முதல் பார்வை: பிஸ்கோத்

By செய்திப்பிரிவு

அப்பாவின் ஆசையை மகன் நிறைவேற்றினானா என்பதுதான் 'பிஸ்கோத்'.

நரேன் - ஆனந்த்ராஜ் இருவரும் இணைந்து பிஸ்கட் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார்கள். தனது மகன் சந்தானம் என்றைக்காவது ஒரு நாள் தன் பிஸ்கட் நிறுவனத்துக்கு மேலாளராக வருவார் என்ற கனவுடனே இறந்துவிடுகிறார் நரேன். பிஸ்கட் நிறுவனத்தை ஆனந்த்ராஜ் நடத்த, அதில் சந்தானம் பணிபுரிந்து வருகிறார்.

மேலும், முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் உதவி புரிந்து வருகிறார் சந்தானம். அங்கு இருக்கும் செளகார் ஜானகி சந்தானத்திடம் கூறும் கதைகள் அனைத்துமே, அவருடைய வாழ்க்கையில் நிஜமாக நடக்கத் தொடங்குகின்றன. ஆகையால், தொடர்ந்து செளகார் ஜானகியை கதை சொல்லச் சொல்லி வற்புறுத்துகிறார் சந்தானம். அவர் கூறும் கதைகளால் சந்தானத்தின் வாழ்க்கை நல்லபடியாக மாறுகிறதா, இல்லையா என்பதுதான் திரைக்கதை.

'பெட்டைம் ஸ்டோரீஸ்' ஹாலிவுட் படத்தைத் தமிழுக்கு ஏற்றவாறு அப்படியே மாற்றிக் கொடுத்துள்ளார் இயக்குநர் கண்ணன். ஆனால், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதியிலிருந்த சின்ன சின்ன சுவாரசியம், இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை. திரைக்கதையை இன்னும் சுவாரசியப்படுத்தி இருந்தால் கண்டிப்பாக இன்னும் கொண்டாடி இருக்கலாம்.

நாயகனாக சந்தானம் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளார். தனக்கான உரித்தான கவுண்ட்டர்களால் படத்தைத் தொய்வடையாமல் காப்பாற்றி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், மனோகர் ஆகியோருடன் இவர் அடிக்கும் பல கவுண்ட்டர்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.

இது செளகார் ஜானகியின் 400-வது படம். சந்தானத்துக்கு கதை சொல்வதுதான் இவருடைய வேலை. அதிலுமே தனது சின்ன சின்ன முகபாவத்தால் ஈர்க்கிறார். ஆனந்த்ராஜ், தாரா அலிசா, சிவசங்கர் மாஸ்டர் எனப் பலர் நடித்துள்ளனர். இதில் ஆனந்த்ராஜ் மட்டுமே ஒரு சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். நாயகிகளுக்கு எல்லாம் பெரிய வேலையே இல்லை.

'பாகுபலி', '300' படங்களின் ஸ்பூஃப் காட்சிகள், பிஸ்கட் நிறுவனம், முதியோர் இல்லம் எனக் காட்சிகளுக்குத் தேவையானதைக் கச்சிதமாகக் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம். பாடல்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை. ரதனின் பின்னணி இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை.

பாட்டி கூறும் கதையை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளனர். அதில் 'பாகுபலி', '300' உள்ளிட்ட படங்களின் காட்சிகளுக்காக கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. படத்தைக் குறைந்த செலவில் முடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் ரொம்பவே மெனக்கெட்டு இருப்பது, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அப்பட்டமாகத் தெரிகிறது.

முதல் பாதி வெறும் 45 நிமிடங்கள்தான் என்பதால் உடனே முடிந்துவிடுகிறது. சூப்பர் என்று இரண்டாம் பாதியில் அமர்ந்தால் படத்தின் கதை எங்கெங்கோ சென்று இறுதியில் சுபம் போட்டு முடிக்கிறார்கள். சின்ன கதைதான் என்றாலும், அதில் 'பாகுபலி', '300' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை ஸ்பூஃப் செய்ய முயன்றிருக்கிறார்கள். எந்தவொரு காட்சியிலுமே அழுத்தம் இல்லாமல் ரொம்பவே மேம்போக்காகச் சொல்லியிருப்பதால் எதுவுமே மனதில் ஒட்டவில்லை.

சந்தானத்தின் கவுண்ட்டர் பிரியர்கள் ஒரு சில இடங்களில் மட்டும் சிரிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 'பிஸ்கோத்'தில் சர்க்கரை அளவு ரொம்ப ரொம்பக் குறைவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE