன் மேல் கைவைத்துக்கொண்டு உட்காருவார். அப்படி உட்காருகிற செளகர்யம் பின்னால்தான் எனக்குத் தெரிந்தது. நிறைய நேரம் உட்கார்ந்து பேசமுடியும். ஆனால் சினிமா பார்க்கமுடியாது. ஆரம்பத்தில் அப்படி உட்காரும் பழக்கம் எனக்கும் வந்தது. பிறகு உட்காருவதில்லை. ‘என்ன நாற்காலியைத் திருப்பிப் போட்டு உக்கார்றே. பெரிய ஜெமினி கணேசன்னு நினைப்பா?’ என்று கேட்டார்கள்.
குழந்தை நட்சத்திரமாக இருந்ததற்குப் பிறகு மீண்டும் இவர்களையெல்லாம் சந்திக்க முடியுமா எனும் நிலை இருந்தது. மறுபடியும் பாதசாரியானேன். அப்போதெல்லாம் ‘நமக்கு அவரைத் தெரியுமே. போனால் பார்ப்பார்களா, மதிப்பார்களா’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் ‘அன்னை வேளாங்கன்னி’யில் துணை இயக்குநராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, தேடி வந்து என்னிடம் ‘நீதானே அது’ என்று கேட்டு என்னுடன் பேசினார். நட்சத்திர அந்தஸ்து போய்விட்ட நடிகர்கள், சான்ஸ் இல்லாமல் இருக்கும் நடிகர்கள் ரொம்பவே சங்கோஜப்படுவார்கள். ஆனால் ஜெமினி மாமா, நட்சத்திரமாக இருந்த போதும், படம் இல்லாமல் இருந்த போதும் திரும்பவும் படங்கள் வந்த போதும் எல்லாவற்றையும் ஒரே நிலையில் ஏற்றுக் கொண்டவர். ரொம்ப ஆச்சரியமாக இருக்கும் எனக்கு.
1970 அல்லது 71ம் ஆண்டாக இருக்கும். ‘இங்கே என்ன பண்ணிட்டிருக்கே’ என்று கேட்டார். ‘அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கேன்’ என்றேன். ’இதுக்காடா நீ வந்தே?’ என்று சொல்லிவிட்டு, உடனே என்னை காரில் கூட்டிக் கொண்டு பக்கத்து ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே வேறொரு இயக்குநருக்கு அறிமுகப்படுத்தினார். ’இந்தப் பையன் நடிக்கணும்’ என்றார். உடனே அவர், ‘இந்தப் பையன் நடிக்கணும்னு ஆசைப்படுறானா?’ என்று கேட்டார். ‘இல்ல நான் ஆசைப்படுறேன்’ என்ற ஜெமினி மாமாவை மறக்கமுடியாது. அப்படி என்னை அழைத்துக் கொண்டு அறிமுகப்படுத்தினாரே... அந்த இயக்குநர்... கே.பாலசந்தர் அவர்கள்.
வாஹினி ஸ்டூடியோவில் பாலசந்தர் சார் படமெடுத்துக் கொண்டிருந்த போது என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் கே.பி. அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. நான் காரணம் அல்ல என்றாலும் எனக்குள் பெரிய பதட்டம். ‘என்னடா இது, வேலை கேட்டுப் போன நேரத்தில், இப்படி ஆகிவிட்டதே’ என்று! பிழைக்க மாட்டார் என்று வதந்திகள் வந்தன. ஆனால் பிழைத்து வந்தார். நானும் பிழைத்தேன். இதுதான் ஆரம்பக் கதை.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நட்சத்திர அந்தஸ்து கிடைத்துக் கொண்டிருந்தது எனக்கு. ஆனாலும் அதே ‘களத்தூர் கண்ணம்மா’ கமல்தான் அவருக்கு. எங்கே பார்த்தாலும் என்னைத் தேடி வந்து பேசுவார். எனக்குப் பேர் வைத்திருந்தார். மிகப்பெரிய படிப்பாளி. நான் செய்தது அவருக்குப் பிடிக்கவில்லையென்றால், ‘போடா... போப்பாகாட்டிக் பெட்டலிக்ஜிம்’ என்பார். இது ஏதோ கெட்டவார்த்தை போல் இருக்கிறது. திட்டுகிறார் என்று நினைத்தேன். அமெரிக்க இலக்கியத்தில், அமெரிக்க நேட்டிவ் வார்த்தைகளில் இதுவும் உண்டு என்று பின்னர்தான் தெரிந்தது.
பிறகு ‘அவ்வை சண்முகி’யில் அவருடன் நடித்தது வரை எவ்வளவு நீண்ட பயணம் எங்களுடையது? நாகேஷ் நிரந்தர இளைஞர், ஜெமினி மாமா மாதிரியே. ‘அவ்வை சண்முகி’ படப்பிடிப்பின் போது, ’ஹை நாகேஷ்’ என்பார்கள் சுற்றி நின்று பார்ப்பவர்கள். உடனே நான் அதட்டப்போவேன். நாகேஷ் சார் என் கையைப் பிடித்து ‘வுடு, அவனே வயசைக் குறைச்சிட்டான் எனக்கு. நீ எதுக்கு?’ என்பார்.
ஜெமினி மாமா அவர்களும் நாகேஷ் அவர்களும் ‘வாடா போடா’ என்று பேசிக்கொள்வார்கள். எனக்கு ஒருமாதிரியாக இருக்கும். ‘என்ன.. இப்படியெல்லாம் திட்டிக்கொள்கிறார்கள்’ என்று! அப்படி ஸ்கூல் பாய்ஸ் மாதிரி பேசிக்கொள்வார்கள். ’நீ நடிக்கிறியா. தெரிஞ்சிருந்தா நான் வந்துருக்க மாட்டேன்’ என்று நாகேஷ் சார் கிண்டல் செய்வார். உடனே ஜெமினி மாமா, ‘நீ நடிக்கறது தெரிஞ்சிருந்தா, நான் ஒத்துக்கிட்டிருக்கவே மாட்டேன்’ என்று சொல்லுவார். இப்படி இளமை மாறாமல் இருவரும் ஜாலியாகப் பேசிக் கொள்வார்கள்.
‘உன்னால் முடியும் தம்பி’ மாதிரி பல படங்கள். மறக்கவே முடியாது. நீண்ட நேரம் நின்று நடிப்பதால் கால் வலிக்கும். அந்த வலி போவதற்கு ஒரு யோகா சொல்லித்தந்தார் எனக்கு. மிகப்பெரிய யோகா மாஸ்டர் அவர். தமிழ் இலக்கியம் தெரியும் அவருக்கு. ஆங்கிலம் பேசுவார். சம்ஸ்க்ருதம் தெரியும்.
ஜெமினி மாமாவால் எனக்கு நிகழ்ந்த நன்மைகள் பல உண்டு. தீமைகளும் உண்டு. ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில், ஐந்தடி ஆறடி உயரத்தில் இருந்து டூப் போடாமல் குதிரை மீது குதித்து உட்காருவார் ஜெமினி மாமா. இதைப் பார்த்துவிட்டு, ஐந்தடி உயரத்தில் இருந்து நான் சைக்கிளில் உட்காருவதற்கு குதித்து, இரண்டு மூன்று வாரங்கள் வேதனையுடன், வலியுடன் இருந்தேன்.
நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது... நகைச்சுவை. எப்போதும் சந்தோஷமாக இருப்பதை கற்றுக்கொண்டேன். அவர் குடும்பத்தார், அவரின் பிள்ளைகள் என எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவர் வீட்டுக்குச் செல்வேன். திடீரென்று, ‘வாடா, வண்டில ஏறு. அப்படியே போயிட்டு வரலாம்’ என்று சுற்றும் அளவுக்கு எங்களுக்குள் நட்பு இருந்தது. ஒரு டீன் ஏஜ் பையனுக்கு அப்படியொரு நட்பு கிடைத்தது ஆச்சரியமான ஒன்று.
மயிலாப்பூரில் ஒரு வீடு கட்டிக்கொண்டிருந்தேன். என்னுடைய முதல் வீடு அது. ஒருநாள் காலை... வீட்டு வேலையைப் பார்க்க போய் நின்றிருந்தேன். அப்போது என் முதுகில் யாரோ கைவைத்தார்கள். திரும்பி பார்த்தால்... ஜெமினி மாமா. ’என்னடா... வீடு கட்றியாமே. வீட்டை காட்டுடா’ என்றார். விவரம் சொல்லி காட்டினேன். அது அவருக்கு எந்த அளவுக்குப் பெருமையாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். ‘என்னடா வீடு கட்றியாமே’ என்று அவர் கேட்ட போது அவருக்கு என்ன வயதோ.. அந்த வயது எனக்கு இப்போது!
ஜெமினி மாமா, என் வாழ்வில் கிடைத்த மாபெரும் சந்தோஷங்களில் ஒரு சந்தோஷம். வேறு எப்படியும் அவரை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அவரிடம் பாராட்டு பெற்றிருக்கிறேன். திட்டு வாங்கியிருக்கிறேன். பதிலுக்கு திட்டியிருக்கிறேன். மன்னிப்பு கேட்டிருக்கிறேன். இது அற்புதமான உறவு.
என் அண்ணன்களிடம் இருந்த உறவு போல் ஜெமினி மாமாவிடம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், டி.சீனிவாசன் என்ற என் தந்தையார் நண்பனாகத்தான் என்னிடம் பழகினார். அப்படியொரு நண்பர்தான் ஜெமினி மாமா.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago